இனம் (உயிரியல்)
உயிரியலில், இனம் (species)[1]) (ⓘ) என்பது உயிரியல் வகைப்பாடு மற்றும் பெயரீட்டுத் தரநிலை தொடர்பிலான அடிப்படை அலகுகளில் ஒன்றாகும். பொதுவாக இனம் என்பது, தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிரிகளின் தொகுதி என வரையறுக்கப்படுகின்றது.[2] பெரும்பாலான தேவைகளுக்கு இந்த வரைவிலக்கணம் போதுமானது என்றாலும் நுண்ணுயிரினம், வலய உயிரினம் போன்றவற்றைக் கருதும்போது இது அவ்வளவு தெளிவாக அமைவதில்லை. எனவே, டிஎன்ஏ அல்லது மரபன் ஒப்புமை, புறத்தோற்ற ஒப்புமை, சூழல் வாழிட ஒப்புமைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு துல்லியமாக இனம் என்பதற்கு வரையறை தருவது உண்டு.[3] அதாவது, மரபன் வேறுபாடுகளும் இனங்களுக்குள் காணப்படும் சூழல் வாழிடம் சார்ந்த இயல்பு வேறுபாடுகளும் புறத்தோற்ற வேறுபாடுகளும், அவற்றைப் பல்வேறு இனங்களாகவும் துணையினங்களாகவும் பிரிப்பதற்கு வழி வகுக்கின்றன.

உயிரினங்களுக்கு வழங்கிவரும் பொதுப் பெயர்கள் சில வேளைகளில் இனங்களுக்கான அறிவியல் பெயராகவும் வழங்கப்படுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட நெருக்கமான உறவுடைய இனங்கள் சேர்ந்து பேரினம் என்னும் பகுப்பு உண்டாகின்றது. ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு இருசொற் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பெயரின் முதற்சொல் பேரினத்தையும், மற்றது இனத்தையும் குறிக்கின்றன.
அரிசுடாட்டில் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இனங்கள் நிலையானவைகளாகக் கருதப்பட்டன. மாபெரும் உயிர்ச்சங்கிலி எனும் அமைப்பில் இவை படிநிலையில் வைத்து ஒழுங்குபடுத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில், நாளடைவில் போதுமான கால இடைவெளியில் இனம் படிமலரலாம் என உயிரியலாளர்கள் உணரத் தொடங்கினர். சார்லசு டார்வின் 1859 இல் வெளியிட்ட The Origin of Species (உயிரினத் தோற்றம் எனும் நூலில் அவர் இயற்கைத்தேர்வால் எப்படி உயிரினம் படிமலர வாய்ப்புள்ளது என விளக்கினார். இனங்களுக்கிடையில் மரபன்கள் கிடைநிலையாக பரிமாறப்படுவதுண்டு; பல்வேறு காரணங்களால் இனம் அழிந்தொழிதலும் உண்டு.
வரலாறு
செவ்வியல் வடிவங்கள்
அரிசுடாட்டில் தன் உயிரியல் நூலில் பரவை, மீன் போன்ற வகையைக் குறிக்க, γένος (génos) எனும் சொல்லையும் அவ்வகையில் அமைந்த குறிப்பிட்ட வடிவத்தைக் குறிக்க, அதாவது பறவைகளில் அமைந்த ஓந்தி, கழுகு, காக்கை, சிட்டுக்குருவி போன்றவற்றைக் குறிக்க, εἶδος (eidos) எனும் சொல்லையும் பயன்படுத்தினார்). இந்தச் சொற்கள் இலத்தீனில் "genus" எனவும் "species", எனவும் மொழிபெயர்க்கப்பட்டன. என்றாலும், இவை அப்போது இலின்னேய வகைபாட்டுப் பொறுளில் வழங்கப்படவில்லை; இன்று பறவைகள் வகுப்பு வகைபாட்டில் அமைகின்றன. ஓந்திகள் குடும்ப வகைபாட்டில் அமைகின்றன. காக்கைகள் பேரின வகைபாட்டில் அடங்குகின்றன. வகை என்பது இயல்புக் கூறுகளால் பிரித்துணரப்படுகிறது; எடுத்துகாட்டக பறவை இறகுகளும் அலகும் சிறகுகளும்வல்லோடுடைய முட்டையும் வெங்குருதியும் பெற்றுள்ளது. வடிவம் அனைத்து உறுப்பு உயிரிகளும் பகிரும், மரபுபேறாக அவற்றின் இளவுயிரிகளும் தம் பெற்றோரிடம் இருந்து பெறும் பொதுவடிவத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அரிசுடாட்டில் அனைத்து வடிவங்களும் வகைகளும் தெளிவானவை என்றும் மாறாதவை என்றும் கருதினார். இவரது அணுகுமுறை மறுமலர்ச்சிக் காலம் வரை தாக்கம் செலுத்தியது.[4]
நிலைத்த இனங்கள்
தொடக்கநிலைப் புத்தியற்கால நோக்கீட்டாளர்கள் உயிரிகளின் அணிதிரள்வு அல்லது ஒருங்கியைபு குறித்த அமைப்புகளை உருவாக்க முனைந்தபோது, நிலைத்திணை அல்லது விலங்கின ஒவ்வொரு வகையையும் குறிப்பிட்ட சூழலில் வைக்கத் தொடங்கினர். இதுபோன்ற பல பழைய பகுப்புத் திட்டங்கள் இன்று கற்பனையானதாகக் கருதப்படுகிறது: இத்திட்டங்கள் நிற ஒப்புமை சார்ந்தோ (மஞ்சள்பூ பூக்கும் நிலைத்திணைகள்), நடத்தை சார்ந்தோ (பாம்பு, தேள், கடி எறும்புகள் போல கடிக்கும் விலங்குகள்) அமைந்தன. ஆங்கிலேய இயற்கையியலாளராகிய ஜான் இரே (1686) பின்வருமாறு "இனம்" பற்றிய உயிரியல் வரையறையை முதன்முதலில் தந்தார்:
விதையில் இருந்து தம்மை நிலையாக கடத்தும் தெளிவான இயல்கூறுகளை விட மேலும் உறுதியான வரன்முறை இனத்தைச் சுட்ட கிடைக்க இயலாது. இனங்களிலோ, அதன் தனியன்களிலோ எந்தவகை வேறுபாடுகள் தோன்றினாலும், அவை அதே தாவரத்தின் ஒரே விதையில் இருந்து வந்தவை என்றால், இந்த வேறுபாடுகள் தற்செயலானவையே தவிர, அவை இனத்தைப் பிரித்தறிய பொருட்படுத்த முடியாது... இதேபோல, விலங்குகளும் குறிப்பிட்டவகையில் வேறுபட்டு தம் இனத்தை நிலையாகப் பேணுகின்றன; ஓரினம் மற்றோர் இனத்தின் விதையில் இருந்து எப்போதுமே தோன்றுவதில்லை.[5]
சுவீடிய அறிவியலாளராகிய கார்ல் இலின்னேயசு 18 ஆம் நூற்றாண்டில் அவை பகிரும் புறநிலைக் கூறுபாடுகளை வைத்து, வேற்றுமைகளை வைத்தல்ல, உயிரிகளை வகைப்படுத்தினார்.[6] இயற்கையின் உறவுகளை உணர்த்தவல்ல நோக்கீட்டுப் பான்மைகளைச் சார்ந்த படிநிலை அமைப்புள்ள வகைப்பாட்டு எண்ணக்கருவை நிறுவினார்.[7][8] அவரது காலத்திலும் இனங்களுக்கு இடையே அமைப்பியலான தொடர்பு ஏதும் இல்லை என அவை எவ்வளவு ஒற்றுமையுடன் தோற்றத்தில் அமைந்தபோதும் பரவலாக நம்பப்பட்டது. இந்தக் கண்ணோட்டம் ஐரோப்பியச் சமய அறிஞர்களிடமும் சமயக் கல்வியிலும் நிலவியது . இவர்கள் இனங்கள்அரிசுடாட்டில் படிநிலைப்படி கடவுளால் உருவாக்கப்பட்டவை என நம்பினர். இது இருத்தலின் மாபெரும் இயற்கைச்சங்கிலி எனப்பட்டது. ஆனாலும் இந்தச் சங்கிலி, நிலையானதா இல்லையா எனக் குறிப்பிடப்படா விட்டாலும், ஏணியில் படிப்படியாக ஏற இயன்றது.[9]
மாறத்தகு இனங்கள்
இயற்கையியல் அறிஞர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இனங்கள் கால அடைவில் தம் வடிவத்தை மாற்றிகொள்ளலாம் என்பதையும் புவியின் வரலாறு அத்தகைய மாற்றங்கள் நிகழ போதுமானகலவெளியைக் கொண்டுள்ளது என்பதையும் உணரலாயினர். ழீன் பாப்திசுத்தே இலம்மார்க், தனது 1809 ஆண்டைய Zoological Philosophy (விலங்கியல் மெய்யியல்) எனும் நூலில் இனங்களின் உருமாற்றம் குறித்து விவரிக்கிறார். இதன் வழியாக இனங்கள் கால அடைவில் மாறக்கூடியன என, அரிசுடாட்டிலியச் சிந்தனைக்கு மாறாக, முன்மொழிந்தார்.[10]
சார்லசு டார்வினும் ஆல்பிரெடு இரசல் வாலசும் 1859 இல் படிமலர்ச்சி பற்றியும் புதிய உயிரினத் தோற்றம் பற்றியும் உறுதியான ஆய்வை வழங்கினர். டார்வின் தனியன்கள் அல்ல, உயிரித்திரள்களே இயற்கையாகத் தனியன்களில் தோன்றும் வேறுபாடுகளால் இயற்கைத் தேர்வு வழி படிமலர்கின்றன என வாதிட்டார்.[11] இது இனம் பற்றிய புதிய வரையறையின் தேவையை முன்கொணர்ந்தது. இனங்கள் என்பவை அவற்றின் இயல்தோற்ற அடிப்படையைச் சார்ந்தவை. இந்த எண்ணக்கரு ஊடாடும் தனியன்களின் குழுக்களை முறையாகப் பெயரிடப் பயன்படுகிறது என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். அவர் கூறுகிறார், "இனங்களை நான் இப்படித்தான் பார்க்கிறேன்", "ஒன்றுக்கொன்று நெருக்கமான ஒத்திருக்கும் தனியன்களின் கணத்துக்கு தற்போக்கில் தரும் ஏந்தான பெயர்களாக;... இது சாரத்தில் குறைந்த வேறுபாடும் மேலும் நெகிழ்வும் மிக்க அலைவுறும் வடிவங்களைச் சுட்டும் வகைமை எனும் சொல்லில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. வெறும் தனியன்களின் வேறுபாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொடர்ந்து மாறும் வடிவங்களைச் சுட்டும் இந்த வகைமை எனும் சொல்லும் கூட தற்போக்கில் ஏந்தாகத் தரப்படும் சொல்லே எனலாம்"[12].
பெயரிடல்
பொதுவழக்குப் பெயர்களும் அறிவியல் பெயர்களும்
உயிரிகளின் வகைகளுக்கு வழங்கும் பொதுவழக்குப் பெயர்கள் பெரிதும் குழப்பமானவையே. எடுத்துகாட்டாக, பூனை எனும் சொல் வீட்டுப் பூனையான ஃபெலிசு கேட்டசு (Felis catus) வையும் பூனைக் குடும்பம் ஃபெலிடே (Felidae) வையும் குறிக்கலாம். பொது வழக்குப் பெயரின் மற்றொரு சிக்கல் அவை இடத்துக்கு இடம் வேறுபடுவதாகும். அமெரிக்காவில் puma, cougar, catamount, panther, painter, mountain lion என பல்வேறு இடங்களில் வழங்கும் அனைத்துமே Puma concolor என்ற இனமேயாகும். அதே நேரத்தில் "panther" என்பது இலத்தீன அமெரிக்காவின் jaguar (Panthera onca) வையோ அல்லது ஆப்பிரிக்க, ஆசியாவின் leopard (Panthera pardus) வையோ குறிக்கலாம். மாறாக, இனங்களின் அறிவியல் பெயர்கள் ஒன்றேயாகவும் பொதுவானதாகவும் அமையும்; அவை இரு பகுதிகளாக அமையும்: முதல் பகுதி பேரினமாகிய Pumaவையும் அடுத்த பகுதி குறிப்பிட்ட இன அடையாகிய அல்லது பெயராகிய concolor ஐயும் குறிக்கும்.[13][14]
இன விவரிப்பு
ஓர் அறிவியலாளர் தன் ஆய்வுக் கட்டுரையில் ஓர் இனவகைமை உயிரியை முறையாக விவரித்து அறிவியல் பெயரைச் சூட்டியதும் இனத்தின் பெயர் உருவாகிறது. அறிஞரின் ஆய்வு ஏற்று வெளியாகியதுமே இப்பெயர் தாவரவியலில் ஏற்புள்ள வெளியீட்டுப் பெயராகவும் விலங்கியலில் கிடைப்புப் பெயராகவும் ஆகிறது அல்லது கொள்ளப்படுகிறது. பெரிய அருங்காட்சியகங்களில் திரட்டப்படும்போது, இனவகைமை உயிரி பிற ஆய்வாளர்களின் மேலாய்வுக்குத் தரப்படுகிறது.[15][16][17]
வலய இனங்கள்
- ஆர்ட்டிக் கடலின் இனக்கலப்புள்ள இலாரசு கடற்பறவைகளின் ஏழு வலய இனங்கள்
- வலய எதிர்முனைகள்: எர்ரிங் கடற்பறவை (Larus argentatus) (முகப்பில்) வெளிர்கருப்பு முதுகுள்ள கடற்பறவை (Larus fuscus)
- பசுங்குயில், Phylloscopus trochiloides
- இமயமலைப் பசுங்குயில்களின் ஐந்து வலய இனங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Species (journal)
- Barcoding of species
- Catalogue of Life
- European Species Names in Linnaean, Czech, English, German and French பரணிடப்பட்டது 2006-12-11 at the வந்தவழி இயந்திரம்
- Speciation பரணிடப்பட்டது 2016-06-13 at the வந்தவழி இயந்திரம்
- Stanford Encyclopedia of Philosophy entry: Species பரணிடப்பட்டது 2014-04-07 at the வந்தவழி இயந்திரம்
- VisualTaxa
- Wikispecies – The free species directory that anyone can edit from the Wikimedia Foundation