இந்தோனேசியா

தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு

இந்தோனேசியா அல்லது இந்தோனேசியக் குடியரசு (ஆங்கிலம்: Indonesia அல்லது Republic of Indonesia) என்பது தென்கிழக்காசியா, மற்றும் ஓசியானியா பகுதிகளில் 17,508 தீவுகளைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் 33 மாநிலங்கள் உள்ளன.[2]

இந்தோனேசிய குடியரசு
Republik Indonesia
கொடி of இந்தோனேசியாவின்
கொடி
சின்னம் of இந்தோனேசியாவின்
சின்னம்
குறிக்கோள்: பின்னேகா துங்கால் இகா
சாவா மொழி: வேற்றுமையில் ஒற்றுமை
நாட்டுப்பண்: இந்தோனேசியா ராயா
இந்தோனேசியாவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
சகார்த்தா
ஆட்சி மொழி(கள்)இந்தோனேசிய மொழி
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
சொக்கோ விடோடோ
• துணை அதிபர்
இயூசுஃபு கல்லா
விடுதலை 
• பிரகடனம்
ஆகத்து 17 1945
• அங்கீகாரம்
திசம்பர் 27 1949
பரப்பு
• மொத்தம்
1,904,569 km2 (735,358 sq mi) (16-ஆவது)
• நீர் (%)
4.85%
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
275,273,774 (4 ஆவது)
• 2020 கணக்கெடுப்பு
270,203,917
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
$3.995 டிரில்லியன் (7th)
• தலைவிகிதம்
$14,535[1] (104 ஆவது)
மமேசு (2019)0.718
உயர் · 107-ஆவது
நாணயம்உருப்பியா (IDR)
நேர வலயம்ஒ.அ.நே+7 தொடக்கம் +9 (பல)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+7 தொடக்கம் +9 (இல்லை)
அழைப்புக்குறி62
இணையக் குறி.id

இந்த நாட்டில் 275 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. உலகில் மிக அதிகமான முசுலிம் மக்களைக் கொண்ட நாடு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தையும், அதிபரையும் கொண்ட ஒரு குடியரசு. சகார்த்தா பெருநகரம் இந்த நாட்டின் தலைநகரம். பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா ஆகிய நாடுகள் இந்த நாட்டின் எல்லைகளில் உள்ளன.

சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆத்திரேலியா ஆகிய நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, குழு-20 முக்கிய பொருளாதாரங்கள் (G20 or Group of Twenty) அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி (17th-largest by nominal GDP) அடிப்படையில் உலகின் 17-ஆவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை (Purchasing power parity (PPP) அடிப்படையில் 15-ஆவது இடத்திலும் உள்ளது.

பொது

இந்தோனேசியத் தீவுகள், குறிப்பாக சாவகம் (சாவா) 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு (Homo erectus) மனிதர்களின் வாழ்விடமாக இருந்துள்ளன. அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் இருந்து, இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முக்கியமான ஒரு வணிகப் பகுதியாக இருந்து வருகிறது. முதலில் சிறீவிசய இராச்சியம், பின்னர் மயபாகித் பேரரசு போன்ற பேரரசுகள் இந்தியாவுடனும் சீனாவுடனும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.

சீனாவுக்கான வணிகப் பாதையில் இந்தோனேசியத் தீவுகள் அமைந்து இருப்பதால், நறுமணப் பொருட்களின் வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பகுதியை ஆண்ட உள்ளூர் ஆட்சியாளர்கள் பொதுக் காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் இருந்தே பிற பண்பாட்டு, சமய, அரசியல் மாதிரிகளை உள்வாங்கி வந்தனர்.

வெளிநாட்டு வல்லரசுகள்

இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில், இந்து மற்றும் பௌத்த இராச்சியங்கள் செழித்திருந்தன. மத்திய காலத்தில் இந்தப் பிரதேசம் இசுலாமிய ஆதிக்கத்துக்கு உள்ளானது. இந்த நாட்டின் இயற்கை வளங்களால் கவரப்பட்ட வெளிநாட்டு வல்லரசுகள் இந்தோனேசிய வரலாற்றில் செல்வாக்குச் செலுத்தின.

கண்டுபிடிப்புக் காலம் என அழைக்கப்படும் காலத்தில், மலுக்குத் தீவுகளின் வாசனைப் பொருள் வணிகத்தின் தனியுரிமைக்காக ஐரோப்பிய வல்லரசுகள் போட்டியிட்டன. அதே வேளையில் கிறித்தவ மதத்தையும் அறிமுகப்படுத்தின. இப்பிரதேசம் சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலனித்துவப் பிரதேசமாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு 1945-ஆம் ஆன்டில் தனது விடுதலையை அறிவித்தது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியா 1949-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை 1953-ஆம் ஆண்டில் இந்த நாட்டை அங்கீகரித்தது.

பெயர்

இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் இந்தியா எனப் பொருள்படும் இந்துசு (indus) மற்றும் தீவுகள் எனப் பொருள்படும் நேசோசு (nesos) எனும் சொற்களின் இணைப்பாகும். விடுதலை பெற்ற இந்தோனேசியா உருவாவதற்குப் பல காலங்களுக்கு முன்னரே, 18-ஆம் நூற்றாண்டில் இந்தப் பெயர் தோன்றியது.

1850-ஆம் ஆண்டில் சார்ச் விண்சர் ஏர்ல் (George Windsor Earl) என்னும் ஆங்கிலேய இனவியலாளர், இந்திய தீவுக்கூட்டம், அல்லது மலாயா தீவுக்கூட்டம் என அழைக்கப்பட்ட இப்பகுதியின் மக்களுக்கு இந்துனேசியர் (Indunesians) அல்லது மலாயுனேசியர் (Malayunesians) என்னும் பெயர்களை முன்மொழிந்தார்.

இதே வேளையில், அவருடைய மாணவரான சேம்சு ரிச்சார்ட்சன் லோகன் (James Richardson Logan) என்பவர் இந்தியத் தீவுக்கூட்டம் என்பதற்கு ஒத்த பொருளில் இந்தோனேசியா என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். நெதர்லாந்து அறிஞர்கள் தம் நூல்களில் இந்தோனேசியா என்ற பெயரைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டினர்.

மலாயா தீவுக் கூட்டங்கள்

அவர்கள், மலாயத் தீவுக்கூட்டம் (Maleische Archipel), நெதர்லாந்துக் கிழக்கிந்தியா, இண்டீ, கிழக்கு, "இன்சுலிந்தே" (Insulinde) போன்ற பெயர்களைப் பயன்படுத்தினர். 1900-க்குப் பின்னர் இந்தோனேசியா என்னும் பெயர் நெதர்லாந்துக்கு வெளியே பொதுவான பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தோனேசியத் தேசியவாதக் குழுக்கள் ஓர் அரசியல் வெளிப்பாடாக இந்தப் பெயரைப் பயன்படுத்தின. பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடொல்ப் பசுட்டியன் (Adolf Bastian) என்பவர் எழுதிய இந்தோனேசியா அல்லது மலாயா தீவுக் கூட்டங்கள், 1884–1894 (Indonesien oder die Inseln des Malayischen Archipels, 1884–1894) என்னும் நூல் மூலமாக இப்பெயரைப் பரவலாக அறிமுகப்படுத்தினார்.

கி அயார் தேவந்தாரா (Ki Hajar Dewantara) என்பவர் 1913-ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் இந்தோனேசிய பேர்சு-பியூரோ (Indonesisch Pers-bureau) என்னும் பெயரில் பத்திரிகைப் பணியகம் ஒன்றைத் தொடங்கியதன் மூலம், இந்தோனேசியா எனும் பெயரைப் பயன்படுத்திய முதல் இந்தோனேசிய அறிஞர் ஆனார்.

வரலாறு

கிபி 800-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு போரோபுதூர் கப்பல் சிற்பம், போரோபுதூரில் உள்ளது. கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே இந்தோனேசிய வள்ளங்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரைகளுக்கு வணிகப் பயணம் சென்று இருக்கலாம்.[3]

கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களும், கருவிகளின் எச்சங்களும், இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 35,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சாவா மனிதன் என அழைக்கப்படும் ஓமோ இரெக்டசுக்கள் (Homo erectus) வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன.[4][5][6]

ஓமோ சப்பியன்கள் (Homo sapiens) 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்தனர்.[7] 42,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மக்கள் பெருமளவில் பெரிய ஆழ்கடல் மீன்களைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்பதற்கும்; அதனால், உயர் அளவான கடலோடும் திறமை இவர்களுக்கு இருந்தது என்பதற்கும்; இதன் மூலம் ஆழ்கடலைக் கடந்து ஆசுத்திரேலியாவையும் பிற தீவுகளையும் எட்டக்கூடிய அளவு தொழில்நுட்பம் இவர்களிடம் இருந்தது என்பதற்கும் 2011-ஆம் ஆண்டில் சான்றுகள் கிடைத்துள்ளன.[8]

மெலனீசிய மக்கள்

தற்கால இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக வாழும் ஆசுத்திரோனீசிய மக்கள், தைவான் நிலப் பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்குள் குடியேறியவர்கள்.[9] கி.மு. 2000 அளவில் வந்த இவர்கள், இந்தத் தீவுக் கூட்டங்களுக்குள் பரவிய போது, முன்னர் குடியேறி இருந்த மெலனீசிய மக்களை தூர கிழக்குப் பகுதிகளுக்குள் முடக்கினர்.

வேளாண்மைக்கான சிறப்பான நிலைமைகளும், கி.மு. 8-ஆம் நூற்றாண்டிலேயே ஈரநில நெல் பயிரிடுதலில் இவர்கள் பெற்றிருந்த திறமையும்,[10] கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஊர்களும், நகரங்களும், சிறிய இராச்சியங்களும் தோன்றக் காரணமாகின. கடற்பாதையில் இந்தோனேசியாவின் முக்கிய அமைவிடம், தீவுகளுக்கு இடையிலான வணிகத்தையும், கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே காணப்பட்ட இந்திய, சீன இராச்சியங்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பன்னாட்டு வணிகத்தையும் ஊக்குவித்தது.[11]

அப்போது இருந்த அடிப்படையில் வணிகமே இந்தோனேசிய வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணியாகச் செயற்பட்டது.[12][13]

சாதிக்காய்ச் செடி இந்தோனேசியாவின் பண்டாத் தீவைத் தாயகமாகக் கொண்டது. ஒரு காலத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த பண்டமாகக் கருதப்பட்ட இதுவே ஐரோப்பிய வல்லரசுகளை இந்த நாட்டுக்கு ஈர்த்தது.

போரோபுதூர் பிராம்பானான் வரலாற்றுச் சின்னங்கள்

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்து வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயங்களின் செல்வாக்கினாலும், சிறீவிசய இராச்சியம் சிறப்புற்று விளங்கியது.[14][15] 8-ஆம் 10-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மத மாதரம்வம்சமும் சாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கின. பின்னர் வீழ்ச்சி அடைந்தன.

மேற்படி வம்ச ஆட்சிகளின் போது, மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்களான சைலேந்திர வம்சத்தின் போரோபுதூர் ஆலயம்; மத்தாராம் வம்சத்தின் பிராம்பானான் ஆலயம்; போன்றவை வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன.

மயபாகித் பேரரசு

இந்து இராச்சியமான மாசாபாகித் கிழக்கு சாவகத்தில் 13-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. காச்சா மாடா அல்லது காச்சா மடன் என்னும் தளபதியின் கீழ் இந்த இராச்சியத்தின் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.[16]

இசுலாமியக் காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே முசுலிம் வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஊடாகப் பயணம் செய்திருந்த போதிலும், 13-ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திராவில் இருந்தே இந்தோனேசியாவில் இசுலாத்தைத் தழுவிய மக்கள் வாழ்ந்ததற்கான முதல் சான்றுகள் கிடைக்கின்றன.[17]

பிற இந்தோனேசியப் பகுதிகள் படிப்படியாக இசுலாத்தை ஏற்றுக் கொண்டன. 16-ஆம் நூற்றாண்டின் முடிவில் சுமாத்திராவிலும், சாவகத்திலும் இசுலாமே முதன்மை மதமாக விளங்கியது. இசுலாம் இப்பகுதிகளில் ஏற்கனவே பெரும்பாலும் இருந்த பண்பாட்டு சமயச் செல்வாக்குகளோடு கலந்தே இருந்தது. இது இந்தோனேசியாவில், சிறப்பாக சாவகத்தில், இசுலாமியப் பண்பாட்டு வடிவம் உருவாவதற்கு காரணம் ஆனது.[18]

ஐரோப்பியர்களின் வருகை

1512-ஆம் ஆண்டில் போத்துக்கேய வணிகர்கள் பிரான்சிசுக்கோ செராவோ (Francisco Serrão) தலைமையில், மலுக்கு பகுதியில், சாதிக்காய், கராம்பு, வால்மிளகு போன்ற வணிகப் பொருட்களின் வணிகத்தில் தனியுரிமை பெற்றுக் கொள்ள முயன்றனர். அப்போதே இந்தோனேசிய மக்களுக்கு ஐரோப்பியர்களுடன் முறையான தொடர்பு ஏற்பட்டது.[19]

போத்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (நெதர்லாந்து), ஆங்கிலேயரும் வந்தனர். 1602-இல் இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை (Dutch East India Company) நிறுவிய ஒல்லாந்தர் முதன்மையான ஐரோப்பிய வல்லரசு ஆகினர். முறிவு நிலை எய்தியதைத் தொடர்ந்து, 1800-இல் இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டு டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகள் (Dutch East Indies) நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டன.[20]

நிருவாகப் பிரிவு

இந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் ஐந்து சிறப்பு தகுதிநிலையை பெற்றவையாகும். சகார்த்தா, அச்சே, பப்புவா, மேற்கு பப்புவா, யோக்யகார்த்தா என்பவை அந்த ஐந்து சிறப்பு மாகாணங்களாகும். இவற்றின் சட்ட மன்றங்கள் மற்ற மாகாணங்களின் சட்ட மன்றங்களை விட அதிக அதிகாரங்களை கொண்டுள்ளன.

அச்சே மாகாணம் இசுலாமிய சட்டத்தின் மாதிரியை 2003 இல் இங்கு அறிமுகப்படுத்தியது [21]. இச்சட்டம் வேறு எந்த மாகாணத்திலும் கிடையாது. இந்தோனேசிய விடுதலைப்போரில் யோக்யகார்த்தா கொடுத்த தீவிர பங்களிப்பால் 1950 இல் அதற்கு சிறப்பு தகுதி கொடுக்கப்பட்டது. பப்புவாவிற்கு சிறப்பு தகுதி 2001 இல் கொடுக்கப்பட்டது. 2003 பிப்பரவரி அன்று இது பப்புவாகவும் மேற்கு பப்புவாகவும் பிரிக்கப்பட்டன [22][23]. சகார்த்தா நாட்டு தலைநகரானதால் அதற்கு சிறப்பு தகுதி வழங்கப்பட்டது.

மாநிலங்கள்

  • சுமாத்திரா தீவில் 10 மாநிலங்கள்
  • சாவா தீவில் 6 மாநிலங்கள்
  • போர்னியோ தீவில் 5 மாநிலங்கள்
  • சுலாவெசி தீவில் 6 மாநிலங்கள்
  • மலுக்கு தீவில் 2 மாநிலங்கள்
  • மேற்கு நியு கினி தீவில் 2 மாநிலங்கள்
  • சுந்தா தீவுகளில் (தென்கிழக்கு தீவுகள்) 3 மாநிலங்கள்


மக்கள் தொகையியல்

2010 ஆம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்தோனேசியாவின் மக்கள் தொகை 237.6 மில்லியன்[24]. இதில் 58% மக்கள் சாவகத் தீவில் வாழ்கின்றனர் [24]. 2020 இல் மக்கள் தொகை 265 மில்லியன் ஆகவும் 2050 இல் 306 மில்லியன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 300 தனித்தன்மை வாய்ந்த இனக்குழுக்கள் உள்ளன, 742 வகையான மொழிகள் பேசப்படுகின்றன [25][26].

பெரும்பாலான இந்தோனேசிய மக்கள் ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் சார்ந்தவர்கள். இவர்கள் மூலம் தைவானாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மற்றொரு பெரும் குழு மேலனேசியர்கள். இவர்கள் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் வாழ்கின்றனர் [27].

பெரிய இனக்குழு

இந்நாட்டின் பெரிய இனக்குழு சாவகத்தவர்கள் ஆவர் அவர்கள் மக்கள் தொகையில் 42% உள்ளனர். இவர்களே நாட்டின் அரசியலிலும் பண்பாட்டிலும் செல்வாக்கு செலுத்துபவர்கள் [28]. சுண்டா இனத்தினர், மலாயர், மதுராவினர் ஆகியோர் மற்ற பெரிய இனக்குழுக்களாகும் [29]. சீன இந்தோனேசியர்கள் மக்கள் தொகையில் 3-4% உள்ளனர் .[30]. நாட்டின் பெரும்பாலான தனியார் தொழிற்றுறைகள் இவர்கள் வசம் உள்ளன [31][32]. இதனால் சீனர்கள் மீது மற்றவர்கள் வெறுப்பு கொண்டு, அவர்களுக்கு எதிராக கலவரங்களும் நடந்துள்ளன.[33][34][35].

இந்தோனேசிய மொழி

இந்தோனேசியம் இதன் தேசிய மொழியாகும். இது மலாய் மொழியை ஒத்தது. சொகூர் சுல்தானகம் பேசப்பட்ட மலாய் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இந்தோனேசிய மொழி நாட்டின் பள்ளிகள் அனைத்திலும் கற்பிக்கப்படுகிறது.

இதுவே நாட்டின் வணிகத்திலும் அரசியலிலும் ஊடகங்களிலும் கற்பித்தலிலும் பயன்படும் மொழியாகும். எனவே இது நாட்டின் அனைத்து மக்களாலும் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்தோனேசிய மொழியுடன் உள்ளூர் மொழி ஒன்றையும் பேசுகின்றனர்.

அவற்றுள் சாவகம் (மொழி) அதிகம் பேசப்படும் மொழியாகும். 2.7 மில்லியன் மக்கள் தொகையுடைய பப்புவா நியூ கினியில் 270 இற்கு மேற்பட்ட பப்புவா மொழிகள், ஆத்திரனேசிய மொழிகளை பேசுகின்றனர் [36].

சமயங்கள்

இந்தோனேசியாவின் மக்களில் பெரும்பான்மையோர் இசுலாமிய சமயத்தை பின்பற்றினாலும் இது இசுலாமிய நாடு அல்ல. மதச் சுதந்திரம் இந்தோனேசிய அரசியலமைப்பில் உள்ளது [37]. அரசாங்கம் இசுலாம், பௌத்தம், இந்து, ரோமன் கத்தோலிகம், சீர்திருத்த கிறித்தவம், கன்பூசியம் ஆகிய 6 சமயங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்துள்ளது [38]. 2010 ஆம் ஆண்டு கணக்கின் படி 87.2% மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றுகின்றனர் .[39] .

பெரும்பான்மையான இசுலாமியர்கள் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். 9% மக்கள் கிறித்துவத்தையும் 3% மக்கள் இந்து சமயத்தையும் 2% மக்கள் பௌத்தத்தையும் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான இந்தோனேசிய இந்துக்கள் பாலி தீவைச்சார்ந்தவர்கள் [40]. பௌத்த சமயத்தை பின்பற்றுபவர்கள் சீனர்கள் [41].

தற்போது இந்து பௌத்த சமயங்களை சிறுபான்மையினர் பின்பற்றினாலும் இவற்றின் தாக்கம் இந்தோனேசியப் பண்பாட்டில் அதிகம். இசுலாம் சமயம் 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திரா தீவு மக்களால் முதலில் ஏற்கப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டு அளவில் நாட்டின் பெரும்பான்மை சமயமாக மாறியது [42]. கத்தோலிகம் போர்த்துகீசியர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது[43][44]. சீர்திருத்த கிறித்தவம் ஒல்லாந்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது [45][46][47].

புவியியல்

இந்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள் .[48]. இவற்றின் தீவுகள் நிலநடுக்கோட்டுக்கு இரு புறமும் உள்ளன. போர்னியோ, சுமாத்திரா, சாவகம், நியூ கினி, சுலாவெசி என்பவை பெரிய தீவுகளாகும். இது போர்னியோ தீவில் மலேசியாவுடனும் புரூணையுடனும், நியு கினி தீவில் பப்புவா நியூ கினியுடனும் திமோர் தீவில் கிழக்கு திமோர் நாட்டுடனும் நில எல்லைகளை கொண்டுள்ளது.

சகார்த்தா மாநகரம்

சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆத்திரலேசியா, பலாவு போன்றவற்றுடன் கடல் எல்லைகளை கொண்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான சகார்த்தா சாவகம் தீவில் உள்ளது. சகார்த்தா மாநகரே உலகின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகக் கருதப்படுகிறது. இதன் பரப்பளவு 1,919,440 சதுர கிமீ ஆகும். நிலப்பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால் இது உலகின் 16 ஆவது பெரிய நாடாகும்

இந்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 134. சாவகத் தீவு உலகின் அதிகளவு மக்களை கொண்டதாகும் [49]. இதன் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 940.

இந்தோனேசியா எரிமலை வளையத்தைச் சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன[50].

பொருளாதாரம்

தனியார் துறையும் அரசு துறையும் கலந்த பொருளாதாரம் இந்தோனேசியாவினுடையது.[51]. தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தோனேசியா பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். இது சி-20 இன் உறுப்பினர்[52]. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2012 ஆண்டில் 928,274 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .[53].

2010 ஆம் ஆண்டு கணக்குப்படி தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.4% பங்கும், சேவைத்துறை 37.1% பங்கும், வேளாண்மை 16.5% பங்கும் வகிக்கின்றன. 2010 இல் இருந்து சேவைத்துறை மற்ற துறைகளை விட அதிக அளவில் மக்களை பணியில் அமர்த்தியுள்ளது இது மொத்த பணியாளர்களில் 48.9% ஆகும்., விவசாயத்துறை 38.3% பணியாளர்களையும் தொழில் துறை 12.8% பணியாளர்களையும் கொண்டுள்ளது [54].

ஆசிய பொருளாதார நெருக்கடி

பெருமளவில் சப்பான் (17.28%) சிங்கப்பூர் (11.29%) ஐக்கிய அமெரிக்கா (10.81%) சீனா (7.62%) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சிங்கப்பூர் (24.96%) சீனா (12.52%) சப்பான் (8.92%) ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறது. இங்கு பாறை எண்ணெய், இயற்கை எரிவளி, செப்பு, வெள்ளீயம் போன்ற இயற்கை வளங்கள் அதிகமுள்ளன.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் சுமாத்திராவின் வடக்கில் அச்சே பகுதியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா ஓப்பெக் அமைப்பில் 1962 ஆம் ஆண்டு இணைந்தது. பாறை எண்ணெய் ஏற்றமதியாளர் என்ற நிலையிலிருந்து இறக்குமதியாளர் என்ற நிலைக்கு வந்ததால் மே 2008 இல் இவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது.[55] செப்டம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் விலகலை ஓப்பெக் உறுதிசெய்தது.

1997-98 காலப்பகுதியில் நிகழ்ந்த ஆசிய பொருளாதார நெருக்கடியில் இந்தோனேசியா கடுமையாக பாதிக்கப்பட்டது. பெருமளவிலான மூலதனம் நாட்டை விட்டு எதிர்பாராமல் வெளியேறியதால் இந்தோனேசிய நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இப்பொருளாதார நெருக்கடி அரசியலிலும் எதிரொலித்ததால் 1998 இல் நாட்டின் அதிபர் சுகர்த்தோ பதவி விலகினார் [56].

காட்சிகயகம்

குறிப்புகள்

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

இந்தோனேசியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்தோனேசியா&oldid=3927719" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை