இரஞ்சித் சிங்

இரஞ்சித் சிங் (Ranjit Singh; பஞ்சாபி: ਮਹਾਰਾਜਾ ਰਣਜੀਤ ਸਿੰਘ) என்பவர் 1780 முதல் 1839 வரையிலான காலத்தில்[1] சீக்கிய பேரரசின் மன்னாராக ஆட்சிசெய்து புகழ் பெற்றவர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் துணைக்கண்டத்தில் வட மேற்குப் பகுதியை இவர் ஆட்சி செய்தார். அவர் சிசுப்பருவத்தில் இருந்தபோதே பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு தப்பிப்பிழைத்தார், ஆனால் அவரது இடது கண்ணின் பார்வையை இழந்தார். தனது 10 வயதில் இவர் தனது தந்தையாருடன் சேர்ந்து முதலாவது போரில் சண்டையிட்டார். இவரது தந்தை இறந்தபின் ஆப்கானியர்களை வெளியேற்றுவதற்காக தனது இளம் பருவத்தில் பல போர்களில் ஈடுபட்டார். 21 வயதிலேயே பஞ்சாப் சிங்கம் எனவும் பஞ்சாபின் மகாராசா என்றும் இவர் அழைக்கப்பட்டார்.[2] அவரது தந்தை இறந்தபின் ஆப்கானியர்களை வெளியேற்றுவதற்காக அவர் தனது இளம் பருவத்தில் பல போர்களில் ஈடுபட்டார். 1839 ஆம் ஆண்டில் இவருடைய தலைமையின் கீழ் பஞ்சாப் பகுதியில் இவருடைய பேரரசு வளர்ச்சியடைந்தது.[3]

இரஞ்சித் சிங்
ਮਹਾਰਾਜਾ ਰਣਜੀਤ ਸਿੰਘ Edit on Wikidata
மகாராசா ரஞ்சித் சிங்
பிறப்பு13 நவம்பர் 1780
குஜ்ரன்வாலா
இறப்பு27 சூன் 1839 (அகவை 58)
பணிSovereign
வாழ்க்கைத்
துணை/கள்
Mahtab Kaur

ரஞ்சித் சிங்கின் எழுச்சிக்கு முன்னர் பஞ்சாபில் ஏராளமான போர்க்குணமிக்க குழுக்கள் இருந்தன, அவற்றில் பன்னிரெண்டு குழுக்கள் சீக்கிய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் ஓர் இசுலாமியக் குழுவும் இருந்தன.[2] சீக்கியப் பேரரசை உருவாக்குவதற்காக ரஞ்சித் சிங் இச்சீக்கியக் குழுக்களையும் மற்ற உள்ளூர் அரசுகளையும் கைப்பற்றி வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார்.

இசுலாமியப் படைகளின் படையெடுப்புகளை குறிப்பாக ஆப்கானிலிருந்து வந்த இசுலாமியப் படைகளை பலமுறை தோற்கடித்தார். பிரிட்டனுடன் நட்பான உறவுகளை மேம்படுத்திக் கொண்டார்.[4] ரஞ்சித் சிங்கின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள், நவீனமயமாக்கல், உள்கட்டமைப்பில் முதலீடு மற்றும் பேரரசின் செழிப்புக்குத் தேவையான பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரஞ்சித் சிங்கின் கல்சா இராணுவமும் அரசாங்கமும் சீக்கியர்கள், இந்துக்கள், இசுலாமியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் உள்ளிட்டவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது.[5] சீக்கிய கலாச்சாரம் மற்றும் கலை மறுமலர்ச்சிக்கான காலப்பகுதி முதலானவை இவரது பரம்பரைச் சொத்தாக கருதப்படுகின்றன. சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமான அமிர்தசரசிலுள்ள அரிமந்திர் சாகிப் எனப்படும் பொற்கோயில், இவரது ஆதரவில் உருவான பட்னா நகரிலுள்ள தாகிட் சிறீ பட்னா குருத்துவாரா, பீகார் மற்றும் மகாராட்டிர மாநில நாந்தேடு நகர அசூர் குருத்துவாரா உள்ளிட்ட முக்கிய குருத்துவாராக்களும் இவரது காலத்தில் உருவானவையாகும்.[6]

ரஞ்சித் சிங்கிற்குப் பின்னர் அவரது மகன் மகாராசா கராக் சிங் 1839 ஆம் ஆண்டு அரியணையைப் பிடித்து ஆட்சி செய்தார்.[7]

வாழ்க்கை வரலாறு

தொடக்கக்கால வாழ்க்கை

ரஞ்சித் சிங்கின் பிறப்பிடம், பாக்கித்தான், குச்ரன்வாலா

மகாசிங் சுக்கெர்சாக்கியாவுக்கும், தற்போது பாக்கித்தானிலுள்ள குச்ரன்வாலாவின் சிந்து நகர மன்னர் கசபத் சிங்கின் மகளான ராச் கவுருக்கும் 1780 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று ரஞ்சித் சிங் பிறந்தார்.[7][8] போர்க்குணமிக்க சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் சீடராக இருந்த மூதாதையர் ஒருவரின் நினைவாக ரஞ்சித் சிங் பிறந்த போது அவருக்கு புத்த சிங் என்று பெயரிடப்பட்டது. இவரது வம்சாவளியினர் ரஞ்சித் சிங்கின் பிறப்புக்கு முன்னர் சுக்கர்சாகியா என்ற சீக்கிய சிற்றரசை உருவாக்கினர். முகலாயப் பேரரசு அழிந்து கொண்டிருந்த அந்நேரத்தில் வடமேற்கு தெற்காசியாவில் நிலைபெற்றிருந்த பல சிறிய சீக்கிய அரசுகளில் மிகவும் சக்திவாய்ந்த அரசாக இச்சிற்றரசு இருந்தது.[9] இசுலாமியத் தலைவர் பீர் முகம்மது என்பவரின் மீதான போரில் வெற்றிபெற்றதை நினைவு கூறும் வகையில் குழந்தையின் பெயர் ரஞ்சித் (போர் வெற்றியாளர் என்ற பொருள்) என ரஞ்சித்தின் தந்தையாரால் மாற்றப்பட்டது.[7][10]

ரஞ்சித் சிங் குழந்தையாக இருந்தபோது பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு இடது கண்ணில் பார்வையை இழந்தார்.[7] கம்பீரமான உருவத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தார். பஞ்சாபி மொழியை எழுதுவதற்கு சீக்கியர்களும் இந்துக்களும் பெரிதும் பயன்படுத்தும் குர்முகி எழுத்துமுறையைத் தவிர்த்து பள்ளிக்கூடம் சென்று எழுதவோ படிக்கவொ இவர் கற்கவில்லை.[11] இருப்பினும் வீட்டிலிருந்தபடியே குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் பிற போர்க்கலைகளைக் கற்றார்.[7]

ரஞ்சித் சிங்கின் சமாதி (லாகூர்)

ரஞ்சித் சிங் 12 வயதில் இருந்தபோது அவரது தந்தை இறந்தார்.[9] பின்னர் அவர் தனது தந்தையின் சுக்கர்ச்சக்கியா சிற்றரசின் தோட்டங்களை மரபுவழியாகப் பெற்றார். மற்றும் அவரது தாயார் ராச் கவுரால் வளர்க்கப்பட்டார், இலக்பத் ராய் என்பவர் இவர்களுடன் சேர்ந்து தோட்டங்களை நிர்வகிப்பதில் உதவினார்.[7] ரஞ்சித் சிங் 13 வது வயதாக இருந்தபோது அசுமத் கான் என்பவர் மூலமாக அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால் ரஞ்சித் சிங் அவ்வாலிபரைக் கொன்று வெற்றி பெற்றார்.[12] 18 வயதில் ரஞ்சித் சிங் இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்டார் மற்றும் லக்பத் ராய் படுகொலை செய்யப்பட்டார், அதன்பிறகு அவரது முதல் திருமணத்திலிருந்து ரஞ்சித்தின் மாமியார் அவருக்கு உதவினார்.

மன்னர் ரஞ்சித் சிங்

பதின்வயதினராக இருந்தபோது ரஞ்சித் சிங் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டார். அவரது தத்துவார்த்த வரலாற்றாளர்கள் மற்றும் அவரைப் பார்வையிட்ட ஐரோப்பியர்கள் ஆகியோரின் கூற்றுப்படி ரஞ்சித்தின் பிற்கால வாழ்க்கையில் இப்பழக்கம் மிகத் தீவிரமடைந்திருந்தது.[13][14] இருப்பினும் அவர் மாட்டிறைச்சியை சாப்பிட்டதில்லை. புகைப்பிடிக்கும் பழக்கும் இவருக்கு இருந்ததில்லை. மற்றும் அவரின் அரசவையில் இருந்த அனைத்து அதிகாரிகளும், அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் வேலைக்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.[14]

மனைவிகள்

மகாராசா ரஞ்சித் சிங் குடும்பத்தின் வம்ச அட்டவணை

பல்வேறு திருமண விழாக்களில் ரஞ்சித் சிங் பல முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இருபது மனைவிகள் இருந்தனர்.[15][16] ரஞ்சித் சிங்கின் திருமணம் பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் அவருக்கு பல மனைவிகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

1889 ம் ஆண்டு பிரெஞ்சு பத்திரிகையான லு வோலெய்யருக்கு அளித்த பேட்டியில், ரஞ்சித் சிங்கின் மகன் துலீப் சிங், "நான் என் தந்தையின் நாற்பத்தி ஆறு மனைவிகளில் ஒருவரின் மகனாக இருக்கிறேன்" என்று கூறியதாக குச்வந்த்சிங் சிங் குறிப்பிடுகிறார்.[17]

15 வயதில் ரஞ்சித் சிங் அவரது முதல் மனைவியான மெகதப் கவுர் என்பவரை மணந்தார்.[9] இவர் குர்பக்சு சிங் கன்யாயா மற்றும் அவரது மனைவி சதா கவுர் தம்பதியரின் ஒரே மகளும், கன்யாயா சிற்றரசை நிறுவியவருமான செய்சிங் கன்யாயாவின் பேத்தியுமாவார்.[7] போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சீக்கிய சிற்றரசுகளை சரிசெய்யும் பணியில் ரஞ்சித் சிங் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மெகதப் கவுர் உடன் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருப்பினும் திருமணம் தோல்வியில் முடிந்தது. தன்னுடைய தந்தையை ரஞ்சித்தின் தந்தை கொலை செய்தார் என்பதை மெகதப் கவுர் கடைசிவரை மன்னிக்கவே இல்லை. திருமணத்திற்குப் பின்னரும் அவர் தன்னுடைய தாயாருடனேதான் வாழ்ந்தார். இதானால் 1798 இல் நாகை சிற்றரசைச் சேர்ந்த ராச் கவுர் என்பவரை ரஞ்சித் சிங் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.[18] மெகதப் கவுர் 1813 ஆம் ஆண்டில் இறந்தார்.[17]

நாகாய் சிற்றரசின் மூன்றாவது மன்னர் சர்தார் ரான்சிங் நாகாயின் மகளான ராச் கவுர், தாதர் கவுர் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். இவரே ரஞ்சித் சிங்கின் இரண்டாவது மனைவியும் அவரது மகனுமான கராக் சிங்கின் தாயுமாவார். ரஞ்சித் சிங்கின் தாயாரின் பெயரும் ராச் கவுர் என்பதால் குழப்பத்தைத் தவிர்க்க ராச் கவுர் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தன்வாழ்வின் இறுதிவரை இவர் ரஞ்சித் சிங்கின் அன்பிற்குரியவராகவே இருந்தார்.[19] ரஞ்சித் சிங்கின் முதல் திருமணத்தைப் போலவே, இரண்டாவது திருமணமும் அவருக்கு ஓர் இராணுவக் கூட்டணியை கொண்டு வந்தது. அவரது இரண்டாவது மனைவி 1818 ஆம் ஆண்டில் இறந்தார்.[17]

சில மனைவிகளுடன் மகாராசா ரஞ்சித் சிங்

ரத்தன் கவுர் மற்றும் தயா கவுர் ஆகியோர் குசராத்தின் சாகிப் சிங் பாங்கி என்பவரின் மனைவிகளாவர். (குசராத் மாநிலத்தை எண்ணி குழப்பக்கூடாது, லாகூருக்கு வடக்கே ஒரு சிற்றரசாக இவர்கள் இருந்தனர்).[20] சாகிப் சிங் மரணமடைந்த பிறகு ரஞ்சித் சிங் அவர்கள் இருவரையும் சடார் அன்சாவின் சடங்கின் வழியாக 1811 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். 1819 ஆம் ஆண்டில் ரத்தன் கவுருக்கு முல்தானா சிங்கும், தயா கவுருக்கு காசுமீரா சிங்கும் பிறந்தனர். 1821 இல் தயா கவுருக்கு பாசுகாயுரா சிங் பிறந்தார்.[21]

1802 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட மோரன் சர்க்கார், 1815 இல் மணந்த சந்த் கவுர், 1820 இல் மணந்த லட்சுமி, 1822 இல் மணந்த மெகதாப் கவுர், 1832 இல் மணந்து கொண்ட சமன் கவுர் மற்றும் அதே போல் குடான், பன்சோ, குல்பாகர், குலாப், ராம் தேவி, ராணி, பன்னட், ஆர் மற்றும் தனோ உள்ளிட்டவர்கள் ரஞ்சித்துக்கு மனைவிகளாக இருந்தனர்.[17] இந்து கவுர் ரஞ்சித் சிங்கின் கடைசி மனைவி ஆவார். அவரது தந்தை மன்னா சிங் ஆலுக் தன்னுடைய மகளின் நல்லொழுக்கங்களை ரஞ்சித் சிங்கிடம் புகழ்ந்து கூறினார். இரஞ்சித் சிங்கோ அவருடைய ஒரே வாரிசு கராக் சிங்கின் பலவீனத்தை பற்றி கவலை கொண்டிருந்தார். பின்னர் மகாராசா 1835 ஆம் ஆண்டில் தனது அம்பு மற்றும் வாளை கிராமத்திற்கு அனுப்பி இந்து கவுரை திருமணம் செய்து கொண்டார். 6 செப்டம்பர் 1838 இல் சீக்கியப் பேரரசின் கடைசி மகாராசாவான துலீப் சிங்கை இவர் பெற்றெடுத்தார்.[22]

அகால் தக்த் அளித்த தண்டணை

1802 ஆம் ஆண்டில் ரஞ்சித் சிங் மோரன் சர்கார் என்ற இசுலாமிய நாட்டியப் பெண்ணை மணந்தார்.[17] மகாராசாவின் இந்த நடவடிக்கையும் மற்ற சீக்கிய மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் ஆச்சாரமான சீக்கியர்களையும் நிகாங் குழுவினரையும் எரிச்சலைடையச் செய்தது. நிகாங்கு சீக்கியர்களின் தலைவராக இருந்த அகலி புலா சிங் சீக்கிய சமய அகால் தக்தின் புனிதப்பதவியில் இருந்தவர் ஆவார்.[23] ரஞ்சித் சிங் அம்ரித்சருக்கு வருகை தந்தபோது புனிதத்தலைவரைய வெளியில் அழைத்து தான் செய்த தவறுகளுக்காக அவரிடம் மன்னிப்பு கோரினார். அகலி புலா சிங், ரஞ்சித் சிங்கை அகால் தக்திற்கு முன்னால் இருந்த ஒரு புளிய மரத்தடிக்கு அழைத்துச் சென்று சாட்டையடி கொடுத்து அவரைத் தண்டிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[23] ரஞ்சித் சிங்கின் மன்னிப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை அக்லி புலா சிங் அருகிலுள்ள சீக்கிய பக்தர்களிடம் கேட்டார். பக்தர்கள் சத் சிறீ அகால் அருள் செய்து ரஞ்சித் சிங்கை விடுவித்து மன்னித்தனர்.

மகன்கள்

ரஞ்சித் சிங்கிற்கு எட்டு மகன்கள் இருந்தனர். இரண்டாவது மனைவி மூலம் பெற்ற கராக் சிங் அனைவருக்கும் மூத்தவராவார். முதல் மனைவிக்குப் பிறந்த இசார் சிங் இரண்டு வயதிலேயே இறந்து போனார். இரட்டையர்களாகப் பிறந்த சேர் சிங், தாரா சிங் இருவரும் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது மகன்களாவர். சிங் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பளித்த விதவைகள் மூலம் முல்த்தானா சிங், காசுமிரா சிங், பசாவுரா சிங் என்ற மூன்று மகன்கள் அவருக்குப் பிறந்தனர். கடைசி மனைவி மூலமாக இவருக்கு துலீப் சிங் என்ற மகன் பிறந்தார்.[24] கராக் சிங்கையும் துலீப் சிங்கையும் மட்டுமே ரஞ்சித் சிங் தன்னுடைய மரபுவழி மகன்களாக ஏற்றுக்கொண்டார்.[25][26]

இறப்பு

பாக்கித்தான் லாகூரிலுள்ள பாத்சாகி மசூதிக்குப் பக்கத்தில் ரஞ்சித் சிங்கின் சமாதி

1830 களில் சிங்கிற்கு பல உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டன. மதுபானம் மற்றும் கல்லீரல் கோளாறு ஆகியவை இதற்குக் காரணமென சில வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.[20][27] 1839 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 இல் ரஞ்சித் சிங் தூக்கத்தில் இறந்தார்.[15] அவரது நான்கு மனைவிகள் மற்றும் ஏழு காமக்கிழத்தியர்கள் ரஞ்சித் சிங்கின் இறுதி சடங்கு நடந்தபோது உடன்கட்டை ஏறினர்.[15][28]

சீக்கியப் பேரரசு

மகாராசா ரஞ்சித் சிங்
1816–29

வரலாற்றுச் சூழல்

1707 ஆம் ஆண்டில் அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதிக்கான வரி செலுத்துவதற்கு அல்லது நிர்வகிக்கும் திறனை முற்றிலுமாக இழந்தது. வடமேற்கு பகுதியில், குறிப்பாக பஞ்சாப்பில் குரு கோபிந்த் சிங்கின் சீக்கிய வீரர்களால் உருவான கல்சா சமுதாயத்தினரின் எழுச்சியினால் முகலாயர்களின் அதிகாரம் துண்டு துண்டாக சிதறுவது அதிகரித்தது.[29] சிந்து நதி பள்ளத்தாக்குளின் மீது ஆப்கானியர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார். ஆனால் கல்சா சீக்கியர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட படைகளாலும் கிராமங்களைச் சார்ந்த முறையற்ற கல்சா சீக்கியப் போராளிகளாலும் ஆப்கானியர்கள் எதிர்ப்பை சந்தித்தனர்[29]. முன்னதாக வருவாய் திரட்டும் சமீந்தார்களாக இருந்த இசுலாமியர்களை நீக்கிவிட்டு சீக்கியர்கள் தங்களைச் சார்ந்த சமீந்தார்களையே நியமித்துக் கொண்டனர். இதனால் சீக்கியர்களுக்கு ஆதரவாக இருந்த வீரர்களுக்கு உணவு வழங்கவும் அவர்களின் படையை வலிமையூட்டவும் கிடைத்தது[29]. இதற்கிடையில் காலனித்துவ வர்த்தகர்களும் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களும் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் தங்கள் செயல்பாடுகளை தொடங்கினர்[29]

18 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பிற்பகுதியில், இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகள் (இப்பொழுது பாக்கித்தான் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகள்) பதினான்கு சிறிய சிற்றரசுகளின் தொகுப்பாக இருந்தன.[2] மேற்கண்ட பதினான்கு சிற்றரசுகளில் 12 சீக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. லாகூருக்கு அருகில் இருந்த கசூர் அரசு இசுலாமியர்களின் கட்டுப்பாட்டிலும், தென்கிழக்கில் இருந்த மற்றொரு குழு ஆங்கிலேயர் சியார்ச்சு தாமசு என்பவரின் கட்டுப்பாடிலும் இருந்தன.[2] இந்த பகுதி சீலம், செனாப், ராவி, பியாசு மற்றும் சட்லச ஆகிய ஐந்து ஆறுகள் பாயும் வளமான பள்ளத்தாக்குப் பகுதிகளாகும்.[20] சீக்கிய வீரர்கள் அனைவரும் சீக்கிய வீரர்களின் கல்சா சீக்கியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர், ஆனால் அவர்கள் ஒன்றுபட்டு இருக்கவில்லை, வருவாய் சேகரிப்பு, கருத்து வேறுபாடுகள் மற்றும் உள்ளூர் முன்னுரிமைகள் ஆகியவற்றுக்காக ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு ஒற்றுமையிழந்து காணப்பட்டனர். ஆப்கானித்தானில் இருந்து அகமதா சா அப்தாலி போன்ற இசுலாமியப் படைகளின் வெளிப்புற படையெடுப்பு ஏற்பட்டால் மட்டும் அவர்கள் பொதுவாக நாட்டுக்காக ஒன்றுபட்டனர்.[2]

18 ஆம் நூற்றாண்டின் முடிவில் சுக்கர்சாகியா, கன்யாசு, நக்காயிசு, அகுல்வாலியாசு மற்றும் பாங்கி சீக்கியர்கள் என்ற ஐந்து மிக சக்திவாய்ந்த சிற்றரசுகள் பேரரசில் இருந்தன.[2][9] ரஞ்சித் சிங் முதலாவது குழுவான சுக்கர்சாகியாவில் இருந்தார். திருமண உறவின் வழியாக அவருக்கு கன்யாசு, நக்காயிசு அரசுகளின் ஒத்துழைப்பு கிட்டியது.[2] சிறிய சிற்றரசர்களான புல்கியசு மில்சு போன்ற சிலர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆப்கான் இராணுவ படையெடுப்பை முன்னிட்டு தங்கள் கல்சா சகோதரர்களுக்கு ஆதரவளித்தனர்.[2] ராசபுத்திர-இசுலாமியரால் ஆளப்பட்ட கசூர் பகுதி, ஆப்கானிய படையெடுப்பு படைகளுக்கு எப்போதும் ஆதரவளித்ததுடன், போரின்போது சீக்கியப் படைகளை கொள்ளையடிப்பதில் அவர்களுக்கு உதவியது.[2]

புகழும் தொடக்ககாலப் போர்களும்

ரஞ்சித் சிங் பாதர் – ஆல்பிரட் டி டிரியூக்சு

1797 ஆம் ஆண்டில் அகமது சச அப்தாலி வம்சத்தைச் சேர்ந்த ஆப்கான் இசுலாமிய ஆட்சியாளரான சா சமான், தன்னுடைய படைத் தளபதி சாகான்சிகான் மற்றும் 12000 படை வீர்ர்களுடன் பஞ்சாப் பகுதியின் மீது போர் தொடுத்தபோதே ரஞ்சித் சிங்கின் புகழ் பரவத் தொடங்கியது.[2][7] அப்போது அவருக்கு வயது 17 ஆகும். ரஞ்சித் சிங் கட்டுப்பாட்டில் இருந்த போர் தளங்களில் யுத்தம் நடந்தது, அப்பிராந்தியத்தைப் பற்றிய போதுமான அறிவும் வீரர்களின் போர் நிபுணத்துவம் படையெடுத்த இராணுவத்தை எதிர்க்க ரஞ்சித் சிங்கிற்கு உதவியது. போரில் அடைந்த வெற்றி ரஞ்சித் சிங்கை அடையாளப்படுத்தியது. ரஞ்சிங்கை எதிர்க்க 1798 ஆம் ஆண்டில் ஆப்கானிய ஆட்சியாளர் மற்றொரு இராணுவப் படையை அனுப்பினார், இப்படையை ரஞ்சித் சிங் எதிர்க்கவில்லை. அவர்களை லாகூரில் நுழைய அனுமதித்தார். பின்னர் அவர்கள் படையை சுற்றி வளைத்துக் கொண்டார். அனைத்து உணவு மற்றும் பொருட்களை அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுத்தார். ஆப்கானியர்களுக்கு ஆதரவாக இருந்த பகுதிகளில் காணப்பட்ட அனைத்து பயிர்களையும், உணவு ஆதாரங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார். தாக்குப் பிடிக்க இயலாத ஆப்கானியப் படையினர் மீண்டும் ஆப்கானுக்குத் திரும்பினர்.[7]

1799 ஆம் ஆண்டில், 25,000 ராசா ரஞ்சித் சிங்கின் இராணுவம் 25000 கல்சா சீக்கியர்களால் ஆக்கப்பட்டிருந்தது. மற்றொரு 25,000 கல்சா சீக்கியர்களால் ஆன மற்றொரு படை அவருடைய மாமியார் ராணி சதா கவுரால் தலைமை தாங்கப்பட்டு ரஞ்சித் சிங்கிற்கு ஆதரவாகச் செயல்பட்டது. இவ்விரு படைகளும் அணிசேர்ந்து கூட்டு நடவடிக்கையாக லாகூர் நகரத்தை மையமாகக் கொண்ட பாங்கி சீக்கியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை தாக்கினர். லாகூரைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தப்பியோடினர். முதலாவது பெரிய வெற்றியாக லாகூர் வெற்றி என்னும் புகழ் ரஞ்சித் சிங்கிற்கு வந்து சேர்ந்தது.[2][30] சூப்பி இசுலாமியர்களும் லாகூரின் இந்துக்களும் ரஞ்சித் சிங்கின் ஆட்சியை வரவேற்றனர்.[7] 1800 ஆம் ஆண்டில், சம்மு பகுதியின் ஆட்சியாளர் ரஞ்சித் சிங்கிற்கு தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை பகுதியை விட்டுக்கொடுத்தார்.[31]

1801 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் இந்து நாள்காட்டியின் படி அமைந்த புதிய ஆண்டில் நடைபெற்ற ஒரு விழாவில், குரு நானக்கின் நேரடியான சீடர் சஞ்சிப் சிங் பேடி அவர்கள் ரஞ்சித் சிங்கின் நெற்றியில் திலகமிட்டு அவரை பஞ்சாபின் மகாராசா என்று பெயரிட்டு அழைத்தார்.[7][32][33] ரஞ்சித் சிங்கின் ஆட்சியை "சர்கார் கல்சா" என்றும் அவருடைய அவையை தர்பார் கல்சா" என்றும் பெயரிட்டு அழைத்தார்.

விரிவாக்கம்

1802 ஆம் ஆண்டில் 22 வயதுடைய ரஞ்சித் சிங் பாங்கி சீக்கியர்களிடமிருந்து அமிர்தசரசை கைப்பற்றினார். அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முன்னர் ஆப்கானிய படையெடுப்பால் தாக்கப்பட்டு பழுதடைந்திருந்த அர்மந்திர் சாகிப் கோவிலை பளிங்கு மற்றும் தங்கத்தால் மறுசீரமைப்பு செய்வதாகவும் புனரமைப்பதாகவும் அறிவித்தார்.[34]

மகாராசா ரஞ்சித் சிங்கின் அரியணை. 1820–1830, அபீசு முகமது முல்தானி, தற்போது வி&ஏ அருங்காட்சியகத்தில்

1806 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரித்தானிய அதிகாரிகளுடன் ரஞ்சித் சிங் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதில் சீக்கிய சக்திகள் சட்லச் ஆற்றின் தெற்கில் விரிவாக்க முயற்சிக்கவில்லை என்று உறுதி கூறினார். பிரித்தானிய இராணுவம் சட்லச் ஆற்றை கடந்து சீக்கியப் பிரதேசத்தில் நுழைவதில்லை என்று உறுதியளித்தது.[35]

1807 ஆம் ஆண்டில், ரஞ்சித் சிங்கின் படைகள் இசுலாமியரின் ஆட்சியில் இருந்த கசூரின் மீது படையெடுத்து கடுமையான சண்டைக்குப் பிறகு, ஆப்கானியத் தலைவரான குதுப்-உத்-தினை தோற்கடித்தன. ஆப்கானித்தானத்தை நோக்கிய வடமேற்குப் பகுதியை பேரரசுடன் சேர்த்து விரிவுபடுத்தினார்.[36]

1818 ல் முல்தானுடன் போரிட்டு வெற்றி பெற்றதன் மூலம் பாரி டோப்பை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். 1819 ஆம் ஆண்டில் அவர் வெற்றிகரமாக ஆப்கானிய சன்னி இசுலாமிய ஆட்சியாளர்களைத் தோற்கடித்து, சிறீநகரையும் காசுமீரையும் தன்னுடைய பேரரசுடன் இணைத்துக் கொண்டார். மேலும் தனது ஆட்சியை வடக்கிலும் சீலம் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இமயமலையின் அடிவாரம் வரைக்கும் நீட்டினார்.[7]

1813, 1823, 1834 மற்றும் 1837 ஆம் ஆண்டுகளில் மகாராசா ரஞ்சித் சிங்கின் சீக்கியப் படைகளுக்கும் ஆப்கானியப் படையினருக்கும் இடையே மிகவும் குறிப்பிடத்தக்க போர்கள் ஏற்பட்டன.[3] 1813 ஆம் ஆண்டில் ரஞ்சித் சிங்கின் படைத் தளபதி தேவன் மோகம் சந்த் சீக்கியப் படைகளை வழிநடத்தி சா முகம்துவின் ஆப்கானியப் படைகளை வழிநடத்திய தோசுத்து முகம்மது கானை எதிர்த்துப் போரிட்டது.[37] அட்டோக் போர் எனப்படும் அப்போரில் ஆப்கானியர்கள் தோல்வியை சந்தித்தனர்.

1813-14 இல் காசுமீருக்குள் தனது ஆட்சியை விரிவுபடுத்த ரஞ்சித் சிங் மேற்கொண்ட முதல் முயற்சி, தளபதி அசிம் கான் தலைமையிலான ஆப்கான் படைகளால் முறியடிக்கப்பட்டது. தோல்வியடைந்தது, காலராவின் பரவல், மற்றும் அவரது துருப்புகளுக்கு ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை முதலியன இத்தோல்விக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.

1818 ஆம் ஆண்டில் தளப்தி தேவன் சாந்து தலைமையிலான தர்பார் படைகள் முல்தானை ஆக்கிரமித்து முசாஃபர் கானைக் கொன்று அவரது படைகளைத் தோற்கடித்தன. பஞ்சாபில் ஆப்கானிய செல்வாக்கு முடிவுக்கு வர இவ்வெற்றி வழிவகுத்தது.[38]

1818 ஆம் ஆண்டு சூலையில் பஞ்சாபிலிருந்து வந்த சிங்கின் சீக்கியப் படை ஒன்று காசுமீரின் அசிம் கானின் இளைய சகோதரர் சப்பார் கானை முறியடித்து ரூபாய் 70 இலட்சத்துடன் காசுமீரைக் கைப்பற்றியது. தேவான் மோடி ராம் காசுமீரின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார்.

1819 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெசாவரில் மகாராசாவின் ஆட்சியை தோசுத்து முகம்மது ஏற்றுக் கொண்டார். ஆண்டுக்கு வரியாக ஒரு லட்ச ரூபாய் செலுத்தவும் சம்மதித்தார். மகாராஜா குறிப்பாக தனது படையினரை எந்தவொரு குடிமகனையும் தொந்தரவு செய்யவோ அல்லது பாலியல் பலாத்காரம் செய்யவோ உத்தரவிடவில்லை. 1820 மற்றும் 1821 ஆம் ஆண்டுகளில், சீலம் மற்றும் சிந்து, சிங் சாகர் டாவ் ஆகிய இடங்களுகிடையில் இருந்த டெரா காசி கான், அசாரா மற்றும் மங்கேரா போன்ற பெரும் பகுதிகள் சீக்கியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. காசுமீர், பெசாவர் மற்றும் முல்தான் பகுதிகளின் வெற்றிகளை கொண்டாடும் விதமாக ரஞ்சித் சிங்கின் மனைவிகளான தயா கவுர் மற்றும் ரத்தன் கவுர் ஆகியோருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு இளவரசர் காசுமிரா சிங், பெசாவுரா சிங் மற்றும் இளவரசர் முல்தானா சிங் எனப் பெயரிடப்பட்டு வெற்றிகள் கொண்டாடப்பட்டன. 1823 ஆம் ஆண்டில், காபூல் நதியின் வடக்கே யூசுப்சாயின் பெரிய இராணுவத்தை ரஞ்சித் சிங் தோற்கடித்தார்.[39]

1834 ஆம் ஆண்டில் முகம்மது அசிம் கான் பெசாவர் நோக்கி கிகாத் என்ற பெயரில் 25,000 காத்தக் மற்றும் யசூப்சாய் பழங்குடியினர் படையுடன் மீண்டும் ஒருமுறை போருக்கு வந்தார். மகாராசாவின் படை அவர்களின் படைகளைத் தோற்கடித்தது. யார் முகம்மதுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு மீண்டும் பெசாவர் கவர்னராக நியமனம் செய்யப்பட்டார், லாகூர் தர்பாருக்கு ஒரு லட்ச ரூபாய் வருடாந்திர வருவாயாகக் கிடைத்தது.[40]

1837 ஆம் ஆண்டில் யம்ருட் போர் நிகழ்ந்தது. 1838 இல் காபூல் வழியான இவரது அணிவகுப்பு, சிந்து நகரில் இருந்த காலனித்துவ பிரித்தானிய இராணுவத்தின் ஆதரவுடன் நடைபெற்றது. சீக்கியர்களுக்கும் ஆப்கானியர்களுக்கு இடையே நடைபெற்ற கடைசி மோதலாக இப்போர் மாறியது, சீக்கிய பேரரசு மேற்கு பகுதிகளில் தன்னுடைய எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள இப்போர் உதவியது.[41][42]

1838 ஆம் ஆண்டில் காபூலில் ஆப்கானியப் பேரரசின் அரியனையில் சா சோசாவை அமரச்செய்த பின்னர் பிரிட்டனுடன் சேர்ந்து வெற்றிகரமான அணிவகுப்பில் பங்கேற்க ரஞ்சித் சிங் தனது துருப்புகளுடன் காபூலுக்குச் சென்றார்.

சீக்கியப் பேரரசின் புவியல்

உச்சத்தில் இருந்த ரஞ்சித் சிங்கின் சீக்கியப் பேரரசு

பஞ்சாப் பகுதியிலிருந்த சீக்கியப் பேரரசு சீக்கிய ராச்சியம் என்றும் சர்கார்-இ-கல்சா என்றும் அழைக்கப்பட்டது.[43] இதன் பொருள் ஐந்து ஆறுகளின் நிலம் என்பதாகும். பியாசு, ராவி, சட்லச், செனாப் மற்றும் சீலம் என்பவை ஐந்து ஆறுகளாகும். இவை அனைத்தும் சிந்து நதியின் கிளை நதிகள் ஆகும்.[44]

சட்லச் நதிக்கு வடக்கிலிருந்த நிலப்பகுதிகள், இமயமலையின் வடமேற்கு நிலப்பகுதிகளுக்கு தெற்கிலிருந்த உயர் பள்ளத்தாக்குகள் அனைத்தும் சீக்கியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. சிறீநகர், அட்டோக், பெசாவர், பன்னு, ராவல்பிண்டி, சம்மு, குசராத், சியால்கோட், காங்க்ரா, அம்ரித்சர், லாகூர் மற்றும் முல்தான் ஆகியவை இப்பேரரசின் முக்கிய நகரங்களாக இருந்தன.[20][45]

ஆட்சிமுறை

வெவ்வேறு மதங்கள், இனங்களிலிருந்து பணியாளர்கள் ரஞ்சித் சிங்கின் இராணுவத்திலும், அரசாங்கத்திலும் பல்வேறு பதவிகளை வகிப்பதற்கு ரஞ்சித் சிங் அனுமதித்தார்.[46] ஈன் பிரகோயிசு அல்லார்டு போன்ற சில ஐரோப்பியர்களையும் சிங் தனது படையில் அனுமதித்தார். ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில் காலணியை நிறுவ முற்பட்ட பிரித்தானியர்களை அவர் அனுமதிக்கவில்லை.[47] அவர்களை வேலைக்கு அமர்த்தாவிட்டாலும், பிரித்தானியர்களுடனான உறவை அவர் தக்க வைத்துக் கொண்டார்; 1828 இல் நான்காம் சியார்ச்சுக்கு பரிசுகளை அனுப்பி வைத்தார். 1831 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆளுனர் செனரல் வில்லியம் பெண்டிங்குடன் ஆலோசனைக்காக ஒரு தூதுக்குழுவை சிம்லாவிற்கு அனுப்பினார்.[48] 1838 இல் ஆப்கானியர்களை எதிர்க்க அவர்களுடன் ஒத்துழைத்தார்.[42]

அருங்காட்சியகமும் நினைவிடங்களும்

  • ரஞ்சித் சிங்கின் சமாதி, பாக்கித்தனிலுள்ள லாகூரில் அமைந்துள்ளது.[49][50]
  • 20 ஆகத்து 2003 இல் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சிங்கின் 22 அடி உயர வெண்கல சிலை.[51]
  • அமிர்தசரசின் ராம் பாக்கில் ஒரு அருங்காட்சியகம். இங்கு சிங்குடன் தொடர்புடைய பொருட்கள், ஆயுதங்கள், ஓவியங்கள், நாணயங்கள், எழுத்துக்கள், அணிகலண்கள் முதலியன இடம்பெற்றுள்ளன. இங்கிருந்த அரண்மனையில் சிங் பெரும்பாலான நேரத்தைக் கழித்தார். 1818 இல் இங்கொரு பூங்கா நிறுவப்பட்டது.[52]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை நூல்கள்

மேலும் படிக்க

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இரஞ்சித்_சிங்&oldid=3815519" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை