இரசினிகாந்து

நடிகர்

சிவாசி ராவ் கெயிக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாசிராவ் காயகவாடு) என்பவர் இரசினிகாந்து[1] (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய நேயர்கள் (இரசிகர்கள்) இவரைத் தலைவர் என்றும் "சூப்பர் சுடார்" என்றும் அழைக்கின்றனர்.

இரசினிகாந்து

எம்.சி.ஆர். சிலை திறப்பு விழாவில் இரசினிகாந்து
இயற் பெயர்சிவாசி ராவ் கெயிக்வாட்
பிறப்புதிசம்பர் 12, 1950 (1950-12-12) (அகவை 73)
இந்தியா பெங்களூரு, கருநாடகம், இந்தியா
நடிப்புக் காலம்1975-தற்போது வரை
துணைவர்இலதா இரசினிகாந்து
பிள்ளைகள்சௌந்தரியா
ஐசுவரியா
மூத்த தமிழ்த் திரைப்படக் கலைஞர் கலைஞானத்தைப் பாராட்டும் விழாவில் பங்கேற்ற இரசினிகாந்து, ஆகத்து 2019

2007 ஆம் ஆண்டில் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாசி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இதன்மூலம் ஆசியாவிலேயே நடிகர் சாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார்.[3]

இரசினிகாந்து ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆன்மீகவாதியாகவும், திராவிட அரசியல்களில் ஆளுமையாகவும் இருந்துவருகிறார்.

2004 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது.[4] இந்தியத் திரைப்படத்துறையின் சிறந்த ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த நடிகருக்கான தாதாசாகெப் பால்கே விருது இரசினிகாந்திற்கு வழங்கப்படுவதாக 1 ஏப்ரல் 2021 அன்று அறிவிக்கப்பட்டது.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

பிறப்பு

இரசினிகாந்து திசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு பெங்களூர், மைசூர் (தற்போது கருநாடகம்) இந்தியாவில் பிறந்தார்.[6][7] ராமோசி ராவ் காயக்வாடுக்கும் (கிருட்டிணகிரி அருகே உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்), ரமாபாய்க்கும் (கோவை எல்லையில் பிறந்தவர்)[8] நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர்.[6]தாய் குடும்பத் தலைவியாக இருந்தார். இவரின் இயற்பெயர் சிவாசி இராவ் கைக்வாடு ஆகும். மராட்டியப் பேரரசர் சிவாசி பேரரசரின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. வீட்டில் மராத்திய மொழியும் வெளியில் கன்னடமும் பேசி வளர்ந்தார். இரசினிகாந்தின் முன்னோர்கள் மகாராட்டிரம் மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள மாவதி கடெபதாரிலும் தமிழ்நாடு, கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குப்பத்திலும் வாழ்ந்தனர்.[9][10] இவருக்கு சத்ய நாராயண ராவ், நாகேசுவர ராவ் எனும் இரு மூத்த சகோதரர்களும், அசுவத் பாலுபாய் எனும் மூத்த சகோதரியும் உள்ளனர்.[11] 1956 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் இவரது குடும்பம் பெங்களூர் சென்று அனுமானந்தா நகரில் வீடு கட்டி குடியேறினர். ஒண்பது வயதாக இருக்கும் போது தனது தாயை இழந்தார்.[12] பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட இரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.[13]

நடத்துனராக

ஆரம்பகாலத்தில் சிவாசி அலுவலக உதவியாளராகவும், தச்சராகவும் வேலை பார்த்தார். ஓர் இடத்தில் மூட்டை தூக்கும் வேலை பார்த்தார். இதற்கு சம்பளமாக ஒரு மூட்டைக்கு 10 பைசா கொடுக்கப்பட்டது. பின்னர் பெங்களூர் போக்குவரத்து சேவைத் தேர்வு எழுதி நடத்துனருக்கான உரிமம் பெற்றார். 19 மார்ச் 1970 அன்று ஓட்டுநர் ராச பகதூருடன் பணியில் சேர்ந்தார். இவர்களது பணி நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகும். பணி முடிந்த பிறகு மாலையில் அனுமந்த நகரில் இராச பகதூர் வீட்டிற்கு சிவாசி செல்வார். பெங்களூர் போக்குவரத்து சேவையால் நடத்தப்படும் நாடகங்களுக்கு இருவரும் ஒத்திகை பார்ப்பர். ஒத்திகை சாம்ராசபேட்டை காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள மண்டபத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 வரை நடக்கும். எப்போதும் திரைப்படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பர். ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் பார்ப்பர். சிவாசிக்கு சிவாசி கணேசன், இராச்சுகுமார் மற்றும் எம்.சி.ஆர். நடித்த படங்கள் பிடிக்கும். அப்படக் காட்சிகளில் அவர்களைப் போல் சிவாசி நடித்துக் காண்பிப்பார். அப்போது 25க்கும் மேற்பட்ட நாடகங்களில் சிவாசி நடித்து இருந்தார். அப்போது இவருடன் இருந்த நண்பர்கள், நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இவர் ஏன் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று கூறினர். சிவாசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் யாரிடமும் உதவி கேட்பதையும் விரும்பியதில்லை. அவர் உருவத்தில் அழகானவரும் கிடையாது. அவருக்குப் பின்புலமும் எதுவும் கிடையாது. நான் நடத்துனர் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டால் யாராவது வாய்ப்புக் கொடுப்பார்களா என்ற எண்ணம் மனதில் ஓடியது. பகதூரும் சிவாசியின் மற்ற நண்பர்களும் அந்நேரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேருமாறு அவரை அறிவுறுத்தினர். ஒருவேளை திரைப்படத்துறையில் சேர முடியாவிட்டால் தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசாங்க நடத்துனர் பணியை விடுவதற்கு சிவாசிக்கு விருப்பம் இல்லை. எனவே பணியிலிருந்து சாதாரண விடுப்பும் பின்னர் அங்கீகரிக்கப்படாத விடுப்பும் எடுத்தார். கே. பாலசந்தர் தன்னுடைய மேசர் சந்திரகாந்த் படத்தில் ஏ.வி.எம். இராசனின் கதாபாத்திரப் பெயரான இரசினிகாந்தை இவருக்குச் சூட்டினார். இப்பெயருக்கு 'இரவின் நிறம்' என்று பொருள்.[14]

குடும்பம்

16 பெப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, சௌந்தர்யா இரசினிகாந்து ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அசுவின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார். தற்பொழுது இவர்களுக்கு இடையே மணமுறிவு ஏற்பட்டது.[15]

பார்வைகள்

இரசினிகாந்து ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர்.[16] இவர் தியானமும் செய்யக்கூடியவர்.[17] இவர் எப்போதாவது இமயமலைக்கு யாத்திரை செல்கிறார்.[18] இவர் இராமகிருட்டிண பரமகம்சா,[19] சுவாமி சச்சிதானந்தா, இராகவேந்திரா சுவாமி,[20] மகாவதார் பாபாஜி,[21] மற்றும் இரமண மகரிசி[19] ஆகியோரை தன் விருப்பமான ஆன்மீகத் தலைவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.

அறப்பணி

நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் விஜயுடன் ரஜினிகாந்த்

இரசினிகாந்து: த டெஃபனிட்டிவ் பயோக்ராபி, புத்தகத்தை எழுதிய நாமன் ராமச்சந்திரனின் கூற்றுப்படி ரஜினிகாந்தின் பெரும்பாலான மனிதநேய நடவடிக்கைகள் வெளியிடப்படுவதில்லை. ஏனென்றால் அவர் அதை வெளியிட விரும்புவதில்லை. 1980 களில், மூடநம்பிக்கைகள் பெரும்பான்மையான மக்களை கண்களை நன்கொடை செய்வதிலிருந்து தடுத்தபோது, இரசினிகாந்து தன் கண்களைத் தானம் செய்தார். தொலைக்காட்சி மற்றும் பொது இடப் பேச்சுகளால் கண் தானத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.[22] 2011 இல், காந்தியவாதி அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கான அவரது ஆதரவை இரசினிகாந்து அறிவித்தார். சென்னையிலுள்ள அவரது இராகவேந்திரா கல்யாண மண்டபத்தை ஊழலுக்கு எதிரான இந்தியா உறுப்பினர்களுக்கு அவர்கள் உண்ணாவிரதம் இருக்க இலவசமாக வழங்கினார்.[23][24] ரஜினிகாந்தின் ரசிகர்கள் அடிக்கடி இரத்த தானம் மற்றும் கண் தான முகாம்களை நடத்துகின்றனர், மற்றும் அவரது பிறந்த நாளில் அன்னதானம் செய்கின்றனர்.[25]

திரைப்படத்துறை

திரைப்படங்களில்

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த இரஜினிகாந்து, தன் நண்பர் ராச பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கை (கே). பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை இரசினிகாந்து நிரூபித்தார். இரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.

1980களில் இரசினிகாந்து நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் படம் பெரு வெற்றியைப் பெற்றது.

இரசினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் இரசினிகாந்து நடித்துள்ளார்.

ரசிகர்களிடம் வரவேற்பு

ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.[26]

ஆரம்ப காலங்கள் (1975–1977)

"இரசினிகாந்து நான் அவரது பள்ளி என்று கூறுகிறார். ஆனால், நான் அறிமுகப்படுத்திய இரசினிகாந்து இவர் அல்ல என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர் தனது சொந்தத் தகுதி மற்றும் பலம் மூலம் பரிணாமம் அடைந்துள்ளார். நான் அவருக்கு ஒரு வாய்ப்பளித்தேன், அவரை உலகிற்கு வெளிப்படுத்தினேன். அவர் சென்று அதை வெற்றி கொண்டார்."

—கே. பாலசந்தர் இரசினிகாந்தைப் பற்றி[27]

இரசினிகாந்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தமிழ் திரைப்படமான அபூர்வ ராகங்கள் (1975) மூலம் தொடங்கினார்.[28] இரசினிகாந்திற்கு ஸ்ரீவித்யாவின் கொடுமைக்கார கணவராக ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரத்தை கே. பாலச்சந்தர் கொடுத்தார்.[28][29][30] நாமன் ராமச்சந்திரனின் கூற்றுப்படி, இரசினிகாந்தின் பாண்டியன் கதாபாத்திரம் முற்றிலும் எதிர்மறையாக இல்லை. பாண்டியன் ஒரு வில்லனாக தோன்றவில்லை; உண்மையில், அவர் ஒரு துறவி போல் தோன்றுகிறார். பாண்டியன் எந்த வில்லத்தனத்தையும் செய்யவில்லை. மாறாக, பைரவி (ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரம்) பிரசன்னாவுடன் (கமல்ஹாசனின் கதாபாத்திரம்) மகிழ்ச்சியாக இருப்பதை தெரிந்துகொள்ளும் போது அவர் தானாகவே பைரவியிடம் இருந்து விலகி இருக்க ஒப்புக்கொள்கிறார். பாண்டியன் இறந்த உடனேயே நடக்கும் மூன்று விஷயங்கள் இந்தத் திரைப்படம் அவரை ஒரு வில்லனாகப் பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. முதலில், பாண்டியன் இறக்கும்போது, பொதுவாக அனுதாபத்தை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரத்தின் மரணத்திற்கு இசைக்கப்படுவது போன்ற ஒரு வகையான துக்க இசை ஒலிக்கிறது; இரண்டாவது, அவள் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு விதவையைப்போல பைரவி தன் குங்குமத்தைத் துடைக்கிறார்; மற்றும் மூன்றாவது, பாண்டியனின் இறந்த விரல்கள் ஒரு குறிப்பைப் பிடித்திருப்பதாகக் காணப்படுகிறது. அவரது கடைசி ஆசை ராகமும் மற்றும் தாளமும் இணைவதைப் பார்க்க வேண்டும் என்று அதில் உள்ளது. பாடகி பைரவி மற்றும் மிருதங்கம் வாசிக்கும் பிரசன்னா ஆகியோரின் கச்சேரி பற்றிய தெளிவான குறிப்பு. எனவே, இரசினிகாந்து ஒரு வில்லனாக அறிமுகப்படுத்தவில்லை.[31] இப்படம் வெளியானபோது சர்ச்சைக்குள்ளானது. விமர்சனரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இது அதற்கடுத்த வருடம் நடந்த 23வது தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.[32] தி இந்து பத்திரிகையின் ஒரு விமர்சனம் இவ்வாறு குறிப்பிட்டது: "புதுமுக நடிகர் இரசினிகாந்து கண்ணியமாகவும் மற்றும் ஈர்க்கும் வகையிலும் நடிக்கிறார்".[33] பின் கதா சங்கமா (ஜனவரி 1976) இவர் நடிப்பில் வெளியானது. இது புட்டன்ன கனகல் தயாரித்த ஒரு சோதனை முயற்சி ஆகும்.[34] இந்தப் படம் மூன்று சிறுகதைகளின் ஒரு இணைப்பாக இருந்தது.[35] இவரது அடுத்த படம் அந்துலேனி கதா. இது பாலசந்தரால் இயக்கப்பட்ட ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும்.[35] தனது சொந்தத் தமிழ் திரைப்படமான அவள் ஒரு தொடர் கதையை (1974) பாலசந்தர் மறு ஆக்கம் செய்தார். இரசினிகாந்து தனது திரைப்பட வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.[35] அடுத்தடுத்த படங்களில், இவர் தொடர்ச்சியான எதிர்மறையான பாத்திரங்களை தொடர்ந்தார்.[36]

1977ல், இவர் தெலுங்குப் படமான சிலகம்மா செப்பின்டியில் தனது முதல் முன்னணிப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.[37] இரசினிகாந்து எப்பொழுதும் கே. பாலச்சந்தரை தனது வழிகாட்டியாக குறிப்பிடுகின்றபோதிலும்,[38] இவரை மெருகேற்றியவர் எஸ். பி. முத்துராமன் ஆவார்.[39] முத்துராமன் முதன்முதலில் "புவனா ஒரு கேள்விக்குறியில்" (1977) சோதனை முயற்சியாக இவரை ஒரு நல்லவராக நடிக்க வைத்தார். இப்படத்தில் இரசினிகாந்து முதல் பாதியில் ஒரு தோல்வியடைந்த காதலன் ஆகவும் மற்றும் இரண்டாவது பாதியில் ஒரு கதாநாயகனாகவும் நடித்தார்.[39] இந்தத் திரைப்படத்தின் வெற்றி, 1990கள் வரை 24 திரைப்படங்களுக்கு இருவரையும் ஒன்றாக இணைத்தது.[39] அந்த வருடத்தில் பெரும்பாலான படங்களில் இரசினிகாந்து துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். அவற்றுள் சிலவற்றில் "வில்லனாக" நடித்தார்.[40] மொத்தத்தில், அந்த ஆண்டில் வெளியிடப்பட்ட 15 படங்களில் இவர் இருந்தார். இது முந்தைய வருடங்களைவிட மிக அதிகம்.[41]

பரிசோதனை முயற்சி மற்றும் திருப்புமுனை (1978–1989)

1978ல், இரசினிகாந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 20 வெவ்வேறு படங்களில் நடித்தார்.[42][43] அந்த ஆண்டில் இவரது முதல் படம் பி. மாதவனின் சங்கர் சலீம் சைமன் ஆகும். இதன்பின்னர் முன்னணி கன்னட நடிகரான விஷ்ணுவர்தனுடன் கில்லாடி கிட்டுவில் நடித்தார். இவரது அடுத்த படமான அண்ணாடாமுல சவாலில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுடன் இரண்டாவது முன்னணி நடிகராக நடித்தார். இரசினிகாந்து கன்னடப் படமான சகோதரர சவாலில் தான் நடித்த கதாபாத்திரத்திலேயே மீண்டும் இப்படத்தில் நடித்தார். இவர் பின்னர் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இது ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் என்று கூறப்பட்டது. பிறகு, இவர் முக்கிய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் தன் 25வது படமான மாத்து தப்பாடமகவில் நடித்தார். எம். பாஸ்கர் இயக்கிய பைரவி, அதே ஆண்டில் வெளியிடப்பட்டது. இதுவே இரசினிகாந்து ஒரு முக்கியக் கதாநாயகனாக நடித்த முதல் தமிழ் படமாகும்.[44][45] இந்தப் படத்தில் தான் இவர் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் பெற்றார்.[45] படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான எஸ். தாணு, இரசினிகாந்திற்கு 35 அடிக்கும் உயரமான ஒரு கட் அவுட்டை வைத்தார்.[46] இவரது அடுத்த படம் இளமை ஊஞ்சலாடுகிறது. இது சி. வி. ஸ்ரீதரால் எழுதப்பட்ட ஒரு நாற்கரக் காதல் கதை ஆகும். கமல்ஹாசன் ஏற்று நடித்த நண்பன் கதாப்பாத்திரத்திற்காக தன் காதலைத் தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் இரசினிகாந்து நடித்தார். இந்தத் திரைப்படத்தின் வெற்றி தெலுங்கில் ஸ்ரீதர் இப்படத்தை மறு ஆக்கம் செய்யும்படி தூண்டியது. அப்படம் வயசு பிலிச்சண்டி என்ற பெயரில் வெளியானது. தமிழ்ப் படத்தில் நடித்தவர்களே தெலுங்கிலும் அப்படியே நடித்தனர்.

இவரது அடுத்த படம் வணக்கத்திற்குரிய காதலியே ஆகும். முதன்முதலில் படத்தில் இவர் தோன்றுவதைக் குறிக்க அறிமுக பாடல் இப்படத்தில் இருந்துதான் ஆரம்பமானது. விரைவில் இவரது அடுத்த படங்களிலும் இந்த ஒரு பாணி பின்பற்றப்பட்டது.[45] அதே காலகட்டத்தில் வெளியான முள்ளும் மலரும் விமர்சன ரீதியாகப் பலரது பாராட்டைப் பெற்றது.[47] ஜெ. மகேந்திரன் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் திரைக்கதை கல்கி பத்திரிக்கையில் வெளியான முள்ளும் மலரும் நாவலில் இருந்து உருவானது.[45] இது இறுதியாகச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதினை வென்றது. தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளில் இரசினிகாந்துதிற்கு சிறந்த நடிகருக்கான ஒரு சிறப்பு பரிசை வென்றது.[45] இதைத் தொடர்ந்து, மலையாளச் சினிமாவில் கற்பனைத் திரைப்படமான அலாவுதீனும் அற்புத விளக்கும் மூலம் களமிறங்கினார். இது புகழ்பெற்ற அரேபிய இரவுகள் கதையை அடிப்படையாகக் கொண்டதாகும். அதே வருடத்தில், இவர் தர்மயுத்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் இவர் தன் பெற்றோரின் மரணத்திற்கு பழிவாங்கும் ஒரு மனநோயாளியாக நடித்தார். பின்னர் இவர் என். டி. ராமராவுடன் டைகர் படத்தில் நடித்தார். டைகர் முடிந்தபொழுது நான்கு ஆண்டுகளில், நான்கு மொழிகளில் 50 படங்களில் இரசினிகாந்து நடித்திருந்தார். இளமையான பொழுதுபோக்கான நினைத்தாலே இனிக்கும், தமிழ் கன்னட இருமொழிப்படமான ப்ரியா, தெலுங்குப் படமான அம்மா எவருக்கீனா அம்மா மற்றும் உணர்ச்சிமயமான ஆறிலிருந்து அறுபது வரை ஆகியவை இந்தக் காலத்தில் வெளியான வேறு சில பிரபலமான படங்கள் ஆகும். சுஜாதா ரங்கராஜனின் துப்பறியும் நாவலை அடிப்படையாகக் கொண்ட ப்ரியா இந்தியாவுக்கு வெளியே பெரும்பாலும் எடுக்கப்பட்ட இரசினிகாந்தின் முதல் படம் என்ற சிறப்பைப் பெற்றது. இப்படம் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் எடுக்கப்பட்டது.[45]

இரசினிகாந்து அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படங்களின் தமிழ் மறு ஆக்கங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்த மறு ஆக்கங்கள் பில்லா (1980), தீ (1981) மற்றும் மிஸ்டர் பாரத் (1986) ஆகியவை ஆகும்.[48]

தன் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், இரசினிகாந்து திடீரென்று நடிப்பதை விட்டு விலக முடிவெடுத்தார், ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் முடிவை மாற்றிக்கொண்டார்.[49] பில்லாவில் இரசினிகாந்து இரட்டை வேடத்தில் நடித்தார். இப்படம் வணிக நோக்கில் இரசினிகாந்தின் முதல் வெற்றிப் படமானது. ஸ்ரீதேவியுடன் இவர் இணைந்து நடிப்பது ஜானியிலும் தொடர்ந்தது. ஜானியில் இரசினிகாந்து மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்தார். பின்னர் வணிக ரீதியாக வெற்றிப் படமான முரட்டுக் காளையில் நடித்தார்.[39] பில்லாவின் வெற்றி இரசினிகாந்தின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இரசினிகாந்து அவ்வளவுதான் முடிந்து விட்டார் என்று கூறிய எதிர்ப்பாளர்களுக்கு பதில் தெரிவிக்கும் வகையில் அமைந்தது. இப்படத்திற்குப் பிறகு இரசினிகாந்து ஒரு முழுமையான ஹீரோவாகப் பார்க்கப்பட்டார்.[49]

1981ல், இவர் கன்னடம் மற்றும் மலையாளத்தில் படம்பிடிக்கப்பட்ட கர்ஜனை படத்தில் நடித்தார். இதுவே அந்த இருமொழிகளிலும் இவர் நடித்தக் கடைசிப் படமாகும். இவரது முதல் முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் தில்லு முல்லு ஆகும். இது பாலச்சந்தரால் இயக்கப்பட்டது. அந்த நேரத்தில் இரசினிகாந்து பிரபலமாகிக் கொண்டிருந்த சண்டைப்பட கதாநாயகன் என்ற அச்சை உடைக்க இவர் வணிக ரீதியான பாத்திரங்கள் தவிர மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டுமென பாலசந்தர் வலுவாகப் பரிந்துரை செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இப்படத்தில் நடிக்க இரசினிகாந்து ஒத்துக்கொண்டார்.[50] 1981ல் இவர் தீ படத்திலும் நடித்தார். இது அமிதாப்பச்சன் நடித்த இந்திப்படமான தீவார் (1975) படத்தின் மறு ஆக்கம் ஆகும். இதில் இரசினிகாந்து அமிதாப்பச்சனின் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[51] 1982ல், இவர் போக்கிரி ராஜா, மூன்று முகம், தனிக்காட்டு ராஜா, புதுக்கவிதை மற்றும் எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்களில் நடித்தார். மூன்று முகம் படத்தில் இரசினிகாந்து முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்தார்.[52]

1983 வாக்கில், தெலுங்கு மற்றும் கன்னடம் உட்பட தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் ஆனார்.[53] 1983ல், இரசினிகாந்து தன் முதல் இந்திப்படமான அந்தா கனூனில் நடித்தார். இப்படத்தில் இவர் அமிதாப்பச்சன் மற்றும் ஹேம மாலினியுடன் நடித்தார். அந்த நேரத்தில் மிக அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்றாகும்.[54] இது தமிழில் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறையின் மறு ஆக்கம் ஆகும். இவரது 1984ம் ஆண்டுப் படமான நான் மகான் அல்ல பாலச்சந்தர் தயாரிக்க முத்துராமனால் இயக்கப்பட்டது. இவர் தன் முதல் கௌரவத் தோற்றத்தில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்தார்.[55] நல்லவனுக்கு நல்லவன் படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.[56] இவர் தன் 100வது படமான ஸ்ரீ ராகவேந்திராவில் இந்துத் துறவி இராகவேந்திர சுவாமிகளாக நடித்தார்.[57]

1980களின் பிற்பாதியில், இரசினிகாந்து வணிக ரீதியான வெற்றிப் படங்களான நான் சிகப்பு மனிதன் (1985), படிக்காதவன் (1985), மிஸ்டர் பாரத் (1986), வேலைக்காரன் (1987), குரு சிஷ்யன் (1988) மற்றும் தர்மத்தின் தலைவன் (1988) ஆகியவற்றில் நடித்தார். 1988ல், இவர் தனது ஒரே அமெரிக்கத் திரைப்படமான பிளட்ஸ்டோனில் நடித்தார். இப்படத்தை டுவைட் லிட்டில் இயக்கினார். இப்படத்தில் ஆங்கிலம் பேசும் இந்திய டாக்சி ஓட்டுனராக இரசினிகாந்து நடித்தார்.[58][59] இரசினிகாந்து அந்த தசாப்தத்தின் முடிவில் ராஜாதி ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா மற்றும் மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார். இதில் ராஜா சின்ன ரோஜா திரைப்படமானது இயல்பான திரைப்படக் காட்சிகள் மற்றும் அனிமேஷன் காட்சிகளைக் கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும்.[60][61]

வணிகரீதியான நட்சத்திர அந்தஸ்து (1990–2001)

1990 வாக்கில், இரசினிகாந்து தன்னை ஒரு வணிகரீதியான நட்சத்திரமாக நிறுவினார். இந்த காலகட்டத்தில் வெளியான அனைத்து படங்களும் வணிகரீதியாக அதிக வெற்றி பெற்றன.

இவர் அந்தத் தசாப்தத்தை பணக்காரன் (1990) என்ற ஒரு வெற்றிப்படத்துடன் தொடங்கினார். இது அமிதாப்பச்சனின் லாவரிஸ் (1981) என்ற இந்திப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இவரது அடுத்த இரு படங்கள் கற்பனை நகைச்சுவைப் படமான அதிசயப் பிறவி (1990) (சிரஞ்சீவியின் யமுடிகி மொகுடு (1988) படத்தின் மறு ஆக்கம்) மற்றும் குடும்ப ட்ராமா படமான தர்மதுரை (1991) ஆகியவை ஆகும்.[62] 1991ல், இவர் மணிரத்தினத்தின் தளபதி படத்தில் நடித்தார். இது மகாபாரதத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும்.[63][64] இதில் இவர் மம்மூட்டி உடன் இணைந்து நடித்தார். இரண்டு அறியப்படாத கதாபாத்திரங்களுக்கிடையிலான நட்பைக் இத்திரைப்படம் கையாண்டது. அக்கதாபாத்திரங்கள் இரண்டும் கர்ணன் மற்றும் துரியோதனனை அடிப்படையாகக் கொண்டவையாகும்.[63] இப்படம் வெளியிடப்பட்ட போது விமர்சனரீதியான பாராட்டு மற்றும் வெற்றி ஆகிய இரண்டையுமே பெற்றது.[57] அண்ணாமலை (1992) நட்பை மையமாகக் கொண்ட மற்றொரு திரைப்படம் ஆகும். பி. வாசுவால் இயக்கப்பட்ட மன்னன் (1992) கன்னட நடிகர் ராஜ்குமாரின் அனுரக அரலிது (1986) படத்தின் மறு ஆக்கம் ஆகும். இரசினிகாந்து தன் முதல் திரைக்கதையை வள்ளி (1993) படத்திற்காக எழுதினார். இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் இவர் நடித்தார். இரசினிகாந்து வானவராயன் என்ற ஊர்த்தலைவர் கதாபாத்திரத்தில் எஜமான் படத்தில் நடித்தார். பின்னர் வெளியான இவரது வீரா (1994) அந்த ஆண்டின் அதிகமான இலாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது.[65]

இவர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாட்ஷா (1995) படத்தில் நடித்தார். இப்படம் திரைப்படத்துறையில் வசூல் சாதனை செய்தது.[66] இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகிய இருசாராராலும் ஒரு வெற்றிப்படமாகக் கருதப்படுகிறது. இந்தப் படம் அவரை மற்றொரு பிரபல நடிகர் என்ற நிலையிலிருந்து கிட்டத்தட்ட கடவுளின் அவதாரம் என்ற நிலைக்கு வெகுஜனங்களிடையே உயர்த்தியது.[67] தன் நண்பர் மோகன் பாபுவுக்காக பெத்தராயுடு படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் இரசினிகாந்து நடித்தார். அப்படத்தின் மறு ஆக்க உரிமைகளைப் பெறவும் அவருக்கு உதவினார். அதே ஆண்டில் இவர் இந்திப்படமான அதங்க் ஹி அதங்கில் அமீர் கானுடன் இணைந்து நடித்தார். இதுவே இன்றுவரை முக்கியமான கதாப்பாத்திரத்தில் இந்தியில் இரசினிகாந்து நடித்த கடைசித் திரைப்படம் ஆகும். இவர் பின் பாலசந்தர் தயாரிக்க கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து (1995) திரைப்படத்தில் நடித்தார். இது வணிகரீதியாக வெற்றி பெற்ற மற்றொரு திரைப்படம் ஆகும். இது மோகன்லாலின் வெற்றிபெற்ற மலையாளப் படமான தேன்மாவின் கொம்பதின் மறு ஆக்கம் ஆகும். சப்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுவாகும். இது சப்பானில் முத்து: ஒடோரு மகாராஜா (நடனமாடும் மகாராஜா) என்ற பெயரில் வெளியானது.[68] 1998 ஆம் ஆண்டு சப்பானில் இப்படம் சாதனை அளவாக $1.6 மில்லியன் வசூல் செய்தது. இரசினிகாந்துக்கு பெரிய அளவில் சப்பானிய ரசிகர்கள் இத்திரைப்படத்திற்குப் பின்னர் உருவாயினர்.[69] சப்பானில் முத்து திரைப்படம் பெற்ற வெற்றிக்குப் பின் அமெரிக்கச் செய்திப் பத்திரிகையான நியூஸ்வீக் ஒரு 1999ம் ஆண்டு கட்டுரையில் இவ்வாறு எழுதியது "லியோனார்டோ டிகாப்ரியோவை ஜப்பானின் மிகச்சிறந்த இதயத் துடிப்பு என்ற இடத்திலிருந்து இரசினிகாந்து நீக்கிவிட்டார்".[70] 2006ல் சப்பானுக்கு விஜயம் மேற்கொண்டபோது, அப்போதைய இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் இரு நாடுகளுக்கும் இடையேயான நேர்மறை உறவை நியாயப்படுத்தும் வகையில் ஒரு உரையில் சப்பானில்முத்து பெற்ற வெற்றியைப் பற்றிப் பேசினார்.[71] இரசினிகாந்து பாக்ய தேபடா என்ற திரைப்படம் மூலம் வங்காள சினிமாவிலும் நுழைந்தார். இத்திரைப்படம் 1995ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. 1997ன் அருணாச்சலம் மற்றொரு வணிகரீதியான வெற்றிப்படமாக இருந்தது. அந்த ஆயிரம் ஆண்டுகளில் தன் இறுதித் திரைப்படமான படையப்பாவில் (1999) இரசினிகாந்து நடித்தார். இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படக் கதாபாத்திரம் தான் நடிகர் சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த முக்கியக் கதாபாத்திரமாகும்.

போராட்டங்கள், எழுச்சி மற்றும் பாராட்டுக்கள் (2002–2010)

சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2002ல் பாபா படத்தில் இரசினிகாந்து நடித்தார். இவர் அத்திரைப்படத்திற்குத் திரைக்கதையும் எழுதியிருந்தார்.[72] இப்படத்தின் திரைக்கதை ஒரு ரவுடி திருந்துவதைப்போல் அமைக்கப்பட்டிருந்தது. அவர் பின்னர் இந்துத் துறவி மகாவதார் பாபாசியின் மறுபிறப்பு என்று தெரியவருகிறது. அவர் அரசியல் ஊழலுக்கு எதிராகச் சண்டையிடுகிறார்.[72] இப்படத்தால் சந்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. விநியோகஸ்தர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இரசினிகாந்தே விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை திருப்பிக் கொடுத்தார்.[73][74] இந்தப் படம் "ரோஜா தன் வாசத்தை இழந்து விட்டது" மற்றும் "தங்கம் இனிமேல் மின்னப்போவதில்லை" ஆகிய கருத்துக்களைப் பெற்றது.[75]

இரண்டு ஆண்டுகள் கழித்து, இரசினிகாந்து பி. வாசுவின் சந்திரமுகியில் (2005) நடித்தார். இப்படம் மிக வெற்றிகரமாக ஓடியது. 2007 இல் இது மிக நீண்ட நாட்கள் ஓடிய தமிழ் படம் என்ற சாதனையைப் பதிவு செய்தது.[76] சந்திரமுகி துருக்கிய மொழியிலும் மற்றும் டெர் கெயிஸ்டெர்ஜகெர் என்ற பெயரில் செர்மானிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அந்தந்த நாடுகளில் வெளியிடப்பட்டது.[77] இரண்டு ஆண்டு படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிறகு சிவாஜி (2007) திரைப்படம் அந்த ஆண்டின் கோடைகாலத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டபோது இது ஐக்கிய இராச்சியம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் வெளியான பத்து சிறந்த திரைப்படங்களில் ஒரு திரைப்படமாக ஆனது.[78][79] இரசினிகாந்து இப்படத்தில் தனது பங்கிற்கு 26 கோடி சம்பளம் பெற்றார். அது ஜாக்கி சானுக்குப் பிறகு ஆசியாவில் இரண்டாவது அதிக சம்பளம் பெற்ற நடிகராக இவரை ஆக்கியது.[80][81][82]

"61 வயதில், ஆண்டின் மிகவும் வெற்றிகரமான திரைப்படம் ஒன்றில் நட்சத்திரமாக நடிக்கிறார், தெற்கில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்? இப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி சொல்லவேண்டியது ஏதாவது மீதம் இருக்கிறதா? சூப்பர் ஸ்டார் இரசினி அறிவியல் புனைகதை எந்திரன் மூலம் மீண்டும் தான் ஒரு மிடாஸ் டச் உள்ள நடிகர் என்று நிரூபித்திருக்கிறார். இவர் ஒரு லட்சியமுள்ள விஞ்ஞானி, ஒரு அப்பாவி ரோபோ மற்றும் உலகை அழிக்க நினைக்கும் ஒரு தீய ஆன்ட்ராய்ட் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் […] இவர் மாதங்களுக்கு இவரைப் பற்றியே பேசும்படி அத்தகைய தன்னம்பிக்கையுடன் செய்துள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கலாம், ஆனால் இவர் நடிக்கும்போது, அனைத்தையும் அப்படியே நின்றுபோகச் செய்கிறார்."

எந்திரனில் இரசினிகாந்தின் நடிப்பு பற்றி ரெடிஃப்.காம்[31]

இவர் மீண்டும் பி. வாசு இயக்கத்தில் குசேலன் படத்தில் நடித்தார். இது மலையாளப் படமான கத பறயும் போலின் மறு ஆக்கம் ஆகும். இது தெலுங்கிலும் ஒரே நேரத்தில் கதாநாயகடு என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் இவர் இரசினிகாந்தாகவே, ஓர் இந்திய சினிமா நட்சத்திரமாக மற்றும் படத்தின் கதாநாயகனுக்கு ஒரு சிறந்த நண்பராக ஒரு நீட்டிக்கப்பட்ட கௌரவத் தோற்றத்தில் நடித்தார். இரசினிகாந்தின் கூற்றுப்படி, இப்படம் சற்றே இவரது ஆரம்ப வாழ்க்கையை விவரித்தது.[83] எனினும் இந்தப் படம் வணிகரீதியாகச் சரியாகப் போகவில்லை.[84] குசேலன் பட இழப்பைச் சரிசெய்ய இரசினிகாந்தும் தான் பிரமிட் சாய்மீரா பட நிறுவனத்துடன் மீண்டும் பணியாற்றுவேன் என்று கூறினார்.[85][86]

எந்திரன் (2010) படப் பாடல் வெளியீட்டு விழாவில் இரசினிகாந்து

இரசினிகாந்து மீண்டும் இயக்குனர் ஷங்கருடன் அறிவியல் புனைகதைத் திரைப்படமான எந்திரனில் பணியாற்றினார்.[87] இந்தப் படம் அதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாரான இந்தியத் திரைப்படம் என்ற சிறப்புடன் 2010ல் உலகளவில் வெளியிடப்பட்டது. இறுதியில் அந்நேரத்தில் இந்தியாவின் இரண்டாவது மிக அதிக வசூல் செய்த படமானது.[88][89][90] இந்தப் படத்திற்காக இரசினிகாந்து 45 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார்.[91] இப்படத்தின் வெற்றி காரணமாக, இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத், சினிமாவின் வியாபாரத்தையும் மற்றும் அதன் வெற்றிக் கதையையும் பகுப்பாய்வு செய்வதற்காக ஒரு வழக்குப் படிப்பாக தற்காலத் திரைப்படத் தொழில்: ஒரு வியாபார முன்னோக்கு என்று அழைக்கப்படும் முதுகலைப் பட்டதாரி தேர்வு மேலாண்மை படிப்பில் இத்திரைப்படத்தைப் பயன்படுத்தியது. இப்படிப்பு முத்து படத்தையும் ஆய்வு செய்யும்.[92]

உடல்நலக்குறைவு மற்றும் திரும்புதல் (2011–தற்போது)

ஜனவரி 2011ல் இரசினிகாந்து ரானா படத்தில் நடிப்பதாக இருந்தது. இப்படம் சவுந்தர்யா ரஜினிகாந்தால் தயாரிக்கப்பட்டு கே.எஸ். ரவிக்குமாரால் இயக்கப்படுவதாக இருந்தது.[52] 29 ஏப்ரல் 2011 அன்று படத்தின் பிரதான புகைப்படம் எடுக்கும்போது, இவர் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு லேசான உணவுவழி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார். இது வாந்தி, நீரிழப்பு மற்றும் சோர்வுக்கு வழிவகுத்தது.[93] இவர் ஒரு நாள் புனித இசபெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பினார்.[94] ஐந்து நாட்கள் கழித்து, மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[95] இவருக்கு மூச்சுக்குழல் அழற்சி ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஒரு சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும் இருந்தார்.[96] மருத்துவமனையில் இருந்து வெளியேறிய தேதி குறித்தும் மற்றும் இரசினிகாந்தின் உடல்நலம் சீர்குலைந்து விட்டதாகவும் பல முரண்பட்ட அறிக்கைகள் வெளியாயின.[97] அவரது கடைசி வெளியேற்றத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து, இரசினிகாந்து 16 மே 2011 அன்று ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடர் சுவாச மற்றும் இரைப்பை சிக்கல்களுக்காக அனுமதிக்கப்பட்டார்.[98] இரசினிகாந்து நிலையான நிலையில் இருந்தார் மற்றும் சிகிச்சைக்கு நேர்மறையான பதிலை காட்டினார் என்று மருத்துவமனை கூறியது.[97] இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று பரவலாக தகவல்கள் வெளியாயின. இது பின்னர் தனுஷால் மறுக்கப்பட்டது.[99]

21 மே 2011 அன்று, ஐஸ்வர்யா, தான் மற்றும் இரசினிகாந்து மருத்துவமனை வார்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.[100] மருத்துவமனை அங்கீகரிக்கப்படாத பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தியது.[101] இரசினிகாந்தின் சகோதரர், சத்யநாராயண ராவ் கெய்க்வாட், திடீர் உடல்நலக்குறைவானது விரைவான எடை இழப்பு, உணவு மாற்றங்கள், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தலை நிறுத்தியது ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தத்தால் ஏற்பட்டதாகக் கூறினார்.[102] ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு 4 நிமிட எண்ணிமப் பதிவு செய்த குரல் செய்தியில் நேயர்களுக்கு உரையாற்றிய பின்னர், இரசினிகாந்து, அமிதாபு பச்சனின் ஆலோசனையின் படி, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் 21 மே 2011 அன்று பயணித்தார். அங்கு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நெப்ரோபதிக்கு மேலும் சிகிச்சை பெறச் சென்றார்.[103][104] மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்ற பிறகு, இறுதியாக ஜூன் 15, 2011 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிங்கப்பூரில் மீண்டும் தொடர்ந்து இருந்தார். 13 ஜூலை 2011 அன்று சென்னை திரும்பினார்.[105][106]

இவர் திரும்பிய பிறகுரானா படத்தை மீண்டும் தொடங்குவதற்கு பல முயற்சிகள் தோல்வியடைந்த போதிலும், இரசினிகாந்து தனது எந்திரன் பாத்திரமான, சிட்டியாக, பாலிவுட் அறிவியல் புனைகதை படமான ரா ஒன்னில் (2011) கௌரவத் தோற்றத்தில் தோன்றினார்.[107] நவம்பர் 2011 இல், ரானா கைவிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக கோச்சடையன் என்கிற புதிய படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.[108] கோச்சடையன் 2014ல் வெளியானது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[109] கோச்சடையன், மற்றும் 2012ல் சிவாஜியின் முப்பரிமாண வெளியீடு,[110] ஆகியவை இரசினிகாந்தை உலக சினிமாவின் நான்கு வெவ்வேறு வடிவங்களில் தோன்றிய முதல் இந்திய நடிகராக்கியது. அவ்வடிவங்கள் கருப்பு வெள்ளை, வண்ணம், முப்பரிமாணம் மற்றும் மோஷன் கேப்சர்.[111] கோச்சடையன் முடிந்த பிறகு, இரசினிகாந்து கே.எஸ்.ரவிக்குமாருடன் அடுத்த படமான லிங்காவிற்குத் தயாரானார்.[112][113] இவரது பிறந்தநாளான டிசம்பர் 12, 2014 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.[114] இருவிதமான விமர்சனங்களையும் பெற்றது.[115] இரசினிகாந்தின் அடுத்த படம் இயக்குனர் பா. ரஞ்சித்தின் கபாலி. இது எஸ். தாணு தயாரிப்பில் ஜூலை 2016ல் வெளியானது.[116] பா. ரஞ்சித்தின் மற்றொரு படமான காலா 2018 ஜூன் 7 ஆம் தேதி தனுஷ் தயாரிப்பில் வெளியானது.[117] எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0 நவம்பர் 29, 2018ல் வெளியாக இருக்கிறது.[118]

பாபா பட சர்ச்சை

2002 ஆம் ஆண்டில் வெளியான பாபா படத்தில் இரசினிகாந்து புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. இதனால் கொந்தளித்த பாமகவினர் பாபா படம் வெளியான அன்று திரையரங்குகளை அடித்து நொறுக்கினர் மற்றும் படச்சுருளையும் எரித்தனர், இதனால் பாமகவினருக்கும் இரசினிகாந்து ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இரசினிகாந்து ரசிகர்கள் தாக்கப்பட்டனர்.[119]

இதை மனதில் கொண்டு 2004- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் தனது ரசிகர்களை அந்த கட்சிக்கு எதிராக வேலை செய்ய உத்தரவிட்டார் இரசினிகாந்து. ஆனால் அந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிலிருந்து இரசினிகாந்து அரசியலில் இருந்து சற்று தள்ளியே இருந்தார்.[120][121]

அரசியல் தொடர்பு

1990களில் இரசினிகாந்து நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதாவிற்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றத்தன் காரணங்களுள் ஒன்றாக பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில், இரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், இரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். இரசினிகாந்து 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறினார்.

சோ. இராமசாமி போன்ற அரசியல் விமர்சகர்கள் இரசினிகாந்து அவரது புகழ் மற்றும் ரசிகர் தளம் ஆகியவற்றை மட்டுமே வைத்து இந்திய அரசியலில் வெற்றிகரமாக வர சாத்தியம் உள்ளதாகக் கூறினர். 1996 தேர்தலில் இரசினிகாந்தின் தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள இவரது பல ரசிகர்கள் அரசியலில் நுழைவதற்கு, குறிப்பாக மாநில முதல்வர் பதவிக்குப் போட்டியிட அழைப்பு விடுத்தனர். இரசினிகாந்து டிசம்பர் 31, 2017 அன்று தன் அரசியல் வருகையை அறிவித்தார். தான் ஆரம்பிக்கப்போகும் அரசியல் கட்சி 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் தன் கட்சி விலகும் என்றும் கூறினார்.[122] இரசினிகாந்து 2017 திசம்பர் 31 அன்று, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் காலம் குறைவாக இருப்பதால் அதில் போட்டியிடவில்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு முடிவெடுத்து சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று அவர் கூறினார்.[123] இரசினிகாந்து 2021 சனவரியில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும், இது குறித்து 2020 திசம்பர் 31 ஆம் நாள் அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.[124]

புத்தகங்கள்

  • ரஜினி சகாப்தமா? என்ற தலைப்பில் ரஜினியின் அரசியல் வாழ்க்கை குறித்து ஜெ. ராம்கி எழுதிய புத்தகம் 2005ல் வெளியானது
  • ரஜினியின் பஞ்ச் தந்திரம் என்ற தலைப்பில் இவரது படங்களில் உள்ள 30 முத்திரை வசனங்கள் மூலம் மேலாண்மை தத்துவங்களை எடுத்துக்கூறும் புத்தகம்.[125] இப்புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
  • பாட்சாவும் நானும் என்னும் நூலில் இரசினியை சந்தித்தது முதல் இரசினியுடனான சம்பவங்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.
  • இரசினி இதில் அபூர்வராகங்கள் முதல் எந்திரன் வரையான இரசினியின் திரைப்பட விமர்சனங்கள் பைம்பொழில் மீரான் என்பவரால் எழுதப்பெற்றுள்ளன.

நடித்த திரைப்படங்கள்

விருதுகள்

இந்திய நடுவண் அரசின் விருதுகள்

தமிழக அரசின் விருதுகள்

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிதமிழக அரசு திரைப்பட விருதுகள்
1978முள்ளும் மலரும்காளிதமிழ்தமிழக அரசு திரைப்பட விருதுகள்
1982மூன்று முகம்அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்
தமிழ்தமிழக அரசு திரைப்பட விருதுகள்
1984நல்லவனுக்கு நல்லவன்மாணிக்கம்தமிழ்சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
1994முத்துமுத்து,
எஜமான்
தமிழ்தமிழக அரசு திரைப்பட விருதுகள்
1999படையப்பாஆறுபடையப்பன்தமிழ்தமிழக அரசு திரைப்பட விருதுகள்
2005சந்திரமுகிடாக்டர். சரவணன் ,
கிங் வேட்டையன்
தமிழ்தமிழக அரசு திரைப்பட விருதுகள்
2007சிவாஜிசிவாஜி ஆறுமுகம்தமிழ்தமிழக அரசு திரைப்பட விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

வருடம்படங்கள்வகைபலன்
1977புவனா ஒரு கேள்விக்குறிசிறந்த திரைப்படம்வெற்றி
1978முள்ளும் மலரும்சிறந்த திரைப்படம்வெற்றி
1979ஆறிலிருந்து அறுபது வரைசிறந்த திரைப்படம்வெற்றி
1982எங்கேயோ கேட்ட குரல்சிறந்த திரைப்படம்வெற்றி
1984நல்லவனுக்கு நல்லவன்சிறந்த நடிகர்வெற்றி
1985ஸ்ரீ ராகவேந்திராசிறந்த திரைப்படம்வெற்றி
1991தளபதிசிறந்த நடிகர்வெற்றி
1992அண்ணாமலைசிறந்த நடிகர்வெற்றி
1993வள்ளிசிறந்த கதாசிரியர்வெற்றி
1995பாட்ஷா, முத்துசிறந்த நடிகர்வெற்றி

ஆனந்த விகடன் விருது

  • 2017 ஆம் ஆண்டு கபாலி பட நடிப்புக்காக 'சிறந்த நடிகர்' விருது[129]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இரசினிகாந்து&oldid=3944268" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை