கோதுமை

கோதுமை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தாவரம்
தரப்படுத்தப்படாத:
பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:
ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Poales
குடும்பம்:
Poaceae
துணைக்குடும்பம்:
Pooideae
சிற்றினம்:
Triticeae
பேரினம்:
Triticum

இனங்கள்

T. aestivum
T. aethiopicum
T. araraticum
T. boeoticum
T. carthlicum
T. compactum
T. dicoccoides
T. dicoccum
T. durum
T. ispahanicum
T. karamyschevii
T. macha
T. militinae
T. monococcum
T. polonicum
T. spelta
T. sphaerococcum
T. timopheevii
T. turanicum
T. turgidum
T. urartu
T. vavilovii
T. zhukovskyi

References:
  Serial No. 42236 ITIS 2002-09-22

கோதுமை (டிரிடிகம் இனம்)[1] என்பது தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. 2010ம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 651 மில்லியன் தொன்னாகக் காணப்பட்டதோடு, சோளம் (844 மில்லியன் தொன்) மற்றும் அரிசி (672 மில்லியன் தொன்) என்பவற்றுக்கு அடுத்தத்தாக அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியமாகவும் இருந்தது.[2] 2009ல் கோதுமை இரண்டாமிடத்தில் (682 மில்லியன் தொன்) காணப்பட்டதோடு சோளம் (817 மில்லியன் தொன்) முதலிடத்திலும், அரிசி (679 மில்லியன் தொன்) மூன்றாமிடத்திலும் காணப்பட்டது.[3]

ஏனைய எந்தப் பயிர்களைக் காட்டிலும் அதிக பரப்பளவில் இது பயிரிடப்படுகிறது.[சான்று தேவை] உலக வாணிகத்தில் கோதுமை வாணிகம் ஏனைய அனைத்துப் பயிர் வாணிகங்களின் மொத்தத் தொகையிலும் அதிகமாகும்.[4] உலகளவில், மனித உணவில் தாவரப் புரதத்தின் முக்கிய மூலமாக கோதுமையே விளங்குகிறது. இது மற்றைய முக்கிய பயிர்களான அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றிலும் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது.[5] சோளத்தின் அதிகளவில் விலங்குணவாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக கோதுமை அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவுப் பயிராகவும் விளங்குகிறது.

மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், நகர்ப்புறச் சமுதாய வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் பரந்தளவில் இலகுவாகப் பயிரிடக்கூடிய தானியமாக கோதுமை இருப்பதாலும், நீண்டகாலத்துக்குக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடியதாகவும் கோதுமை இருக்கிறது. வளர்பிறையில் (Fertile Cresent) உருவான பாபிலோனிய மற்றும் அசிரியப் பேரரசுகளின் எழுச்சிக்கும் கோதுமையே காரணமாகும். கோதுமை ஒரு நிறையுணவாகும். கோதுமையை மாவாக்கிப் பாண், பிஸ்கட், குக்கிஸ், கேக்குகள், காலைத் தானிய ஆகாரம், பாஸ்தா, நூடுல்ஸ், கோஸ்கோஸ்[6] போன்றன ஆக்கப்படும். மேலும், இதனைப் புளிக்கச்செய்து பியர்,[7] ஏனைய மதுபானங்கள்[8] மற்றும் உயிரிஎரிபொருள் என்பனவும் உருவாக்கப்படும்.[9]

கால்நடைகளுக்கான தீவனப் பயிராகவும் சிறியளவில் கோதுமை பயிரிடப்படுகிறது. மேலும், இதன் வைக்கோல் கூரை வேயவும் பயன்படுகிறது.[10][11] இதன் முழுத் தானியத்தைக் குற்றுவதன் மூலம் இதன் வித்தகவிழையம் தனியாக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை மா தயாரிக்கப்படுகிறது. இதன் உப பொருட்கள் மேற்தோலும் முளையும் ஆகும். கோதுமையின் முழுத்தானியத்தில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதம் ஆகியன செறிந்துள்ளன. எனினும் சுத்திகரிக்கப்பட்ட தானியத்தில் பெரும்பாலும் மாவுப்பொருட்கள் மட்டுமே உள்ளன.

வரலாறு

ஆர்மீனிய விளைநிலமொன்றில் விளையும் காட்டுக் கோதுமை

கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன்மகரந்தச் சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு வித்தியாசமான இனங்கள் காணப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள், கோதுமைச் சாகுபடி முதன்முதலில் வளர்பிறை (Fertile Cresent) மற்றும் நைல் கழிமுகப் பகுதிகளில் பயிரிடப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. எனினும் அண்மைய ஆய்வுகள் இது தென்கிழக்குத்துருக்கியின்[12] சிறு பகுதியொன்றில் முதலில் பயிரிடப்பட்டதாகக் கூறுகின்றன. இது கிமு 9000த்தில் துருக்கியிலுள்ள கொபேக்லி தெபே எனுமிடத்திலிருந்து வடமேற்கே 40 mi (64 km) தொலைவிலுள்ள நெவாலி கோரி எனுமிடத்தில் பயிரிடப்பட்டுள்ளது.[13]எவ்வாறாயினும், வாற்கோதுமை பயிரிடப்பட்ட கிமு 23,000 ஆண்டுகளிலேயே கோதுமையும் பயிரிடப்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.[14]

பயிரிடல் நுட்பங்கள்

ஐக்கிய அமெரிக்க இடாகோ மாநில விளைநிலமொன்றில் கோதுமை அறுவடை
இந்திய மகாராட்டிர மாநில விளைநிலமொன்றிலுள்ள இளங் கோதுமைப் பயிர்

பயிரிடும் போதான மண் தயார்செய்கை மற்றும் விதைத்தல் நுட்பங்கள் ஆகியன காரணமாகவும், பயிரின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான பயிர் சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் உரப்பயன்பாடு என்பன காரணமாகவும், அறுவடை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாகவும் கோதுமை சிறப்பாகப் பயிரிடக்கூடிய பயிராக விளங்குகிறது. குதிரையைப் பயன்படுத்தி உழும் முறை (3000 BCE அளவில்) காரணமாக உற்பத்தித் திறன் வளர்ச்சியடைந்தது. 18ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விதைக் கலப்பைகளின் உதவியால் பரந்தளவிலான விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனாலும் கோதுமையின் உற்பத்தித் திறன் வளர்ச்சி பெற்றது.

பயிர்ச்சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமான உரப்பயன்பாடு ஆகியன காரணமாக ஓரலகுப் பரப்பிலிருந்து அறுவடை செய்யக்கூடிய கோதுமையின் அளவு அதிகரித்தது. சூடடிப்பு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் போன்ற புதிய இயந்திரங்களின் வருகையும், புதிய கோதுமை ரகங்களின் கண்டுபிடிப்பும் கோதுமைப் பயிர்ச்செய்கையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காக்களில் புதிய விளைநிலங்களில் கோதுமைப் பயிரிடலோடு கோதுமை உற்பத்தியும் விரிவடைந்துள்ளது.

கோதுமையின் போசாக்குத் தகவல்கள்

கோதுமை 240,000,000 எக்டேர்கள் (590,000,000 ஏக்கர்கள்) பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இது ஏனைய எந்தப் பயிருக்கான பயிரிடல் பரப்பளவிலும் அதிகமாகும். உலகின் மிக விரும்பப்படும் நிறையுணவுகள் அரிசியும் கோதுமையுமேயாகும். ஏனைய எந்த உணவுப் பொருள்களிலும் பார்க்க அதிக போசணையை கோதுமை மனிதனுக்கு வழங்குகிறது. கோதுமை ஆர்ட்டிக் பகுதிகளிலிருந்து மத்தியகோட்டுப் பகுதிகள் வரையிலும், கடல் மட்டத்து நிலங்கள் முதல் கடல் மட்டத்திலிருந்து 4,000 m (13,000 அடி) உயரமுள்ள திபத் மேட்டுநிலங்கள் வரையிலும் பயிரிடக்கூடியதாக உள்ளதால் இது உலகளவில் ஒரு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. இது தவிர, கோதுமையைக் களஞ்சியப் படுத்தலும், மாவாக்கலும் இலகுவானதாகும். மேலும் இதிலிருந்து உண்ணத்தக்க, சுவையான பல்வேறு உணவுப்பொருட்களையும் ஆக்கமுடியும். பெரும்பாலான நாடுகளில் மாப்பொருளின் முக்கிய ஆதாரமாகக் கோதுமை விளங்குகிறது.[சான்று தேவை]

கோதுமைப் புரதம் மாவடிவில் உள்ளதால் 99%மான மனிதர்களால் இலகுவாகச் சமிபாடடையச் செய்ய முடியும்.[சான்று தேவை] மேலும் கோதுமையில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் கொழுப்பு ஆகியன உள்ளன. கோதுமை உணவுகள் மிகவும் சத்து மிக்கன.[15]

கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை என்பன இரு முக்கியமான வகைகளாகும். ஆயினும், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாக, எத்தியோப்பிய உயர்நிலங்களில் விளையும் ஊதாக் கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்பு, மஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற சத்துமிக்க ஆயினும் வர்த்தக ரீதியாகப் பயிரிடப்படாத கோதுமை வகைகளும் உள்ளன.[4][16][17]

ஊட்டச்சத்து

Ch. = கோலின்; Ca = கல்சியம்; Fe = இரும்பு; Mg = மக்னீசியம்; P = பாசுபரசு; K = பொட்டாசியம்; Na = சோடியம்; Zn = துத்தநாகம்; Cu = செப்பு; Mn = மாங்கனீசு; Se = செலீனியம்;%DV = % நாளாந்தப் பெறுமானம் குறிப்பு: எல்லா ஊட்டச்சத்துப் பெறுமானமும் புரதத்தின் 100 கிராம் உணவின் %DV ஐக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க பெறுமானங்கள் இளம் சாம்பல் நிறத்திலும் தடித்த இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன..[18][19]சமையல் இழப்பு = ஊட்டச்சத்தில் % அதிகளவு இழப்பு ஓவா-லக்டோ காற்கறிகளை உலரச் கொதிக்க வைப்பதாலும் செய்யாது ஆகும்.[20][21]Q = புரதத்தின் தரம் செரிமானமூட்டுவதற்காக மாற்றமின்றிய முழுமையான நிலையைக் குறிக்கிறது.[21]


வர்த்தகப் பயன்பாடு

அறுவடை செய்யப்பட்ட கோதுமைத் தானியம் பண்டச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கேற்ற விதத்தில் வகைப்படுத்தப்படும். இவ் ஒவ்வொரு வகைக் கோதுமையும் வெவ்வேறு பயன்களைக் கொண்டிருப்பதால் கோதுமை கொள்வனவாளர்கள் தமக்கு வேண்டிய கோதுமையைக் கொள்வனவு செய்வர். இத்தகவல்களைப் பயன்படுத்தி கோதுமை உற்பத்தியாளர்கள் இலாபமீட்டக்கூடிய உரியவகைக் கோதுமை வகைகளைப் பயிரிடுவர்.

கோதுமை ஒரு பணப்பயிராகப் பரந்தளவில் பயிரிடப்படுகிறது. அலகுப் பரப்பளவில் அதிக விளைச்சல் தருதல், மித வெப்ப வலயத்தில நன்றாக வளரக் கூடியதாய் இருத்தல், வெதுப்புதலுக்கான உயர் தரம்மிக்க மாவைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருத்தல் போன்றன இதற்கான காரணங்களாகும்.பாண் வகைகளில் பெரும்பாலானவை கோதுமையைப் பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. ராய் மற்றும் ஓட் பாண் வகைகள் பெரும்பாலும் அவ்வத் தானியங்களையே கொண்டிருப்பினும் அவற்றில் கோதுமையும் கலக்கப்படும். கோதுமை மா உணவுப்பண்டங்கள் மிகவும் பிரபலம் மிக்கவையாக உள்ளதால் கோதுமைக்கு நல்ல கேள்வி உருவாகியுள்ளது.

பாண் துண்டுகளை வைப்பதற்கு காய்ந்த கோதுமைத் தண்டினால் உருவாக்கப்பட்ட பாத்திரம்

அண்மைக் காலங்களில் கோதுமை விலை உலகச்சந்தையில் குறைவடைந்து வருவதால் ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பாலான விவசாயிகள் வேறு இலாபமீட்டக்கூடிய பயிர்வகைகளில் நாட்டம் காட்டுகின்றனர். 1998ல், ஒரு புசல் கோதுமையின் விலை 2.68 டொலராக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் அறிக்கையொன்றின்படி,[22] 1998ல், கோதுமைக்கான இயக்குச் செலவினம் புசலுக்கு 1.43 டொலராகவும், மொத்தச் செலவு புசலுக்கு 3.97 டொலராகவும் உள்ளது. பயிர் நிலமொன்றின் ஏக்கருக்கான சராசரி விளைச்சல் 41.7 புசலாகவும், (2.2435 மெற்றிக் தொன்/எக்டேயர்) விவசாயப் பண்ணையொன்றில் கோதுமையால் பெறப்படும் வருமானம் 31,900 டொலராகவும் உள்ளது. இங்கு பண்ணையொன்றின் மொத்த வருமானம் (ஏனைய பயிர்களையும் சேர்த்து) 173,681 டொலரும், அரசாங்க உதவிப் பணம் 17402 டொலரும் ஆகும்.எனினும், அறுவடை அளவு, அமைவிடம் மற்றும் பண்ணையின் அளவு என்பவற்றிலுள்ள வேறுபாடுகள் காரணமாக இலாபம் பெறுவதில் சிறிதளவு வேறுபாடுகள் உள்ளன.

2007ல் வடவரைக் கோளம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் குளிர் காலநிலை என்பவற்றாலும், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வரட்சியாலும் கோதுமை விலையில் அதீத உயர்ச்சி ஏற்பட்டது.2007 டிசம்பர் மற்றும் 2008 மார்ச் மாதங்களில் இதுவரை கண்டிராத அளவுக்கு கோதுnnbnbnbமை விலை புசலுக்கு 9 டொலருக்கும் கூடுதலாக அதிகரித்தது.[23] பாஸ்டா விலை அதிகரிப்புக்கு எதிராக இத்தாலியில் அதிக முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

உயிரி எரிபொருள் பாவனை மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வருமான உயர்வு போன்ற காரணிகளும் கோதுமை விலையில் பாதிப்புச் செலுத்துகின்றன. இதன் காரணமாக அரிசி மற்றும் இறைச்சியுணவுகளை உணவாகக் கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது.[24]

உற்பத்தியும் நுகர்வும்

உலகளாவிய கோதுமை உற்பத்தியை விளக்கும் வரைபடம்
கூட்டு அறுவடை இயந்திரம் ஒன்று கோதுமையைச் சூடடிக்கின்றது. பின்னர் உமியை நொருக்கி வயலில் தூவுகிறது.
கூட்டு அறுவடை இயந்திரம் உமியை நீக்கி கோதுமையை இழுவை வண்டியில் ஏற்றுகிறது.

2003ல், உலகளவில் நபருக்கான கோதுமை நுகர்வு 67 kg (148 lb)ஆகக் காணப்பட்டதோடு, நபர்வரி கோதுமை நுகர்வில் முதலிடத்தில் 239 kg (527 lb) கோதுமை நுகர்வுடன் கிர்கிசுத்தான் காணப்படுகிறது.[25] 1997ல், உலகளாவிய நபர்வீத கோதுமை நுகர்வு 101 kg (223 lb)ஆகக் காணப்பட்டதோடு, அதிகளவு கோதுமை நுகர்வை டென்மார்க் கொண்டிருந்தது. டென்மார்க்கின் நபர்வீத கோதுமை நுகர்வு 623 kg (1,373 lb) ஆகும். எனினும், இதில் பெருமளவு (81%) விலங்குணவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.[26] கோதுமை, வட அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் முக்கிய உணவாக உள்ளது. மேலும் ஆசியாவிலும் இது பிரபலம் பெற்று வருகிறது. அரிசியைப் போலல்லாது கோதுமை உற்பத்தி உலகெங்கும் பரவியுள்ளது. எனினும், உற்பத்தியில் ஆறிலொரு பங்கை சீனா உற்பத்தி செய்கிறது.

"1990ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருடாந்த கோதுமை உற்பத்தியில் சிறிய அதிகரிப்புக் காணப்படுகிறது. இது பயிரிடல் பரப்பு அதிகரிப்பினால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, சராசரி அறுவடையில் ஏற்பட்ட அதிகரிப்பேயாகும். 1990களின் முதல் அரைப்பகுதியில், எக்டேயரொன்றுக்கு 2.5 தொன் கோதுமை அறுவடை செய்யப்பட்டது. ஆயினும் 2009ல் இது 3 தொன்னாக இருந்தது. உலக சனத்தொகை அதிகரிப்புக் காரணமாக, 1990க்கும் 2009க்கும் இடையில் நபருக்கான கோதுமை உற்பத்தி நிலப்பரப்பு தொடர்ச்சியாக குறைவடைந்துள்ளது. இக்காலப்பகுதியில், கோதுமை உற்பத்தி நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், சராசரி அறுவடையிலுள்ள முன்னேற்றம் காரணமாக, நபருக்கான கோதுமை உற்பத்தியில் ஒவ்வொரு வருடமும் சிறு தளம்பல்கள் காணப்படுகின்றன. எனினும், குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை. 1990ல் நபர்வரி உற்பத்தி 111.98 kg/நபர்/வருடம் ஆகக் காணப்பட்டது. எனினும் 2009ல், இது 100.62 kg/நபர்/வருடம் ஆக உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி தெளிவாக உள்ளதோடு, 1990ன் நபர்வரி உற்பத்தி மட்டம் சாத்தியமானதாகவும் இல்லை. இதற்குக் காரணம், உலக சனத்தொகை ஏற்பட்டுள்ள அதிகரிப்பாகும். இக்காலப்பகுதியில், மிகக் குறைந்த நபர்வரி உற்பத்தி 2006ல் பதிவாகியுள்ளது."[27]

20ம் நூற்றாண்டில், உலகளாவிய கோதுமை உற்பத்தி ஐந்து மடங்காக அதிகரித்தது. எனினும், 1955 வரை, கோதுமைப் பயிர்ச்செய்கைப் பரப்பு அதிகரிப்பே இதற்குக் காரணமாக இருந்தது. இக்காலப்பகுதியில், பரப்புக்கான கோதுமை உற்பத்தி சிறியளவிலான (20%) அதிகரிப்பையே கொண்டிருந்தது. எவ்வாறாயினும், 1955ன் பின்னர் வருடத்துக்கான கோதுமை உற்பத்தி பத்து மடங்காக அதிகரித்தது. இது உலக கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு பாரிய பங்களிப்பை வழங்கியது. செயற்கை நைதரசன் உரப்பாவனை, நீர்ப்பாசன முறைமைகள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள் மற்றும் விஞ்ஞான முறை பயிர் முகாமைத்துவம் மற்றும் புதிய கோதுமை இனங்கள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞானமுறை பயிர் முகாமைத்துவம் என்பன இந் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு வழிகோலின. வட அமெரிக்கா போன்ற சில பகுதிகளில் கோதுமைப் பயிரிடல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.[28]

சிறந்த விதை களஞ்சியப்படுத்தல் மற்றும் நாற்று உற்பத்தி (இதனால் அடுத்த வருட விதைப்புக்கான விதை ஒதுக்கீடு குறைவடைந்தமை) என்பனவும் 20ம் நூற்றாண்டின் இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாகும். மத்தியகால இங்கிலாந்தில், விவசாயிகள் தமது கோதுமை உற்பத்தியின் கால் பங்கினை அடுத்த வருட விதைப்புக்காக ஒதுக்கினர். இதனால் பாவனைக்கான கோதுமையின் அளவு உற்பத்தியின் முக்கால் பங்காக இருந்தது. 1999ல், விதைக்கான ஒதுக்கீடு உற்பத்தியின் 6%மாக இருந்தது.

கோதுமை உற்பத்தியின் உலகளாவிய பரவல் சில காரணிகளால் தற்போது குறைவடைந்து செல்கிறது. சனத்தொகை அதிகரிப்பு வீதம் வீழ்ச்சியடையும் அதேவேளை, கோதுமை அறுவடை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. மேலும் சோயா அவரை மற்றும் சோளம் போன்ற ஏனைய பயிர்களின் சிறந்த பொருளாதார இலாபம் மற்றும் நவீன மரபியல் தொழில்நுட்பங்கள் மீதான முதலீடுகள் காரணமாக ஏனைய பயிர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

"எவ்வாறாயினும், அதிகரித்துவரும் சனத்தொகை கோதுமை உற்பத்தியில் அதிகரிப்பை வேண்டி நிற்கிறது. மேலும், வளரும் நாடுகளில் இறைச்சி நுகர்வும் இதற்கு ஒரு காரணமாகும். இரண்டாவதற்கான காரணம், அதிக இறைச்சி உற்பத்திக்கு அதிக கால்நடைத் தீவனம் அவசியமாக உள்ளமையாகும். இதனால் சில நாடுகளில் கோதுமை தன்னிறைவடைதல் மாற்றமடைகிறது. ஒரு சிலர் சிறப்பாக வாழ்தல் ஏனையோரின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமையாத ஒரு சிறந்த நிலையை மனித சமுதாயம் அடையும்போது, கோதுமை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பன ஒவ்வொருவரினதும் மிக முக்கிய கடமையாக மாறும். மேலும், தற்போதைய நுகர்வு கொள்கைரீதியில் நிலைத்திருக்கக்கூடியதாயிருப்பினும், நாம் முகங்கொடுக்க வேண்டிய இன்னொரு முக்கிய பிரச்சினை உள்ளது: இப் பிரச்சினையைத் தவிர்த்தாலும், இன்று மக்கள் பட்டினியால் சாகின்றனர். உலகளாவிய ரீதியில் சராசரி நுகர்வு மட்டத்தைப் பார்க்கும் போது உலகின் வெவ்வேறு பகுதிகளில் நுகர்வு மட்டத்தில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கிடையில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிகையான அதேவேளை வீணாகும் உணவு நுகர்வு உள்ளது. ஆயினும், வறிய நாடுகளில், உணவுப் பற்றாக்குறை அல்லது குறைவழங்கல் நிலை காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளில், மக்கள் அதிக நிறை மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும்போது, உலகின் மற்றைய பாகத்து மக்கள் உணவுப்பற்றாக்குறை, குறையூட்டம் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்."[29]

பயிரிடல் முறைமைகள்

கோதுமை அறுவடை செய்யும் பெண், ரைசன் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா

இந்திய மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிகளிலும் வடக்குச் சீனப் பகுதிகளிலும் சிறப்பான நீர்ப்பாசன வசதிகளால் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களில் உரப்பயன்பாட்டின் வளர்ச்சியும் புதிய கோதுமை வகைகளின் கண்டுபிடிப்பும் எக்டேயரொன்றுக்கான அறுவடை அளவை அதிகமாக்கியுள்ளன. அபிவிருத்தியடந்துவரும் நாடுகளில் இக்காலப் பகுதியில் உரப்பயன்பாட்டின் அளவு 25 மடங்காக அதிகரித்துள்ளது. எனினும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதில் உரப்பயன்பாடு மற்றும் புதிய வகை விதைகள் என்பவற்றிலும் பார்க்க பயிரிடல் முறைமைகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. இதற்கு உதாரணமாக ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகளில் நடைபெறும் கோதுமை வேளாண்மையைக் குறிப்பிடலாம். இங்கு மழைவீழ்ச்சி குறைவாயிருந்தாலும், சிறிதளவு நைதரசன் உரப் பயன்பாட்டுடன் வெற்றிகரமான அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. அவரைக் குடும்பத் தாவரங்களைச் 'சுழற்சிமுறை'ப் பயிர்களாகப் பயன்படுத்தியமையே இவ் வெற்றிக்குக் காரணமாகும். மேலும், சென்ற பதிற்றாண்டில், கனோலா வகைத் தாவரத்தை சுழற்சிமுறைப் பயிராகப் பயன்படுத்தியதின் விளைவாக கோதுமை விளைச்சல் 25% அதிகரித்துள்ளது.[30] மழைவீழ்ச்சி குறைந்த இப்பிரதேசங்களில் அறுவடையின் பின் அடிக்கட்டைகளை அகற்றாது விடுவதன் மூலமும் நிலம் பண்படுத்தலைக் குறைப்பதன்மூலமும் நிலத்தடி நீர் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. (மேலும் மண்ணரிப்பும் தடுக்கப்படுகிறது)[31]

2009ல், மிகச்சிறந்த உற்பத்தியுடைய நாடாக பிரான்சு உள்ளது. இதன் உற்பத்தித் திறன் எக்டேயருக்கு 7.45 மெற்றிக் தொன்னாகும். 2009ல் அதிக கோதுமை உற்பத்தியுடைய நாடுகளாக சீனா (115 மில்லியன் மெற்றிக் தொன்கள்), இந்தியா (81 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ரசியா (62 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ஐக்கிய அமெரிக்கா (60 மில்லியன் மெற்றிக் தொன்கள்) மற்றும் பிரான்சு (38 மில்லியன் மெற்றிக் தொன்கள்) என்பன திகழ்கின்றன.[3]

எனினும், இந்நாடுகளில் குறிப்பிடத்தக்களவான அறுவடைக்குப் பின்னான இழப்புகள் நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பயிரிடல் முறைமை தொடர்பான தொழில்நுட்ப அறிவின்மையேயாகும். இதற்கு மேலதிகமாக, மோசமான வீதியமைப்பு, போதுமான களஞ்சியப்படுத்தல் வசதியின்மை, வழங்கல் தொடர்புகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதியின்மை போன்றனவும் காரணங்களாக உள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, கோதுமை உற்பத்தியில் 10% பயிர்நிலங்களில் இழக்கப்படுகின்றன. மேலும் 10% மோசமான களஞ்சியப்படுத்தல் மற்றும் வீதியமைப்புக்களினால் வீணாகின்றன. மேலும் சிறுபகுதி சில்லறைச் சந்தைகளில் இழக்கப்படுகின்றது. சிறந்த உட்கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சில்லறை வலையமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியன மேற்கொள்ளப்பட்டால் 70இலிருந்து 100 மில்லியன் மக்களுக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான உணவை இந்தியாவிலிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும் என ஆய்வொன்று தெரிவிக்கிறது.[32]

படக்காட்சி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோதுமை&oldid=3832419" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை