சபா

சபா அல்லது சாபா (ஆங்கிலம்: Sabah மலாய் மொழி: Sabah அல்லது Saˈbah); என்பது மலேசியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஒன்றாகும். இது போர்னியோ தீவின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ளது.[5][6] சரவாக் மாநிலத்திற்கு அடுத்து, மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வருகிறது.

சபா
Sabah
மாநிலம்
Sabah Negeri Di Bawah Bayu
சபா Sabah-இன் கொடி
கொடி
மாநிலச் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை:
சபா மாஜு ஜெயா
பண்: சபா என் தாயகம்
Sabah Tanah Airku
Sabah, My Homeland
      சபா -       மலேசியா
      சபா -       மலேசியா
ஆள்கூறுகள்: 5°15′N 117°0′E / 5.250°N 117.000°E / 5.250; 117.000
தலைநகரம்கோத்தா கினபாலு
பிரிவுகள்
அரசு
 • யாங் டி பெர்துவா சபாசுகார் மகிருடின்
(Juhar Mahiruddin)
 • முதலமைச்சர்அஜி நூர்
(Hajiji Noor)
(பெர்சத்து)
பரப்பளவு
 • மொத்தம்73,904 km2 (28,534 sq mi)
உயர் புள்ளி (கினபாலு மலை)4,095 m (13,435 ft)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம் 3,418,785
இனங்கள்சபா மக்கள்
மனித வளர்ச்சிச் சுட்டெண்
 • HDI (2019)0.710 (high)
மலேசிய அஞ்சல் குறியீடு88xxx to 91xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்087 (உள் மாவட்டங்கள்)
088 (கோத்தா கினபாலு & கூடாட்)
089 (இலகாட் இடத்து, சண்டக்கான் & தாவாவ்)
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்SA, SAA, SAB, SAC, SY(மேற்கு கரை)
SB (பியூபோர்ட்)
SD (இலகாட் இடத்து)
SK (கூடாட்)
SS, SSA, SM (சண்டக்கான்)
ST, STA, SW (தாவாவ்)
SU (கெனிங்காவு)
முந்தைய பெயர்வடக்கு போர்னியோ
புருணை16-ஆம் நூற்றாண்டு
சூலு சுல்தானகம்1658
பிரித்தானிய வடக்கு போர்னியோ1882
சப்பானிய ஆதிக்கம்1941–1945
இராணுவ நிருவாகம்12.10.1945 - 01.07.1946
பிரித்தானிய காலனித்துவம்01.07.1946 - 16.09.1963
மலேசியாவில் இணைவு16 செப்டம்பர் 1963[1][2][3][4]
இணையதளம்சபா மாநில இணையத்தளம்

சபாவிற்குத் தென்மேற்கே சரவாக் மாநிலம் உள்ளது. சபா மாநிலத்தின் தென் பகுதியில், இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் மாநிலம் எல்லையாகவும் அமைந்து உள்ளது.

மலேசியாவின் மாநிலமாக சபா இருந்தாலும், அது பிரச்சினைக்குரிய நிலப்பரப்பாக இருந்து வருகிறது. பிலிப்பீன்சு நாடு, சபாவின் கிழக்குப் பகுதியை உரிமை கோரி வருகிறது.[7][8] அதைத் தவிர்த்து, சபா மாநிலம் தனக்குச் சொந்தமானது என இந்தோனேசியாவும் உரிமை கொண்டாடுகிறது.

சபாவின் தலைநகரம் கோத்தா கினபாலு ஆகும். இந்த நகரம் முன்பு செசல்டன் என்று அழைக்கப்பட்டது.

சொல் பிறப்பியல்

சபா எனும் பெயர் எப்படி உருவானது என்பது இதுவரையிலும், சரியாக அறியப் படாமல் இருக்கிறது. ஆனால், ஒரு காலக் கட்டத்தில் சபா மாநிலம், புரூணை சுல்தானகத்திற்குச் சொந்தமாக இருந்தது. சபாவின் கடல்கரைகளில் சபா வாழை மரங்கள் நிறைய இருந்தன. அந்த வாழை மரங்களை வைத்து சபா எனும் பெயர் அந்த மாநிலத்திற்கு வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.[9]

மலையில் இருந்து கீழே ஓடி வரும் ஆற்றுக்கு புரூணை மொழியில் சபா என்று பெயர். புரூணை சுல்தானகத்துடன் சபா மாநிலம், நீண்ட காலமாகத் தொடர்பு உடையதாக இருந்ததால், அந்த வகையில் சபா எனும் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று மற்றோர் ஆருடமும் இருக்கிறது.

மப்பூ பிராபஞ்சா

சபாக் (Saba) எனும் மலாய்ச் சொல் பனைமரத்துச் சீனியைக் குறிக்கும். அந்த மலாய்ச் சொல்லில் இருந்து சபா எனும் சொல் வந்து இருக்கலாம். தவிர, அரபு மொழியில் சபா (صباح) என்றால் சூரிய உதயம் என்றும் பொருள்படுகிறது.[10]

பலவிதமான ஆருடங்கள் இருப்பதால் சபா எனும் சொல் எப்படி வந்தது என்பதை நிர்ணயம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.[11] 1365-ஆம் ஆண்டு மப்பூ பிராபஞ்சா (Mpu Prapanca) என்பவர் எழுதிய நகரகிரேதகம (Nagarakretagama) ஜாவானிய நூலில், சபா நிலப்பகுதி ஒரு காலத்தில் ‘செலுடாங்’ (Seludang) என்று அழைக்கப் பட்டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.[12]

புவியியல்

கினபாலு மலை, தென்கிழக்கு ஆசியாவின் உயரமான மலை.
கினபாலு மலைக்குச் செல்லும் மலேசியக் கூட்டரசு நெடுஞ்சாலை 22.
போர்னியோவின் வட கோடி முனை.
கோத்தா கினபாலு மாநகரப் பள்ளிவாசல்
வட போர்னியோ கொடி
சண்டாக்கான் போர்க் கைதிகள் முகாம்
கோத்தா கினபாலு மாநகரம்.

பொதுவாக, சபாவின் மேற்குப் பகுதி மலைப் பிரதேசங்களால் சூழப்பட்டது. மலேசியாவின் மிக உயரமான மலைகளும் இங்குதான் உள்ளன. இதில் குரோக்கர் மலைத்தொடர் பிரதானமானது. இங்கே 1000 மீட்டர்களில் இருந்து 4000 மீட்டர்கள் வரையிலான பல மலைகள் உள்ளன. கினபாலு மலைதான் மிகவும் உயரமான மலை. அதன் உயரம் 4095 மீட்டர்கள். சபா மாநிலத்தின் காடுகள், வெப்பமண்டல மழைக்காடுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த மழைக்காடுகள், பலவகையான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் புகலிடமாக அமைந்துள்ளன. இங்கே மாறுபாடான தாவரங்கள் காணப்படுகின்றன. வேறுபாடான நிலச்சுழல்களும் பரவி உள்ளன. அதனால், 2000-ஆம் ஆண்டு, கினபாலு தேசிய பூங்கா, உலக பாரம்பரியத் தளமாக வரையீடு செய்யப்பட்டது.[13]

கினபாலு மலை

கினபாலு மலைக்கு அருகில் தம்புயூகோன் மலை இருக்கிறது. இதன் உயரம் 2,579 மீட்டர்கள். இந்த மலை மலேசியாவில் மூன்றாவதாக உயரமானது. குரோக்கர் மலைத் தொடருக்கு அருகாமையில் துருஸ்மாடி மலை இருக்கிறது. இது நாட்டின் இரண்டாவது உயரமான மலையாகும். இதன் உயரம் 2,642 மீட்டர்கள். இந்த மலைகளின் ஊடே பல ஆற்றுப் பள்ளத்தாக்குகளும், அடர்த்தியான காடுகளும் உள்ளன.

சபாவின் கிழக்கு பகுதி, பெரும்பாலும் சிறிய மலைத் தொடர்களைக் கொண்டவை. இந்தத் தொடர்களில்தான் கினபாத்தாங்கான் ஆறு உருவாகி, இறுதியில் சூலு கடலில் போய்க் கலக்கிறது. கினபாத்தாங்கான் ஆறு, மலேசியாவிலேயே இரண்டாவது நீளமான ஆறாகும். அதன் நீளம் 560 கி.மீ. ஆகும்.[14]

வரலாறு

மனிதக் குடிபெயர்ப்பு என்று சொல்லும் போது, இந்தப் பகுதியில் ஏறக்குறைய 20,000- 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.[15] தொடக்க கால மனிதர்கள் பொதுவாக ஆஸ்திராலாயிட் அல்லது நிக்ரோயிட் இனத்தைச் சேர்ந்தவர்கள்.[16] அடுத்த மனிதக் குடிபெயர்ப்பு கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்று உள்ளது.[17] இவர்கள் பெரும்பாலும் ஆஸ்திரானேசிய மங்கலோயிடு இனத்தைச் சேர்ந்தவர்கள்.[18]

புருணை பேரரசு

ஏழாம் நூற்றாண்டில், ஸ்ரீ விஜய பேரரசைச் சேர்ந்த விஜயபுரா எனும் பிரிவினர் புரூணை பேரரசில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர்.[19] அந்தக் கட்டத்தில், புரூணை பேரரசின் ஆளுமை சபாவையும் உள்ளடக்கி இருந்தது.[20]

அடுத்து, போனி எனும் ஒரு பேரரசு, 9-ஆம் நூற்றாண்டில் புரூணை நாட்டையும், சபா நிலப் பகுதியையும் ஆட்சி செய்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. புரூணை சுல்தானகம் உருவாவதற்கு முன்னர், இந்த போனி பேரரசு இருந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். அந்தப் பேரரசு புருணை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து உள்ளது.[21]

போர்னியோ சுல்தானகம்

புரூணையின் ஆளுநர் இசுலாம் சமயத்தைத் தழுவிய பின்னர், புரூணை சுல்தானகம் உருவானது. புரூணையின் ஐந்தாவது சுல்தான் போல்கியா ஆட்சி செய்த போது, புரூணை சுல்தானகம் பெரும் நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது. சுல்தான் போல்கியா 1473-இல் இருந்து 1524 வரை ஆட்சி செய்தார். சபா, சூலு தீவுக்கூட்டம், மணிலா, சரவாக், பஞ்சார்மாசின் போன்ற நிலப்பகுதிகள் அந்தச் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.[22]

1650-களில் புருணை சுல்தானகத்தில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அந்தக் கலகத்தை அடக்க சூலு சுல்தானின் உதவிகள் நாடப்பட்டன. கலத்திற்கு ஒரு தீர்வு காணப்பட்டது. அதற்கு நன்றி கூறும் வகையில், போர்னியோவின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் சூலு சுல்தானுக்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர், 1749 இல் ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில், வடக்கு போர்னியோ சுல்தானகம் இசுப்பெயின் நாட்டிற்கு வழங்கப்பட்டது.[23] 1700-ஆம் ஆண்டுகளின் இறுதிவாக்கில், சூலு சுல்தானகத்தின் எல்லா நிலப் பகுதிகளையும் இசுப்பெயின் பெற்றுக் கொண்டது.

லபுவான் தீவு

1761ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியான அலெக்ஸாண்டர் டெல்ரிம்பள் என்பவர், சூலு சுல்தானுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். வட போர்னியோ பகுதியில் பிரித்தானியர்களுக்கு ஒரு வியாபாரத் தளம் வேண்டும் எனும் உடன்படிக்கை. ஆனால், அந்த உடன்படிக்கை தோல்வியில் முடிந்தது. சபாவில் மேற்குக் கரையில் லபுவான் தீவு இருக்கிறது.

இந்தத் தீவை புருணை சுல்தான் 1848ஆம் ஆண்டு, ஓர் உடன்படிக்கையின் மூலம் பிரித்தானியர்களுக்கு எழுதிக் கொடுத்தார். அதன் பின்னர் அந்தத் தீவு பிரித்தானியர்களின் காலனிகளில் ஒன்றாக இணைக்கப் பட்டது.

வட போர்னியோ நிறுவனம்

1881 ஆம் ஆண்டு பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் உருவாக்கப்பட்டது. போர்னியோ தீவுகளில் கிடைக்கும் வாசனைப் பொருள்களை வாங்கிக் கொளும் முழு உரிமையையும் அந்த நிறுவனம் பெற்று இருந்தது.[24] பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் உருவாக்கப்பட்டதும் கூடாட் நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. பின்னர் 1883-இல், சண்டாக்கான் தலைநகரத் தகுதியைப் பெற்றது. 1888-இல் வட போர்னியோ நிலப்பகுதிகள், இங்கிலாந்தின் காப்பு அரசாக அங்கீகாரம் செய்யப்பட்டன.[25]

சப்பானியர் ஆக்கிரமிப்பு

இரண்டாம் உலகப் போரில், சப்பானியர்கள் 1942 ஜனவரி முதலாம் தேதி லபுவானில் தரை இறங்கினார்கள். அதன் பின்னர், அங்கு இருந்து வடக்கு போர்னியோ முழுமையும் கைப்பற்றினர்கள். 1942-இல் இருந்து 1945 வரை வடக்கு போர்னியோ அவர்களின் பிடியில் சிக்கி இருந்தது. தவிர தென் போர்னியோ தீவின் கலிமந்தான் பகுதியும் அவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. சப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டக் கூட்டுப் படைகள், குண்டுகளைப் போட்டு பெரும்பாலான நகரங்களை அழித்துவிட்டன. அவற்றுள் சண்டக்கான் நகரம் குறிப்பிடத் தக்கதாகும்.

சப்பானியர்களின் ஆட்சி காலத்தில் சண்டக்கான் நகரில் பிரித்தானிய, ஆஸ்திரேலியப் போர்க் கைதிகளுக்காக ஒரு சிறைக்கூடம் உருவாக்கப்பட்டது. அந்தச் சிறைக்கூடம் மிகவும் கொடூரமானதாகும். போர்க் கைதிகள் மனிதத் தன்மையற்ற முறையில், மிக மோசமாக நடத்தப்பட்டனர். கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக அந்தச் சிறைக்கூடம், 260 கி.மீ. தொலைவில் இருக்கும் ரானாவ் உள் பகுதிக்கு மாற்றப்பட்டது.

சண்டக்கான் மரண அணிவகுப்பு

அப்போது சண்டாக்கான் சிறைக்கூடத்தில் 2504 கைதிகள் எஞ்சி இருந்தனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர் இறந்து விட்டனர். எஞ்சியவர்கள் ரானாவ் எனும் இடத்திற்கு கால்நடையாக நடக்க வைக்கப் பட்டனர். அந்த நிகழ்ச்சியைச் சண்டாக்கான் மரண அணிவகுப்பு என்று அழைக்கிறார்கள்.[26][27]

போர்க் கைதிகளில் ஆறே ஆறு பேர்தான் தப்பிப் பிழைத்தனர். மற்றவர்கள் அனைவரும் நடைபாதையிலேயே இறந்து போயினர். இரண்டாம் உலகப் போர் 1945 செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி ஒரு முடிவிற்கு வந்தது.[28]

வட போர்னியோ பிரித்தானியர்களிடம் மறுபடியும் வழங்கப்பட்டது. 1946இல் அந்தப் போர்னியோ நிலப் பகுதிகள் பிரித்தானிய அரச காலனியாக மாற்றம் பெற்றது. ஜெசல்டன் எனும் பெயர் சண்டாக்கான் என்று மாறியது. பின்னர், 1963ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்கள் வட போர்னியோவை ஆட்சி செய்தனர்.

மலேசியாவில் இணைதல்

1963 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி, வட போர்னியோ சுயாட்சி பெற்றது. அதற்கு முன் 1962இல் கோபால்ட் ஆணையம் அமைக்கப்பட்டு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மலேசியாவில் இணைவதற்கு வட போர்னியோ மக்களுக்கு சம்மதமா இல்லையா என்று கணக்கெடுப்பு செய்வதே, அந்த வாக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும். பெருவாரியான மக்கள் மலேசியாவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.[29]

சபாவின் முஸ்லீம் சமூகத்திற்கு துன் முஸ்தாபா தலைவராக இருந்தார். முஸ்லீம் அல்லாத பூர்வீகக் குடிமக்களுக்கு துன் புவாட் ஸ்டீபன்ஸ் தலைமை தாங்கினார். சீனச் சமூகத்திற்கு கூ சியாக் சியூ என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1963 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மலேசியா உருவானது. இதில் வட போர்னியோ என்று அழைக்கப்பட்ட சபா, மலாயா, சரவாக், சிங்கப்பூர் ஆகியவை உறுப்பியம் பெற்றன.

வெளிப் பிரச்சினைகள்

மலேசியா தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு இருந்து, 1966-ஆம் ஆண்டு வரை மலாயாவுடன் ஓர் எதிரான போக்கையே இந்தோனேசியா கடைபிடித்து வந்தது. தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில், பிரித்தானியர்களின் ஊடுருவல் விரிவடைந்து செல்வாக்கு அதிகரிப்பதாக இந்தோனேசியா அதிபர் சுகர்ணோ கருதினார். ஆகவே, போர்னியோ முழுமையும் இந்தோனேசியக் குடியரசின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்தார்.[30] ஆனால், அவருடைய வீயூகங்கள் வெற்றி பெறவில்லை.

சபாவின் முதல் முதலமைச்சராக துன் புவாட் ஸ்டீபன்ஸ் பதவி ஏற்றார்.[31] துன் முஸ்தாபா சபாவின் முதல் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.[31] 2008ஆம் ஆண்டு வரை சபாவில் 11 மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

லபுவான் தீவும் அதைச் சுற்றி இருந்த ஆறு சின்னத் தீவுகளும் மலேசியக் கூட்டரசு அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டன. 1984 ஏப்ரல் 16-இல் லபுவான் தீவு, கூட்டரசு நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் கோத்தா கினபாலுவிற்கு மாநகர் தகுதி வழங்கப்பட்டது. மலேசியாவில் மாநகர் தகுதி பெற்ற நகரங்களில் கோத்தா கினபாலு ஆறாவது நகரம் ஆகும். சபா மாநிலத்தில் அதுவே முதல் மாநகரம் ஆகும்.

சிப்பாடான் லிகித்தான் நெருக்கடிகள்

அதே ஆண்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், கினபாலு தேசிய வனப்பூங்காவை ஓர் உலகக் கல்வி, அறிவியல் சின்னமாக அறிவித்தது. அந்த மாதிரியான சிறப்பைப் பெறுவதில், அதுவே மலேசியாவில் முதலாவதாகும். லபுவான் தீவிற்கு அருகாமையில் இருந்த சிப்பாடான், லிகித்தான் தீவுகளின் மீது இந்தோனேசியா சொந்தம் கொண்டாடி வந்தது. அதனால், சில போர் நெருக்கடிகள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கும் மூழும் அபாயமும் ஏற்பட்டது.[32]

இந்த வழக்கு அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 2002-ஆம் ஆண்டு, சிப்பாடான், லிகித்தான் தீவுகள் மலேசியாவிற்குச் சொந்தமானவை என்று அனைத்துலக நீதிமன்றம் அறிவித்தது.[33]]]

பிலிப்பைன்ஸ் கோரிக்கை

மலேசியாவுடன் ஓர் எதிரான போக்கைக் கடைபிடித்து வந்த இந்தோனேசியாவைப் போன்று, வடக்கு போர்னியோவின் கிழக்குப் பகுதியான சபா மாநிலம், பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சொந்தமானது என அந்த நாடு உரிமை கொண்டாடியது. 1963-ஆம் ஆண்டு மலேசியக் கூட்டரசுடன் இணைவதற்கு முன்பு, சபா என்பது வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டு வந்தது.

சூலு சுல்தானகத்தின் மூலமாக பிலிப்பைன்ஸிடம் இருந்து, பிரித்தானிய வட போர்னியோ நிறுவனத்திற்கு, சபா நிலப்பகுதி குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், அந்தக் குத்தகை காலாவதியாகிப் போய்விட்டது.[34] ஆகவே, முறைப்படி சபா என்பது பிலிப்பைன்ஸிற்குச் சொந்தமானது என ஐக்கிய நாட்டுச் சபையில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் அதில் எந்தவித நியாயமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மோரோ முஸ்லீம் தீவிரவாதிகள்

இருப்பினும், மிண்டனாவோ தீவில் இருக்கும் மோரோ முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு மலேசியா மறைமுகமான ஆதரவுகளை வழங்கி வருவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டி வருகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மோரோ மக்கள் சபாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சபாவில் வாழும் மக்கள் மலேசியாவுடன் இணைவதையே விரும்பினர். அவர்கள் பிலிப்பைன்ஸுடனோ அல்லது சூலு சுல்தானகத்துடனோ இணைவதை விரும்பவில்லை.[35] கோபால்ட் ஆணையத்தின் வாக்கெடுப்பின் மூலமாக அந்த உண்மை அறியப்பட்டுள்ளது. ஆகவே, பிலிப்பைன்ஸ் கோரிக்கை செல்லுபடியாகாது என்று ஐக்கிய நாட்டுச் சபை அறிவித்தது.

மக்கள் தொகை

சபா மக்கள் தொகை – 1960 கணக்கெடுப்பு
மக்கள் தொகைவிழுக்காடு
கடசான், டூசுன்
32%
மூருட்
4.9%
பஜாவ்
13.1%
புரூணை மலாய் மக்கள்
0.4%
மற்ற முஸ்லீம் மக்கள்
15.8%
இந்தோனேசியர்கள்
5.5%
பிலிப்பினோக்கள்
1.6%
சீனர்கள்
23%
சான்றுகள்: பிரித்தானிய வட போர்னியோ (1961)
சபா மக்கள் தொகை – 2010 கணக்கெடுப்பு[36]
மக்கள் தொகைவிழுக்காடு
கடசான், டூசுன்
17.82%
மூருட்
3.22%
பஜாவ்
14%
புருணை மலாய் மக்கள்
5.71%
மற்ற முஸ்லீம் மக்கள்
20.56%
சீனர்கள்
9.11%
இதர பூமிபுத்ராக்கள்
1.5%
மலேசியர் அல்லாதவர்
27.81%
சான்றுகள்: மலேசிய புள்ளிவிவரத் துறை
சபா மாநிலத்தின் சமயங்கள் - 2010 கணக்கெடுப்பு
சமயம்வுழுக்காடு
இஸ்லாம்
65.4%
கிறிஸ்துவம்
26.6%
புத்த சமயம்
6.1%
இதர சமயம்
1.6%
சமயம் இல்லாதவர்கள்
0.3%

1900ஆம் ஆண்டுகளில், பிரித்தானியர்கள் சபாவை ஆட்சி செய்த போது அதன் மக்கள் தொகை மூன்று இலட்சமாக இருந்து வந்துள்ளது. பெரும்பாலும் பூர்வீகக் குடிமக்களான கடசான் மக்களே அதிக எண்ணிக்கையில் இருந்து உள்ளனர். 1970ஆம் ஆண்டில் சபாவின் மக்கள் தொகை 651,304. அடுத்து வந்த பத்தாண்டுகளில், அதாவது 1980இல் 929,299 ஆக உயர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் 2,468,246 எனும் எண்ணிக்கையில் மிகத் துரிதமாக உயர்ந்தது. 2010இல் அதன் மக்கள் தொகை 3,117,405 ஆகும். இந்தத் தொகையில் 27 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.[37]

400 விழுக்காடு உயர்வு

சபாவின் மக்கள் தொகை 40 ஆண்டுகளில் 400 விழுக்காடு உயர்ந்தது ஒரு பெரிய பிரச்னையாகக் கருதப்பட்டது. 1970இல் 651,304 இருந்த மக்கள் தொகை 2010இல் 3,117,405 ஆக உயர்ந்து போனது. மலேசியாவில் சிலாங்கூர், ஜொகூர் மாநிலங்களுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான தகுதியையும் அடைந்தது. சட்ட விரோதமாகச் சபாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.[38]

குடியுரிமை குற்றச்சாட்டுகள்

பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் இருந்து குடியேறிய மலாய்க்காரர்கள் மிகுதியாக இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பிலிப்பைன்ஸில் இருக்கும் மிண்டானோ தீவைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரச விசாரணைக் குழு

ஏற்கனவே சபாவில் இருந்த போர்னியோ மக்கள், தங்கள் சொந்தத் தாய் மண்ணிலேயே சிறுபான்மை மக்கள் ஆயினர் எனும் ஆதங்கம் மேலோங்கியது.[39] அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவ சமயத்தைச் சார்ந்தவர்கள். இந்தப் பிரச்னைகளைப் பற்றி ஆய்வு செய்ய, ஓர் அரச விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதனை 2012 ஜூன் மாதம் முதல் தேதி, மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் அறிவித்தார்.[40]

பூர்வீகக் குடிமக்கள்

சபாவில் வாழும் பூர்வீகக் குடிமக்களின் 2010 புள்ளிவிவரங்கள்:

பூமிபுத்ராக்கள்

  • மற்ற பூமிபுத்ராக்கள்:20.56% (640,964)
  • ருங்கூஸ்
  • ஈரானுன்
  • ஆயாபிட்
  • தாதானா
  • லுன் பாவாங்
  • லுன் டாயே
  • திண்டால்
  • தோபிலுங்
  • கிமாராஹாங்
  • சூலுக்
  • உபியான்
  • தாகால்
  • திமோகான்
  • நாபாய்
  • கெடாயான்
  • ஓராங் சுங்கை
  • மாக்கியாங்
  • பாஞ்சார்
  • கானா
  • குய்ஜாவ்
  • தோம்போனாவ்
  • டும்பாஸ்
  • பெலுவான்
  • பவுக்கான்
  • சீனோ
  • ஜாவா

மொழி

சபா மாநிலத்தில் மலாய் மொழி தேசிய மொழியாகப் பயன்படுத்தப் படுகிறது. தவிர, சபா மக்கள் பாக்கூ எனும் வட்டாரப் பேச்சுமொழியைப் பயன்படுத்தி வருகின்றனர். மாநிலத்தின் மற்ற எல்லா இனத்தவரும் மலாய் மொழியையையே மிகப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.

பாக்கூ வட்டாரப் பேச்சுமொழி, இந்தோனேசியப் பூர்வீகக் குடிமக்களின் மொழியில் இருந்து உருவான மொழியாகும்.[42] 19ஆம் நூற்றாண்டில், சபாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் செம்பூர்ணா நிலப்பகுதி, பிலிப்பைன்ஸ் நாட்டை ஆட்சி செய்த ஸ்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதனால், செம்பூர்ணா வட்டார மக்கள், இப்போதும் சபகானோ எனும் ஸ்பானிய மொழியைப் பேசி வருகின்றனர்.[43]

சபா மாநிலத்தில் உள்ள மக்கள், 32 இனவாரியான குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 பிரிவினர் பூமிபுத்ராக்களாகக் கருதப் படுகின்றனர். சபாவில் வாழும் இந்தியர்கள் பூமிபுத்ரா பிரிவில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், இந்தியர்களில் எவரேனும் சபா பூர்வீகப் பெண்களைத் திருமணம் செய்து இருந்தால், அவர்களின் பிள்ளைகள் சட்டப்படி பூமிபுத்ரா தகுதியைப் பெறுகின்றனர்.[44]

கடசான் டூசுன் மக்கள்

பூமிபுத்ரா அல்லாத இனங்களில் சீனர் இனமே பெரிய இனமாக விளங்கி வருகிறது. சபாவில் 13.2 விழுக்காட்டினர் சீனர்கள் ஆகும். பெரும்பாலான சீனர்கள் ஹாக்கா எனும் சீனக் கிளைமொழியைப் பயன்படுத்துகின்றனர். அடுத்து, கண்டனீஸ், ஹொக்கியான் கிளைமொழிகளும் பேசப் படுகின்றன.

கோத்தா கினபாலு, சண்டாக்கான், தாவாவ் போன்ற பெரு நகரங்களில் சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். சபாவின் சுதேசி மக்களில் முதன்மை வகிப்பவர்கள் கடசான், டூசுன் மக்கள் ஆகும். இவர்களுக்கு அடுத்த நிலையில் பாஜாவ், மூருட் மக்கள் உள்ளனர். குறிப்பிட்ட அளவு மலேசிய இந்தியர்களும் இங்கு உள்ளனர்.

சபாவில் இந்தியர்கள்

தென் இந்தியாவில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீபகற்ப மலேசியாவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். அவர்களில் சிலர், வியாபார நோக்கமாகவும், அரசு தொழில் சார்பாகவும் சபாவிற்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் சபாவிலேயே வாழ்ந்து, பின்னர் நிரந்தரவாசிகளாகி விட்டனர். மலேசியக் குடியுரிமை பெற்றவர்கள் சபா நிரந்தரவாசிகள் ஆவதில் பிரச்னை இல்லை. ஈராண்டுகள் கழித்து அவர்களுக்கு சபா குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி வழங்கப் படுகிறது.[45]

ஒருவர் மலேசியக் குடிமகனாக இருந்தாலும், சபா, சரவாக் மாநிலங்களில் நிரந்தரமாகத் தங்குவதற்கு, மாநில அரசின் அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில், இந்தியர்கள் பலர் கடசான், மூருட், பாஜாவ் பெண்களைத் திருமணம் செய்து வாழ்கின்றனர். இந்தப் பெண்களில் பலர் கிறிஸ்துவப் பெண்களாகும். ஓர் இந்திய ஆணுக்கும் ஒரு கடசான் அல்லது பாஜாவ் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை, பூமிபுத்ரா தகுதியைப் பெறுகிறது. மலேசிய அரசியலமைப்பின் 160A (6)(a) சட்டப்பிரிவின் கீழ் அந்த விதி சொல்லப்படுகிறது.[46]

சபா இந்தியர் சங்கம்

ஒரு சில இந்தியர்கள் சீன அல்லது கடசான் பாரம்பரியங்களுடன் ஐக்கியமாகிப் போய் விட்டனர்.[47] அவர்களில் சிலர் பாஜாவ் பெண்களை மணந்து, இஸ்லாம் சமயத்திற்கு மாறியுள்ளனர். சபாவில் 12,600 இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் நலன்களுக்காக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் சபா இந்தியர் சங்கம். இவர்களுக்கு ம. இ. கா அரசியல் கட்சியின் சார்பில் ஒரு கிளையும் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் தலைவராக டாக்டர் வி. ஜோதி என்பவர் இருக்கிறார்.

மலேசியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இந்தியர்கள் பரவலாக இருப்பதைக் காண முடியும். ஆனால், சபாவில் இந்திய மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 2010ஆம் ஆண்டு கணக்குப்படி அவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 12,600 ஆகும். 1775இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் உருவான போது, விவசாயத் துறைக்காக சீனாவில் இருந்து, சீனர்கள் கொண்டு வரப்பட்டனர். சபா மாநிலத்தில் விவசாயத் துறையை வணிக ரீதியில் மேம்படுத்துவதற்காகவே சீனர்கள் அழைத்து வரபட்டனர்.

1881 ஆம் ஆண்டில் பிரித்தானிய வட போர்னியோ நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், சபா மாநிலத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் அமல்படுத்தும் அதிகாரிகளாக சீக்கியர்களும், பஞ்சாபி முஸ்லீம்களும் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அப்படி வந்தவர்கள் லாபுவான், சண்டாக்கான், கோத்தா கினபாலு, தாவாவ் போன்ற நகரங்களில் பணிபுரிந்தனர்.

கேரளா ஆசிரியர்கள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சபா மாநிலம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்ததும், இந்தியாவில் இருந்து மற்றொரு குடியேற்ற அலை வீசத் தொடங்கியது. விரிவடைந்து வந்த கல்வித் திட்டத்தின் கீழ், கேரளாவில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

1960களில் மலேசியக் குடியேற்ற வாரியம், தீபகற்ப மலேசியாவில் இருந்து இந்தியத் தொழிலாளர்களை ரப்பர் தோட்டங்களுக்கு கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழர்களின் எண்ணிக்கையும் கூடியது. இருப்பினும் வேலை ஒப்பந்தம் முடிந்ததும் பலர் திரும்பிச் சென்று விட்டனர். குறைவான எண்ணிகையில் மட்டுமே சிலர் தங்கினர். அப்படி தங்கியவர்கள் பின் நாட்களில் சபா பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர்.

தீபாவளி, வைகாசி, தைப்பூசம் போன்ற திருவிழாக்களைக் கொண்டாடினர். அந்தத் திருவிழாக்கள் இன்று வரை கொண்டாடப்படுகின்றன. வேறு சமயங்களுக்கு மாறிய இந்தியர்கள் கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, நோன்புப் பெருநாள் போன்ற திருநாட்களைக் கொண்டாடுகின்றனர்.

சபாவில் வாழும் இந்தியர்களுக்காகத் தனிப்பட்ட இந்திய வானொலி நிகழ்ச்சிகள் இல்லை. தீபகற்ப மலேசியாவின் அலைவரிசகளையும் அவர்களால் அங்கே கேட்க முடியாது. ஆகவே, அவர்களுக்கு தனி ஓர் இந்திய ஒலிபரப்பு தேவை என்று சபா அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

சமயம்

1963ஆம் ஆண்டு சபா சுதந்திரம் அடைந்த பிறகு, இஸ்லாம் சமயத்தைத் தழுவியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்தது. 1960இல் 37.9 விழுக்காடு முஸ்லீம்கள், 16.6 விழுக்காடு கிறிஸ்துவர்கள் இருந்தனர். மொத்த மக்கள் தொகையில் முப்பது விழுக்காட்டினர் ஆன்மவாதிகளாக இருந்தனர். அவர்கள் உயிர் இல்லாத பொருள்களிலும், இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்வுகளைக் காண்பவர்களாக இருந்தனர்.

இந்த ஆன்மவாதிகளில் பெரும்பாலோர் பூர்வீகக் குடிமக்களாகும். இவர்கள் அடர்ந்த காடுகளில், நாகரிகங்களுக்கு அப்பால் வாழ்ந்து வந்தனர். அண்மைய காலங்களில்தான் தகவல் தொழில்நுட்பம் இவர்களின் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.[48]

2010ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய போது முஸ்லீம்களின் எண்ணிக்கை 65.4 விழுக்காடாக, மிக உயர்ந்து போய் இருப்பது தெரிய வந்தது. அதே சமயத்தில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கையும் 26.6% உயர்ந்து நின்றது. புத்த சமயத்தவர்களின் எண்ணிக்கை 6.1 விழுக்காடாக இருந்தது.

துன் முஸ்தாபா

1969-1975களில் தீவிரமான இஸ்லாமிய நடவடிக்கைகள் உட்புகுத்தப்பட்டதே, முஸ்லீம்களின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு காரணம் ஆகும். அந்தக் காலகட்டத்தில் துன் முஸ்தாபா சபாவின் முதலமைச்சராக இருந்தார். முஸ்லீம்களின் எண்ணிக்கை உயர்வதற்கு மத்திய அரசாங்கமும் மௌனமான சம்மதத்தையும் வழங்கி வந்தது. 14 அக்டோபர் 1969இல் சபா இஸ்லாமிய அமைப்பு உருவாக்கப்பட்டது.[49]

இந்த அமைப்பு சபா மாநிலம் முழுமையும் இஸ்லாமியத்தைப் பரப்புவதில் தீவிரம் காட்டியது. இதற்கு மத்திய அரசாங்கமும் உதவியாக இருந்தது. அரசு நிர்வாகத்திலும், பொதுச் சேவைகளிலும் இஸ்லாமியத்துவம் முன் நிறுத்தப்பட்டது.

இஸ்லாமிய சமய அமைப்புகளுக்கு நிதியுதவிகளும் செய்யப்பட்டன. அதை எதிர்த்தவர்கள் தீவிரவாதிகள் என்றும் பொது நிலையிலிருந்து விலகியவர்கள் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். சிலர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கிறிஸ்துவச் சமயப் பரப்பாளர்கள்

1973 ஆம் ஆண்டு சபா அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இஸ்லாமிய சமயம் சபா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சமயமாக மாற்றம் கண்டது. சபா பூர்வீகக் குடிமக்களை இஸ்லாமியச் சமயத்திற்கு மாற்றுவதில் சபா இஸ்லாமிய அமைப்பு, தீவிரமான பங்கு வகித்தது. இந்தக் கட்டத்தில், இஸ்லாமியச் சமயம் விரிவாக வளர்ச்சி அடைந்தது. சமய மாற்றம் செய்தவர்களுக்கு அன்பளிப்புகள் செய்யப்பட்டன. அரசுப் பணிகள் வழங்கப்பட்டன.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கும் சன்மானங்கள் வழங்கப்பட்டு இஸ்லாமிய சமயத்திற்குள் ஈர்க்கப்பட்டனர். சபா பூர்வீகக் குடிமக்களை கிறிஸ்துவ சமயத்திற்குள் ஈர்த்து வந்த கிறிஸ்துவச் சமயப் பரப்பாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்.[50]

டத்தோ ஹாரிஸ் சாலே

இந்தச் சமயப் பரப்புக் கொள்கை, டத்தோ ஹாரிஸ் சாலே முதலமைச்சராக இருந்த போதும் மேலும் தீவிரம் அடைந்தது. அப்போது டத்தோ ஹாரிஸ், சபா மக்கள் ஐக்கிய முன்னணி எனும் சபா பெர்ஜாயா அரசியல் கட்சியின் தலைவராக இருந்தார்.[51] சீனர்களின் ஆதரவு இல்லாமல், கடசான் கிறிஸ்துவர்களை, சபா முஸ்லீம்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

சபா மாநிலத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருக்க வேண்டும் என்றும், டத்தோ ஹாரிஸ் நேரடியாகவே அறைகூவல் விடுத்தார்.[52] பிலிப்பினோ முஸ்லீம்களும், இந்தோனேசிய, பாகிஸ்தான் முஸ்லீம்களும் சபா மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.[53] அதனால், ஐம்பதே ஆண்டுகளில் சபா மாநிலத்தின் மக்கள் தொகையியல் முற்றாக மாறிப் போனது.

சமய புள்ளிவிவரங்கள்

சபா மாநில 2010 ஆம் ஆண்டு சமயப் புள்ளிவிவரங்கள்:

பொருளியல்

விவசாயம், சுற்றுலா, உற்பத்தி ஆகிய மூன்று முக்கிய வளர்ச்சிப் பிரிவுகளைச் சபா மாநிலம் சார்ந்துள்ளது. பெட்ரோலிய எண்ணெய், எண்ணெய்ப்பனை ஆகிய இரண்டும் அதி முக்கியமான ஏற்றுமதிப் பொருள்களாகும். பெரும்பாலும் வாகனங்கள், கனரக இயந்திரப் பொருள்கள், பெட்ரோலியப் பொருள்கள், உரம், உணவு, உற்பத்திப் பண்டங்கள் சபாவின் இறக்குமதிப் பொருள்களாகும்.[54]

விவசாயம்

பொதுவாவே, சபா காட்டு வளம் நிறைந்த நிலப்பகுதியாகும். பார்க்கும் இடங்கள் எல்லாம் பச்சை பச்சையாக இருக்கும். பசுமை நிறைந்த மாநிலம் என்று சபா புகழப்படுவதும் உண்டு. மழைக் காடுகள் நிறைந்த மாநிலம் என்பதால், நீண்ட காலமாகக் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் தலையாய இறக்குமதி நாடுகளாக விளங்கின.

காட்டு மரங்கள் மிகுதியாக வெட்டப்பட்டு வந்ததால், இயற்கையான காடுகள் பெரும் அளவில் சேதம் அடைந்தன. பிரித்தானியர்கள் கால் பதித்த காலத்தில் காடுகள் கொஞ்சமாக வெட்டப்பட்டன. அவர்கள் போன பிறகு, காடுகள் அளவுக்கு அதிகமாக அழிக்கப்பட்டன என்பதுதான் உண்மை. அதனால், உயிர்ச்சூழல் அமைப்பும் பெரிதும் பாதிப்பு அடைந்தது. அருகி வரும் காட்டு வளங்களைப் பாதுகாக்க, 1982ஆம் ஆண்டு, உடனடிக் காட்டுவளப் பாதுகாப்புத் திட்டங்கள் அமலுக்கு வந்தன.

சண்டாக்கான் வன ஆய்வுக் கழகம்

சண்டாக்கான் வன ஆய்வுக் கழகம் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் முழுமூச்சாக இறங்கியது. இருப்பினும், அந்தக் காலகட்டத்தில்தான் உலகச் சந்தையில் செம்பனைக் கச்சாப் பொருள்களின் விலையும் ஏற்றம் கண்டது. ஆக, காடுகளை அழித்து செம்பனைக் கன்றுகளை நடுவதில் பொதுமக்களும் ஆர்வம் காட்டினர். அரசாங்கமும் தாராளமாக நிதியுதவி செய்தது.

ஆனால், கட்டுப்பாடான முறையில் காடுகளைச் சுத்தப் படுத்தும் முறைக்கு முதலிடம் வழங்கப்பட்டது. காடுகள் விவசாயத்திற்காக அழிக்கப்பட்டாலும், ஒரு கட்டுப்பாடும் ஓர் ஒழுங்கு முறையும் இருந்தது. இன்றும் அந்த முறை பின்பற்றப்படுகிறது. ரப்பர், கொக்கோ, காபி போன்றவை மற்ற விவசாயம் சார்ந்த பொருள்களாகும்.[55]

சுற்றுலா துறை

சுற்றுலாத் துறை சபா மாநிலத்திற்கு நல்ல வருவாயைத் தேடித் தரும் ஒரு முக்கியமான துறையாக இருந்தாலும், அந்தத் துறையில் தனிப் பிரிவாகச் சுற்றுச் சூழல் சுற்றுலாத் துறை இருக்கிறது. இந்தத் துறை அண்மைய காலங்களில் மிகப் பிரபலமாகி வருகிறது. 2012ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்டு மாதம் வரையில் 2,844,597 சுற்றுலாப் பயணிகள் சபாவிற்கு வருகை தந்துள்ளனர்.

சபாவில் தற்சமயம் ஆறு தேசிய வனப் பூங்காக்கள் உள்ளன. மேலும் மூன்று துணைப் பூங்காக்களும் உள்ளன. அவற்றில் ஒன்று கினபாலு தேசிய வனப் பூங்கா. 2000ஆம் ஆண்டில், இந்தப் பூங்கா உலக பாரம்பரியத் தளமாக வரையீடு செய்யப்பட்டது. மலேசியாவில் இவ்வாறு தகுதி பெற்றவை இரண்டே இரண்டு பூங்காக்கள்தான்.

மற்றொரு பூங்கா, சரவாக் குனோங் மூலு தேசிய வனப்பூங்காவாகும்.[56] சபாவில் உள்ள எல்லா வனப் பூங்காக்களையும் சபா வனப்பூங்கா கழகம் பராமரித்து வருகிறது. சபா வனவிலங்கு இலாகா எனும் அமைப்பு விலங்குகளைப் பாதுகாத்தல், விலங்குகளின் புகலிடங்களை நிர்வாகம் செய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது.

சபா வனப்பூங்காக்கள்

  • கினபாலு வனப் பூங்கா - தென்கிழக்கு ஆசியாவில் மிக உயரமான மலை. உயரம் 4,101 மீட்டர் (13,455 அடி).
  • தாபின் வனவிலங்கு பாதுகாப்பு பூங்கா - போர்னியோ யானைகள்,சுமத்திரா காண்டாமிருகங்கள், பாந்தேங் காட்டெருமைகள், போர்னியோ மேகச் சிறுத்தைகள் போன்ற அரிய விலங்குகளின் புகலிடம்.
  • டானும் பள்ளத்தாக்கு பரிமாப்பகம் - ஓராங் ஊத்தான் வனக் காப்பகம்.
  • ஆமைகள் தீவுப் பூங்கா – கடலாமைகள் பாதுகாப்பகம்.
  • துங்கு அப்துல் ரகுமான் பூங்கா – கோத்தா கினபாலு கடல்கரையை ஒட்டியுள்ள ஐந்து தீவுகளின் பூங்கா.
  • சிப்பாடான் பூங்கா – செம்பூர்ணாவிற்கு அருகில் உள்ளது. கடல்வாழ் உயிரினங்களின் காப்பகம்.
  • தீகா தீவு பூங்கா.
  • குரோக்கர் தேசியப் பூங்கா.
  • தாவாவ் மலைத் தொடர் பூங்கா.

துறைமுகங்கள்

சபாவில் ஏழு துறைமுகங்கள் உள்ளன. கோத்தா கினபாலு துறைமுகம், செபங்கார் துறைமுகம், சண்டாக்கான் துறைமுகம், தாவாவ் துறைமுகம், கூடாட் துறைமுகம், கூனாக் துறைமுகம், லகாட் டத்து துறைமுகம் ஆகியவையே அந்தத் துறைமுகங்கள். இந்தத் துறைமுகங்களை சபா துறைமுக நிறுவனம் நடத்தி வருகிறது.

முக்கிய நகரங்கள்

நிலைநகரம்மக்கள் தொகை
1கோத்தா கினபாலு617,972
2சண்டாக்கான்501,195
3தாவாவ்402,400
4லகாட் டத்து213,100
5கெனிங்காவ்195,700
6செம்பூர்ணா140,400
7கூடாட்85,400

சமூகப் பிரச்னைகள்

1970களில் மலேசியாவில் வளப்பம் நிறைந்த மாநிலங்களில் சிலாங்கூர், கோலாலம்பூருக்கு அடுத்து சபா மாநிலம் மூன்றாவது நிலையில் இருந்தது. ஆனால், 2010இல் அது மலேசியாவிலேயே மிகவும் ஏழை மாநிலமாக மாறிப் போனது. அதன் உள்நாட்டு ஒட்டுமொத்த‌ உற்பத்தி, கிளாந்தான் மாநிலத்தைக் காட்டிலும் குறைவாக 2.4% பதிவு செய்யப்பட்டது.1990களில் மலேசியாவின் வறுமைக்கோட்டு எல்லை நாள் ஒன்றுக்கு ஓர் அமெரிக்க டாலராக இருந்தது.

அப்போது மலேசிய மக்களில் 17 விழுக்காட்டினர் அந்த வறுமைக்கோட்டு எல்லையில் இருந்தனர். சபா மக்களின் வறுமைக்கோட்டு எல்லை 30% ஆக இருந்தது. 2009ஆம் ஆண்டு, மலேசியாவின் மற்ற மாநிலங்களின் வறுமைக்கோட்டு எல்லை 30% ஆகக் குறைந்தாலும், சபா மக்களின் வறுமைக்கோட்டு எல்லை மட்டும் 20% இருந்தது. குறையவில்லை.

கரையோர வணிகக் கொள்கை

மலேசியாவில் சேரிப் பகுதிகள் ஒழிக்கப்பட்டு விட்டது என்றாலும் சபாவில் மட்டும் இன்னும் 40 ஆயிரம் சேரிக் குடிசைகள் உள்ளன. கோலாலம்பூர் பகுதிகளில் இருந்த சேரிப்பகுதி வாழ் மக்கள் மலிவு வீடுகளில் குடியேற்றம் செய்யப்பட்டனர். சபா, சரவாக் மாநிலங்களில், கரையோர வணிகக் கொள்கை சுமத்தப்பட்டதே பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.

சபா துறைமுகங்களில் இருந்து தீபகற்ப மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள், மலேசிய நிறுவனங்களைச் சேர்ந்த கப்பல்களில் மட்டுமே ஏற்றப்பட வேண்டும் என்று 1980களில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. பெரும் தொழில் கூட்டு அமைப்புகள் அதிகப்படியான செலவுத் தொகைகளை ஏற்றுமதியாளர்கள் மீது சுமத்தின. அதனால், கிழக்கு மலேசியாவில் வாழ்க்கைச் செலவினங்களும் அளவுக்கு மீறி உயர்ந்து போயின.[57]

சபா நிபுணர்கள் வெளியேற்றம்

கரையோர வணிகக் கொள்கை, சபாவின் தொழில்துறையைப் பாதித்தது. டான் சோங் நிறுவனம் சபாவில் ஒரு பெரிய கார் தொழில்சாலையை உருவாக்குவதற்கு திட்டம் வைத்திருந்தது. ஆனால், அதிகப்படியான கப்பல் செலவுத் தொகைகள் அந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்தி வருகின்றன.[58] அண்மைய காலங்களில், சபாவைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்களும், அதிகத் திறமையுடைய வேலையாட்களும் தீபகற்ப மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வாய்ப்புகளைத் தேடிச் செல்கின்றனர்.

தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸிடம் இருந்து, சபா 5% உரிமைத் தொகை வருமானம் பெற்று வருகிறது. உரிமைத் தொகை வருமானம் போதவில்லை என்று மலேசியாவில் எண்ணெய் எடுத்து வரும் சபா, சரவாக், திரங்கானு மாநிலங்கள் மத்திய அரசாங்கத்தை நெருக்கி வருகின்றன. ஆனால், அந்தக் கோரிக்கை இது வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.[59]

அரசாங்கம்

சபா மாநிலம், மக்களாட்சியைக் கொண்டது. 21 வயதிற்கும் மேற்பட்டவர்கள் அனைவரும், வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர். மாநிலத்தின் தேர்தலை நிர்ணயம் செய்யும் உரிமை மாநில அரசிற்கு இல்லை. அந்த உரிமை மத்திய அரசாங்கத்திற்கு மட்டும்தான் உண்டு.

நிர்வாகம்

மாநிலத்தின் ஆக உயரிய பதவியில் ஆளுநர் இருக்கிறார். அடுத்த நிலையில் மாநிலச் சட்டப் பேரவை இருக்கிறது. அதற்கு அடுத்ததாக, மாநில அமைச்சரவை வருகின்றது. மாநிலத்தின் அதிகாரப்பூர்வத் தலைவராக ஆளுநர் செயல்படுகின்றார். அவருடைய பணிகள் பெரும்பாலும் சடங்காச்சாரங்களைக் கொண்டவையாக உள்ளன. அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவராக முதலமைச்சர் செயல்படுகின்றார்.

அவர் மாநில அமைச்சரவையின் தலைவராகவும் இருக்கின்றார். மாநில சட்டப் பேரவையின் பெரும்பான்மையில் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகின்றார். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாநிலச் சட்டப் பேரவை மாநிலத் தலைநகரமான கோத்தா கினபாலுவில் கூடுகிறது. சபா முதல் அமைச்சர்கள் பட்டியல்:

#முதலமைச்சர்பதவியில்வெளியானதுகட்சி
1துன் புவாட் ஸ்டீபன்ஸ் (முதல் தவணை)16.09.196331.12.1964பாரிசான் நேசனல் (தேசிய ஐக்கிய கடாசான் அமைப்பு)
2பீட்டர் லோ சுய் இன்01.01.196512.05.1967பாரிசான் நேசனல் (சபா சீனர் சங்கம்)
3முஸ்தபா ஹரூண்12.05.196701.11.1975பாரிசான் நேசனல் (அஸ்னோ)
4முகமட் சையட் கெருவாக்01.11.197518.04.1976பாரிசான் நேசனல் (அஸ்னோ)
5துன் புவாட் ஸ்டீபன்ஸ் (2ஆம் தவணை)18.04.197606.06.1976பாரிசான் நேசனல் (பெர்ஜாயா)
6ஹாரிஸ் சாலே06.06.197622.04.1985பாரிசான் நேசனல் (பெர்ஜாயா)
7ஜோசப் பைரின் கித்திங்ஙான்22.04.198517.03.1994சபா ஒற்றுமைக் கட்சி
(1985–1986)
பாரிசான் நேசனல் (சபா ஒற்றுமைக் கட்சி)
(1986–1990)
சபா ஒற்றுமைக் கட்சி
(1990–1994)
8சக்கரான் டாண்டாய்17.03.199427.12.1994பாரிசான் நேசனல் (அம்னோ)
9சாலே சையட் கெருவாக்27.12.199428.05.1996பாரிசான் நேசனல் (அம்னோ)
10யோங் தெக் லீ28.05.199628.05.1998பாரிசான் நேசனல் (முன்னேற்றக் கட்சி)
11பெர்ணார்ட் டொம்போக்28.05.199814.03.1999பாரிசான் நேசனல் (உப்கோ)
12ஓசு சுக்காம்14.03.199927.03.2001பாரிசான் நேசனல் (அம்னோ)
13சோங் கா கியாட்27.03.200127.03.2003பாரிசான் நேசனல் (மலேசிய முற்போக்கு மக்களாட்சி கட்சி)
14மூசா அமான்27.03.2003தற்போது
வரையில்
பாரிசான் நேசனல் (அம்னோ)

அரசியல்

சட்டமன்றப் பேரவை

சபா மாநில சட்டமன்றப் பேரவை
அரசியல்
கட்சி
சட்டமன்றப்
பேரவை
நாடாளுமன்ற
உறுப்பினர்கள்
அம்னோ3213
சபா ஒற்றுமைக் கட்சி123
உப்கோ44
மலேசிய முற்போக்கு மக்களாட்சி கட்சி21
மலேசிய சீனர் சங்கம்10
சபா மக்கள் ஒற்றுமை கட்சி11
சபா முற்போக்கு கட்சி22
ஜனநாயக செயல் கட்சி11
சான்று: மலேசியத் தேர்தல் ஆணையம்

சபா மாநிலத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அத்தொகுதிகளை மலேசியத் தேர்தல் ஆணையம் எல்லைப் பிரித்து வரைந்துள்ளது. மலேசிய நாடாளுமன்றத்தில் சபா மாநிலத்தைப் பிரதிநிதித்து 25 உறுப்பினர்கள் உறுப்பியம் பெற்றுள்ளனர்.[60]

1963ஆம் ஆண்டு, மலேசியாவில் இணைவதற்கு முன் வட போர்னியோ இடைக்கால அரசாங்கம், 20 புள்ளி ஒப்பந்தத்தை ஒரு கட்டுப்பாட்டுக் கோரிக்கையாக மலாயா அரசாங்கத்திடம் முன் வைத்தது. அந்த ஒப்பந்தத்தை மலாயா அரசாங்கம் ஒப்புக் கொண்டது.

ஹாரிஸ் சாலே

மாநில உரிமைகள் பாதுகாக்கப் படுமானால், மலேசியாவில் இணைவதற்கு மாநில சட்டப் பேரவை இணக்கம் தெரிவித்தது. பின்னர், தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலமாக சபா, மலேசியாவில் இணைந்தது.

பெர்ஜாயா கட்சியின் தலைவர் ஹாரிஸ் சாலே முதலமைச்சரான பிறகு, சபா மாநிலத்தின் தன்னாட்சி உரிமை, சன்னம் சன்னமாகத் தேய்ந்து விட்டதாக பெருவாரியான சபா மக்கள் கருதுகின்றனர். மத்திய அரசாங்கத்தின் செல்வாக்கும் மேலாதிக்கமுமே அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.[61]

அரசியல் பொது

சபா வாழ் மக்களிடையே சில அரசியல் ஆதகங்கள் மேலோங்கி வருகின்றன. லபுவான் தீவு மத்திய அரசாங்கத்துடன் இணைக்கப் பட்டதும்,. சபா மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய பெட்ரோலிய உரிமைத் தொகை வருமானத்தில் சமன் இல்லாமையும் அந்த ஆதங்கங்களில் அடக்கமாகின்றன.

அதன் விளைவாக மத்திய அரசாங்கத்திற்கு எதிரான மனப்பான்மையும், சலிப்பான போக்கும் சபா மக்களிடையே பரவலாகப் பெருகி வருகின்றன. மத்திய அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் எனும் அறைகூவல்களும் தொடுக்கப்பட்டு வருகின்றன.[62]

2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் வரையில், கிளாந்தான், திராங்கானு, சபா ஆகிய மூன்று மலேசிய மாநிலங்கள் மட்டுமே எதிர்க்கட்சிகளினால் ஆட்சி செய்யப்பட்டுள்ளன. 1985ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில், டத்தோ ஸ்ரீ ஜோசப் பைரின் கித்திங்கானின் சபா ஒற்றுமைக் கட்சி வெற்றி பெற்றது.

பாரிசான் நேசனல்

அந்தக் கட்சி 1994-ஆம் ஆண்டு வரை சபாவை ஆட்சி செய்தது. 1994-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில், சபா ஒற்றுமைக் கட்சி வெற்றி பெற்றாலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள், பாரிசான் நேசனல் கட்சிக்குள் கட்சி தாவல் செய்தனர். இதனால், பாரிசான் நேசனல் கட்சி பெரும்பான்மை பெற்றது. மாநில அரசாங்கத்தையும் கைப்பற்றியது.[63]

1994ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பின் முகமது தனித்தன்மை வாய்ந்த ஓர் அரசியல் நடைமுறையை அமல்படுத்தினார். சபாவின் பூர்வீகக் குடிமக்களைப் பிரதிநிதித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு முதலமைச்சர் பதவி வகிக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

ஆனால், அந்தத் திட்டம் அதிகப் பிரச்னைக்கு உரியதாகிப் போனது. மிகக் குறுகிய கால அவகாசத்தில் நீண்ட காலச் செயல்திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போயின. அந்தத் திட்டம் தோல்வியானது.[64] தற்சமயம் சபா மாநிலச் சட்டப் பேரவையில் தேசிய முன்னணி கட்சிக்கு அதிகப் பெரும்பான்மை இருப்பதால் முதலமைச்சர் சுற்றுத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.

மேற்கோள்கள்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


மேலும் காண்க

மலேசியாவின் மாநிலப் பிரிவுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சபா&oldid=3931206" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை