ஜே. ஆர். ஆர். டோல்கீன்

ஜே. ஆர். ஆர். டோல்கீன் (J. R. R. Tolkien, ஜனவரி 3, 1892செப்டம்பர் 2, 1973) என்று பரவலாக அறியப்படும் ஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன் (John Ronald Reuel Tolkien) ஒரு ஆங்கில எழுத்தாளர், கவிஞர் மற்றும் பேராசிரியர். ஆங்கிலக் கனவுருப்புனைவு பாணியின் முன்னோடியாகக் கருதப்படுபவர். த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் மற்றும் த காபிட்டு ஆகியவை இவரது மிகவும் அறியப்பட்ட படைப்புகள். டோல்கீனுக்கு முன்பே பல எழுத்தாளர்கள் கனவுருப்புனைவுப் படைப்புகளை எழுதியிருந்தாலும் அவரது படைப்புகளே இருபதாம் நூற்றாண்டில் அப்புனைவுப் பாணிக்கு புத்துயிர் அளித்து வாசகர்களிடையே புகழ்பெறச் செய்தன. எனவே டோல்கீன் 'நவீன கனவுருப்புனைவு இலக்கியத்தின் தந்தை' எனக் கருதப்படுகிறார்.[1][2][3]

ஜே. ஆர். ஆர். தோல்கீன்
பிறப்புஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன்
ஜனவரி 3, 1892
புளூம்ஃபோண்டெய்ன், ஆரஞ்சு விடுதலை மாநிலம், தென்னாப்பிரிக்கா
இறப்புசெப்டம்பர் 2, 1973
பூர்ன்மவுத், இங்கிலாந்து
தொழில்எழுத்தாளர், ஆய்வாளர், மொழியறிவியலாளர், கவிஞர்
தேசியம்பிரித்தானியர்
வகைகனவுருப் புனைவு, மேல்மட்ட கனவுருப்புனைவு, மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி ஹோபிட்
த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்
தி சில்மரீலியன்
துணைவர்எடித் பிராட் (1916–1971)
J .R .R. Tolkien

வாழ்க்கைக் குறிப்பு

குடும்பப் பின்புலம்

டோல்கீனின் தந்தை வழி மூதாதையர் ஐரோப்பாவின் கீழ்சாக்சனி பகுதியில் இருந்து 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்துக்குக் குடி பெயர்ந்தவர்கள். காலப்போக்கில் ஆங்கிலச் சமூகத்தில் ஒன்றிணைந்துவிட்டனர். அவரது தாய்வழி பாட்டனும்-பாட்டியும் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வாழ்ந்தவர்கள். சஃபீல்ட் (suffield) என்ற குடும்பப் பெயர் கொண்ட அவர்கள் பர்மிங்கம்மின் நகர மையத்தில் 19ம் நூற்றாண்டில் பல தொழில்கள் புரிந்து வந்தனர்.[4][5][6][7][8][9]

குழந்தைப் பருவம்

டோல்கீன் தென்னாப்பிரிக்காவின் ஆரஞ்சு விடுதலை மாநிலத்தின் புளூம்ஃபோண்டெய்ன் நகரில் ஆர்த்தர் ரூல் டோல்கீன் - மேபல் சஃபீல்டு இணையருக்கு மகனாக ஜனவரி 3, 1892 அன்று பிறந்தார். அவரது தந்தை ஆர்த்தர் ஒரு வங்கி மேலாளர். ஆர்த்தர் இங்கிலாந்தில் தான் பணிபுரிந்து வந்த வங்கியில் பணி உயர்வு பெற்று அதன் புளூம்ஃபோண்டெய்ன் கிளையை நிருவகிப்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த போது ஜே. ஆர். ஆர். டோல்கீனின் பிறப்பு நிகழ்ந்தது. டோல்கீனுக்கு ஹிலரி ஆர்த்தர் ரூல் என்ற இளைய சகோதரர் ஒருவரும் உண்டு. டோல்கீனுக்கு மூன்று வயதிருக்கும் போது அவரது தாய் அவரையும் அவரது தம்பியையும் ஒரு நீண்ட குடும்பப் பயணமாக இங்கிலாந்துக்கு அழைத்து சென்றார். அப்போது புளூம்ஃபோண்டெய்னில் அவரது தந்தை வாதநோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதனால் டோல்கீன் குடும்பம் தென்னாப்பிரிக்கா திரும்பாமல் இங்கிலாந்திலேயே தங்கிவிட்டது.[10]

டோல்கீன் பர்மிங்காம் அருகில் உள்ள சேர்ஹோல் என்ற பசுமையான கிராமத்தில் தன் இளமைப்பருவத்தைக் கழித்தார். அதன் அழகிய இயற்கைச்சூழலும் அவர் சிறுவனாகச் சுற்றிப்பார்த்த பல இடங்களும் அவரது பிற்கால எழுத்துகளில் கற்பனையாக உருவாக்கிய பல இடங்களுக்குத் தூண்டுகாரணமாக அமைந்தன. டோல்கீனின் தாய் மேபல் தானே தனது இரு மகன்களுக்கும் ஆரம்பத்தில் கல்வி கற்பித்தார். தாயின் கல்வி புகட்டலால் டோல்கீனுக்குத் தாவரங்கள் மீதும் தாவரவியலிலும் ஆர்வம் உண்டானது. அத்துடன் நிலக்காட்சி ஓவியங்கள் வரைவதிலும் விருப்பம் ஏற்பட்டது. இவற்றைக் காட்டிலும் மொழிகளைக் கற்பதில் சிறுவன் டோல்கீன் அதிக ஆர்வம் கொண்டார். நான்கு வயதிலேயே வேகமாகப் படிக்கக் கற்றுக் கொண்ட அவர் வெகு விரைவில் சரளமாக எழுதவும் தொடங்கிவிட்டார்.[11]

டோல்கீன் குடும்பம்; 1892 கிறிஸ்துமசின் போது அவர்கள் புளூம்ஃபோண்டெய்ன் நகரில் இருந்து இங்கிலாந்தில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டை

டோல்கீன் பர்மிங்காம் எட்வர்ட் அரசர் பள்ளியிலும், புனித பிலிப்பு பள்ளியிலும் கல்வி கற்றார். 1900 ஆம் ஆண்டு பாப்டிச புரோட்டாஸ்தாந்த திருச்சபையைச் சேர்ந்த மேபல் டோல்கீன், உரோமன் கத்தோலிக்கராக மாறினார். இதனைக் கடுமையாக எதிர்த்த அவரது குடும்பம் அவருடனான உறவைத் துண்டித்துக் கொண்டது. 1904ம் ஆண்டு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மேபல் இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 34. தனது மகன்கள் இருவரையும் வளர்க்கும் பொறுப்பை பர்மிங்காம் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் மார்கனிடம் ஒப்படைத்தார். டோல்கீனும் அவருடைய தம்பியும் ரோமன் கத்தோலிக்கர்களாக வளர்க்கப்பட்டனர். பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் பகுதியில் வளர்ந்த டோல்கீன் மனதில் அப்பகுதியில் இருந்த உயர் கோபுரங்களான பெர்ரட்ஸ் ஃபோலி (Perrott's Folly) மற்றும் எட்ஜ்பாஸ்டன் வாட்டர்வொர்க்ஸ் டவர் (Edgbaston Waterworks Tower) ஆகியவை ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது பிற்காலப் புனைவுப் படைப்புகளில் உயர்கோபுரங்கள் பல தோன்றுவதற்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பர்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் ஓவியக்காட்சிக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மத்தியக்காலப் புனைவியல் ஓவியங்களும் அவரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின.[12][13][14][15][16][17]

இளமைக் காலத் தாக்கங்கள்

1911 இல் சுவிட்சர்லாந்திற்கு கோடை விடுமுறையைக் கழிக்கச் சென்றார் டோல்கீன். அப்போது இண்டர்லேக்கன் என்ற இடத்திலிருந்து லாட்டர்புருனென் என்ற இடத்துக்கு மலை நடையாகச் சென்றார். அந்த நடையே பிற்காலத்தில் அவர் எழுதிய தி ஹோபிட் புதினத்தில் பில்போ பாகின்ஸ் பாத்திரம் பனிசூழ் மலைகளுக்குச் செல்லும் நிகழ்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. டிசம்பர் 1914 இல் டோல்கீன் தனது பள்ளி நண்பர்கள் மூவருடன் நடத்திய ஒரு சந்திப்பிற்குப் பிறகு கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள எக்சிட்டர் கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். செவ்வியல் இலக்கியங்களை முதலில் பயின்ற அவர் 1913 இல் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் படிக்கத் தொடங்கினார். 1915 இல் கல்லூரி இறுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.[18][19]

காதலும் திருமணமும்

டோல்கீன தனது பதினாறாவது வயதில் எடித் மேரி பிராட் என்ற இளம் பெண்ணை சந்தித்தார். எடித் டோல்கீனை விட மூன்று வயது மூத்தவர்; புரோட்டாஸ்தாந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர். தமது பெற்றோரை இழந்திருந்த இருவரும் ஒத்த மனமுடையவர்களாக இருந்தனர். பர்மிங்காமை சுற்றித் திரிந்த அவர்களிடையேயான உறவு 1909 இல் காதலாக மாறியது. டோல்கீனது வளர்ப்பாளர் பாதரியார் பிரான்சிஸ் மார்கனுக்கு இந்தக் காதல் ஏற்புடையதாக இல்லை. எடித் புரோட்டஸ்தாந்தியர் என்பதும், காதல் டோல்கீனது மனதைப் படிப்பிலிருந்து திசை திருப்பிவிடும் என்று அவர் கருதியதே காரணம்.[20][21][22]

பாதரியார் மார்கன் டோல்கீன் அவருக்கு 21 வயதாகும் வரை எடித்தை சந்திக்கக்கூடாது, அவருடன் பேசக்கூடாது, கடிதம் எழுதக்கூடாது எனத் தடைவிதித்தார். இத்தடையை மதித்து டோல்கீன் எடித்துடனான தொடர்பை முறித்துக் கொண்டார். ஒரே ஒரு முறை இதனை மீறிய போது பாதரியார் மார்கன் அவரை பல்கலைக்கழகத்திலிருந்து நிறுத்தி விடுவதாக மிரட்டிக் கடிந்து கொண்டார். 21 வயது நிரம்பிய அன்றே டோல்கீன் தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டி எடித்துக்கு ஒரு கடிதம் எழுதினார். டோல்கீன் தன்னை மறந்து விட்டதாக எண்ணியிருந்த எடித் வேறொருவரைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்திருந்தார். ஆனால் மீண்டும் டோல்கீனைச் சந்தித்த போது அவர்களிடையேயிருந்த காதல் வலுவடைந்தது. தனது திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட எடித் டோல்கீனை மணம் புரியப்போவதாக அறிவித்தார். டோல்கீனது வற்புறுத்தலால், அவர்களது திருமண நிச்சய நாளன்று எடித் தயக்கத்துடன் ரோமன் கத்தோலிக்கத்தைத் தழுவினார். ஜனவரி 13, 1913 இல் நிச்சயமான எடித்-டோல்கீன் திருமணம் மார்ச் 22, 1916 இல் இங்கிலாந்தின் வார்விக் நகரில் உள்ள புனித மேரி கத்தோலிக்கத் திருச்சபையில் நடைபெற்றது.[23]

முதலாம் உலகப் போர்

1914 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் முதலாம் உலகப் போரில் ஈடுபட்டது. டோல்கீன் அவரது உறவினர்கள் எதிர்பார்த்தது போல் உடனடியாக பிரித்தானியத் தரைப்படையில் தன்னார்வலராக இணையவில்லை. மாறாக, தனது கல்லூரிப் பட்டத்தைப் பெறும் வரை படையில் இணைவதைத் தள்ளிப்போடும் ஒரு திட்டத்தில் சேர்ந்து கொண்டார். ஜூலை 1915 இல் பட்டம் பெற்ற பின்னர் லங்காசயர் ஃபூசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்டாக சேர்ந்தார். ஸ்டிராஃபர்ட்சயரில் உள்ள கன்னோக் சேஸ் என்ற இடத்தில் 13வது இருப்பு பட்டாலியன் படைப்பிரிவில் பதினோரு மாதங்கள் படைப்பயிற்சி பெற்றார். அங்கிருந்த போது, மனைவி எடித்துக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தனது மேலதிகாரிகளைப் பற்றி ”இங்கு மேன்மக்கள் அரிதாகவே காணக்கிடைக்கின்றனர், ஏன், மனிதர்கள் கூட அரிதாகவே உள்ளனர்” என்று குறைபட்டுக்கொண்டார். பின் அங்கிருந்து 11வது சேவை பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். பிரித்தானியப் பயணப்படையின் ஒரு உறுப்பினராக ஜூன் 4, 1916 இல் பிரான்சை அடைந்தார். ஒரு படைப் போக்குவரத்துக் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து கிளம்பிய நிகழ்வு தி லோன்லி ஐல் என்ற கவிதையை எழுதத் தூண்டியது. “[போரில்] நிமிடத்திற்கு டசன் கணக்கில் கீழ்நிலை அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள்... என் மனைவியைப் பிரிவது செத்துப்போவது போலிருந்தது”.[24][25]

பிரான்சின் சோம் போர்முனையில் தொலைதொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய டோல்கீன் தீப்வால் ரிட்ஜ் சண்டை மற்றும் ஷ்வாபென் அரண் மீதான தாக்குதல்களில் பங்கேற்றார். போர்க்களத்தில் பல்வேறு சமூகப் பின்னணி கொண்டவர்களுடன் கடினமான ஒரு சூழலில் ஒன்றாகப் பணிபுரியும் அனுபவம் டோல்கீனுக்கு ஏற்பட்டது. இதன் மூலம் பிரித்தானிய சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த சாதாரண போர்வீரர்கள் மற்றும் இங்கிலாந்தின் விவசாயப் பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் பற்றிய புரிதலும் அனுபவமும் அவருக்கு ஏற்பட்டது. டோல்கீன் போர்க்களத்திலிருந்த காலம் எடித்துக்கு மிகவும் சோதனையான ஒன்று. ஒவ்வொரு முறை அவரது வீட்டுக்கதவு தட்டப்படும் போதும் கணவரின் மரணசெய்தி தான் வந்துள்ளதோ என்று அவர் அஞ்சினார். அப்போது படைவீரர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு எழுதும் கடிதங்கள் பிரித்தானியப் படைத்துறையால் தணிக்கை செய்யப்பட்டு வந்தன (அவர்கள் எங்கு இருக்கிறார்கள், போர் நிலை பற்றிய செய்திகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும்). இத்தணிக்கையில் சிக்காமல் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள எடித்தும் டோல்கீனும் தங்கள் கடிதங்களில் ஒரு தனிப்பட்ட குறியீட்டு முறையைப் பயன்படுத்தி தகவல் பரிமாறிக் கொண்டனர்.[26][27]

அக்டோபர் 27, 1916 இல் டோல்கீன் பதுங்குகுழிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பதுங்குகுழிகளில் பரவலாக இருந்த பேண் ஒட்டுண்ணிகளின் மூலம் இந்நோய் படைவீரர்களிடையே பரவி வந்தது. நவம்பர் 8 ஆம் தேதி நோயினால் பலவீனமடைந்த டோல்கீன் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அவரது இளமைக்கால நண்பர்கள் பலர் முதலாம் உலகப் போரில் போர்முனைகளில் மரணமடைந்தனர். டோல்கீன் களப்பணிக்கு உடல்நல அடிப்படையில் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டதால் போரின் எஞ்சிய காலகட்டத்தை பாதுகாவல் பணிகளிலும் மருத்துவமனைகளிலும் கழித்தார். உடல்நலம் தேறிவந்த இக்காலகட்டத்தில் தி புக் ஆஃப் லாஸ்ட் டேல்ஸ் நூலை எழுதத் தொடங்கினார். 1917-18 காலத்தில் பலமுறை அவரது உடல்நலம் சரியில்லாது போனாலும், லெப்டினண்டாக பதவு உயர்வு பெற்று தாயக முனையில் பல முகாம்களில் பணியாற்றினார். அவருடைய முதல் குழந்தையான ஜான் பிரான்சிஸ் ரூல் டோல்கீன் பிறந்ததும் இக்காலகட்டத்தில் தான். கிங்க்ஸ்டன் அபான் ஹல் என்ற இடத்தில் பணி புரிந்த போது எடித்தும் டோல்கீனும் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு ஒரு முறை நடையாகச் சென்றனர். அங்கு பூத்திருந்த மரங்களிடையே எடித் நடனமாடிய காட்சி அவருடைய மனதில் ஆழப்பதிந்தது. பிற்காலத்தில் அவர் எழுதிய பெரெனும் லூத்தியனும் கதையில் பெரெனும் லூத்தியனும் சந்திக்கும் நிகழ்வு இதைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. எடித்தை “எனது லூத்தியன்” என்று டோல்கீன் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.[28][29][30][31][32][33][34]

ஆய்வுப் பணியும் எழுத்துப்பணியும்

20, நார்த்மூல் சாலை - வடக்கு ஆக்சுஃபோர்டில் ஜே. ஆர். ஆர். டோல்கீன் வாழ்ந்த வீடு

[[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் டோல்கீன் ஆக்சுபோர்ட் ஆங்கில அகரமுதலியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு டபிள்யூ வில் தொடங்கும் ஜெர்மானிய மூலச் சொற்களின் வரலாற்றையும் சொற்பிறப்பியலையும் ஆய்வு செய்தார்..[35] 1920 இல் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளரானார். விரைவில் அப்பல்கலைக்கழக்கத்தின் மிகவும் வயது குறைந்த பேராசிராயாகவும் பதவி உயர்வு பெற்றார்.[36] லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் போது “நடு ஆங்கில சொல்லடைவு” (Middle English Vocabulary) மற்றும் ”சர் கவைனும் பச்சை நைட்டும்” (Sir Gawain and the Green Knight) கதையின் செம்பதிப்பு (ஈ. வீ. கோர்டனுடன் இணைந்து) ஒன்றையும் வெளியிட்டார். இவ்விரு படைப்புகளும் பல நூற்றாண்டுகளுக்கு தமது பகுப்புகளில் தரத்தை நிர்ணயம் செய்யும் படைப்புகளாகத் திகழ்ந்தன. மேலும் சர் கவைன், பியர்ல், சர் ஓர்ஃபியோ போன்ற கவிதைகளை மொழிபெயர்த்தார். 1925 இல் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி ஆங்கிலோ சாக்சனுக்கான ராலின்சன் மற்றும் பாஸ்வர்த் பேராசிரியராகப் பதவியேற்றார். பெம்ப்ரோக் கல்லூரியில் சக ஆய்வாளராகவும் பதவியேற்றார்.

பெம்ப்ரோக் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் தான் 'தி ஹாபிட்' நூலையும், 'தி லார்ட் ஆஃப் தி ரிங்க்சின்' முதல் இரு பகுதிகளையும் எழுதினார். அப்போது அவர் வடக்கு ஆக்ஸ்போர்டில் உள்ள 20, நார்த்மூர் சாலை என்ற முகவரியில் வசித்து வந்தார். 1932 இல் ”நாடென்ஸ்" (Nodens) என்ற மொழியறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். 1928ம் ஆண்டு சர் மோர்ட்டிமர் வீலர் குளோசஸ்டர்சயரின் லிட்னி பூங்காவில் ஒரு பண்டைய உரோம அசஸ்கிளெப்பெயான் வகைக் கோயில் ஒன்றை அகழ்ந்து கண்டுபிடித்தது இக்கட்டுரை எழுதத் தூண்டுகோலாக அமைந்தது.[37]

பேவொல்ஃப்

1936 இல் டோல்கீன் ஆற்றிய ”பேவொல்ஃப்: பயங்கர விலங்குகளும் விமர்சகர்களும்” (Beowulf: The Monsters and the Critics) என்ற விரிவுரை பேவொல்ஃப் இலக்கிய ஆய்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பேவொல்ஃப் இலக்கியத் திறனாய்வில் டோல்கியனின் கட்டுரை ஒரு திருப்புமுனையாக அமைந்தது என லூயிஸ். ஈ. நிக்கல்சன் குறிப்பிட்டுள்ளார். அதுவரை அதன் மொழியியல் கூறுகள் மட்டுமே கவனிக்கப்பட்டு வந்த அப்படைப்பின் கவிதை நயத்தை அனைவரது கவனத்துக்கும் கொணர்ந்தார் டோல்கீன்.[38] .பேவொல்ஃபில் அடிக்கடி பயங்கர விலங்குகளுடன் நடக்கும் மோதல்கள் வருவதால் அது சிறுபிள்ளைத்தனமானது என்ற பொதுக்கருத்து இலக்கிய ஆய்வாளர்களிடையே நிலவி வந்தது. பேவொல்ஃபின் ஆசிரியர் இனக்குழு சண்டைகள் பற்றி மட்டுமல்லாது மனிதனின் விதியினைப் பற்றியும் தனது படைப்பினை ஆக்கியுள்ளார் என்று வாதிட்ட டோல்கீன் அதனால் அச்சமூட்டும் விலங்குகள் அப்படைப்பின் இன்றியமையாத அங்கமாக உள்ளன என்று கருதினார்.[39] பேவொல்ஃபில் இனக்குழு மோதல்கள் இடம்பெறாத பகுதிகளில் கனவுருப்புனைவுக் கூறுகளைத் தேடக்கூடாதென்று கூறினார் டோல்கீன்.[40] டோல்கீன் பேவொல்ஃப் மீது தான் கொண்டிருந்த பெருமதிப்பை வெளிப்படையாகத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது அப்படைப்பு கொண்டிருந்த தாக்கம் அவரது நடு உலகுப் புனைவுக்களத்தில் புலனாகிறது.[41] டோல்கீன் வகுப்பறைகளில் பேஃவொல்ஃப் பற்றிய தனது விரிவுரைகளை நடத்திய விதம் அவற்றை கேட்போரிடையே மிகப்பிரபலமாக மாறியது.[42] 2003 ஆம் ஆண்டு பாட்லீயன் நூலகத்தில் டோல்கீன் எழுதிய பேவொல்ஃப் மொழிபெயர்ப்பு மற்றும் குறிப்புகள் அடங்கிய 2000 பக்க கையெழுத்துப்படி கண்டெடுக்கப்பட்டது.[43]

போர்க்காலமும் அதன் பின்பும்

டோல்கீன் ஆங்கில மொழி மற்றும் இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றிய மெர்ட்டன் கல்லூரி

இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்கு முன்னர் பிரித்தானிய அதிகாரிகள் டோல்கீனை எதிரிகளின் தொலைத்தொடர்புக் ரகசியக் குறியீடுகளை உடைக்கும் பணிக்கமர்த்தத் திட்டமிட்டனர். ஜனவரி 1939 இல் நாட்டு நெருக்கடி காலத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் குறியாக்கவியல் பிரிவில் பணியாற்ற சம்மதமா என்று டோல்கீனிடம் வினவப்பட்டது. அதற்கு இசைந்த டோல்கீன் மார்ச் 27 முதல் அரசின் இரகசியக் குறியீடுக் கல்லூரியில் பயிற்சி பெறத் துவங்கினார். நாட்டுக்காகப் பணியாற்ற அவர் ஆர்வமாக இருந்தாலும் அவரது சேவை தங்களுக்குத் தேவையில்லை என்று அரசு தரப்பில் கூறிவிட்டனர். 2009 ஆம் ஆண்டு இது பற்றி வெளியிட்ட செய்தி ஒன்றில் தி டெய்லி டெலிகிராஃப் இதழ் எக்காரணத்தினாலோ டோல்கீன் அரசின் முழு நேர ஊழியராகும் வாய்ப்பை (ஆண்டொன்றுக்கு £500 ஊதியத்துடன்) ஏற்க மறுத்து விட்டார் என்று தெரிவித்தது.[44][45][46]

1945 இல் ஆக்சுஃபோர்டின் மெர்ட்டன் கல்லூரிக்கு பணிமாறிய டோல்கீன் அங்கு ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்திற்கான மெர்ட்டன் பேராசிரியாகப் பதவியேற்றார். 1959 இல் ஓய்வு பெறும் வரை அப்பதவியை வகித்து வந்தார். 1948 இல் தனது மாபெரும் படைப்பான தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் புதினத்தை எழுதி முடித்தார் டோல்கீன். டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியில் வெளி ஆய்வாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். 1954 இல் அயர்லாந்து தேசியப் பல்கலைக்கழகம் அவருக்கு ஒரு மதிப்புறு பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. 1966 இல் வெளியான யெரூசலேம் விவிலியத்தின் ஒரு பகுதியாக யோனா நூலையும் டோல்கீன் மொழிபெயர்த்தார்.[36][47]

குடும்பம்

டோல்கீன் இணையருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்: ஜான் பிரான்சிஸ் ரூல் டோல்கீன் (17 நவம்பர் 1917 – 22 ஜனவரி 2003), மைக்கேல் ஹிலரி ரூல் டோல்கீன் (22 அக்டோபர் 1920 – 27 பெப்ரவரி 1984), கிரிஸ்டோபர் ஜான் ரூல் டோல்கீன் (21 நவம்பர் 1924 -), பிரிசில்லா மேரி ஆன் ரூல் டோல்கீன் (18 ஜூன் 1929). டோல்கீன் தனது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவர்களது குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தந்தை எழுதியது போன்ற ஓவியங்கள் கொண்ட கடிதங்களை அவர்களுக்கு எழுதினார். அவற்றில் கிறிஸ்துமஸ் தந்தையின் கதைகள் விவரிக்கப்பட்டிருக்கும்.[48]

ஓய்வு

டோல்கீன் 1959 இல் ஓய்வு பெற்றார். அப்போதிலிருந்து அவர் 1973 இல் ஓய்வு பெறும் வரை அவரது இலக்கியப் புகழ் அதிகரித்துக் கொண்டே போனது. அவரது நூல்களின் விற்பனை அவருக்கு பெருமளவு செல்வத்தை ஈட்டித் தந்தது. முன்னரே ஓய்வு பெறாமல் போனேனே என்று அவர் வருத்தப்படும் அளவுக்கு நூல் விற்பனை மூலம் அவருக்கு செல்வம் கிட்டியது. ஆரம்பத்தில் வாசகர்களின் கடிதங்களுக்கு ஆர்வத்துடன் பதில் எழுதி வந்தார். ஆனால் 1960களின் எதிர்ப்பண்பாட்டு இயக்கத்தினரிடையே தனது நூல்களுக்குக் கிடைத்த வரவேற்பை அவர் விரும்பவில்லை. அவரது புகழ் வெகுவாகப் பரவியதால் தொலைபேசி எண் தொகுப்பிலிருந்து தனது தொலைபேசி எண்ணை நீக்க நடவடிக்கை மேற்கொண்டார் டோல்கீன். எடித்தும் டோல்கீனும் பின்னர் கடலருகே இருந்த பூர்ன்மவுத் சுற்றுலாத் தலத்திற்கு இடம் பெயர்ந்தனர். இந்த இடமாற்றம் எடித்துக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்தது. டோல்கீன் தனது பழைய சுற்றுப்புறங்களைப் பிரிந்து தவித்தாலும், எடித் மீது கொண்டிருந்த நேசத்தினால், தனது மனைவியின் மகிழ்ச்சிக்காக அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டார். 1972 இல் டோல்கீனுக்கு பிரித்தானியாவின் சர் பட்டம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவருக்கு ஒரு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.[19][21][49][50][51][52][53][54]

இறப்பு

எடித் மற்றும் ஜே. ஆர். ஆர். டோல்கீனின் கல்லறை, வோவர்கோட் கல்லறைத் தோட்டம், ஆக்சுஃபோர்ட்

நவம்பர் 29, 1971 இல் எடித் தனது 82வது வயதில் இறந்தார். மனைவியின் மரணத்துக்குப் பின்னர் டோல்கீன் மீண்டும் ஆக்சுபோர்டுக்கு இடம் பெயர்ந்தார். மனைவி இறந்து 21 மாதங்களிலேயே (செப்டம்பர் 2, 1973) டோல்கீனும் மரணமடைந்தார். எடித்தும் டோல்கீனும் ஆக்சுபோர்ட் நகரின் வோல்வர்கோட் கல்லறைத் தோட்டத்தில் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கல்லறைக் கல்லில் அவர்களது பெயர்களுடன் “லூத்தியன்” மற்றும் “பெரென்” என்ற பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. டோல்கீனின் நடுவுலகுப் புனைவுலகில் லூத்தியனும் பெரெனும் காதலர்கள். டோல்கீன் எடித்தை தனது லூத்தியனாகவே கருதினார்.[55][56]

கருத்துகள்

டோல்கீன் ஒரு பக்தி மிக்க உரோமன் கத்தோலிக்கர். பழமைவாத சமய மற்றும் அரசியல் கருத்துகள் கொண்டிருந்தவர். 1943 இல் அவர் எழுதிய கடிதமொன்றில் “எனது அரசியல் நிலைப்பாடு அரசின்மையின் பக்கம் திரும்பி வருகிறது. நான் விரும்பும் அரசின்மை கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றியது; வெடிகுண்டு வீசுவது பற்றியதல்ல” என்று குறிப்பிடுகிறார். தொழில்மயமாக்கத்தின் பக்க விளைவுகளை அவர் விரும்பவில்லை. இங்கிலாந்தின் நாட்டுப்புறம் அவற்றால் அழிந்துவருவதாக அவர் கருதினார். வாழ்நாள் முழுவதும் மகிழ்வுந்துகளை பயன்படுத்தாமல் மிதிவண்டியில் பயணம் செய்தார்.[57][58]

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் புதினத்தில் ஷையர் பகுதி தொழில்மயமாவதை அவர் சித்தரிக்கும் விதம் இவ்விசயத்தில் அவரது எண்ணங்களைத் தெளிவாகக் காட்டுகிறது. இது போல டோல்கீனின் வாழ்நாளில் நடந்த பல விசயங்கள் அவரது நடு உலகுப் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன எனப் பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். தி லார்ட் ஆஃப் தி ரிங்சில் காட்டப்படும் நடு உலகு இரண்டாம் உலகப் போர் மற்றும் அதற்கு அடுத்த காலகட்டத்து இங்கிலாந்தைக் குறிக்கின்றது என்ற கருத்து விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால் டோல்கீன் இதை ஆணித்தரமாக மறுத்தார். இது போலவே டோல்கீனின் ஆழமான கிறித்தவ நம்பிக்கை அவரது படைப்புகளில் தெரிகின்றது என்ற கருத்தும் விமர்சகர்களிடையே நிலவுகிறது. டோல்கீனின் சமய நம்பிக்கையும், தொன்மக் கதைகளின் மீது கொண்டிருந்த பற்றும் அவரை தொன்மக் கதைகள் இறையுண்மையின் எதிரொலி என்று கருதச் செய்தன.[59][60][61]

சமயம்

டோல்கீனின் ஆழமான கத்தோலிக்க நம்பிக்கையே எழுத்தாளர் சி. எஸ். லூயிஸ் இறைமறுப்பினை விட்டு கிறித்தவத்தை ஏற்றுக் கொண்டதற்கு காரணமாக அமைந்தது. ஆனால் லூயிஸ் உரோமன் கத்தோலிக்கத்தை ஏற்காமல் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தது டோல்கீனுக்கு ஏமாற்றம் அளித்தது. தனது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு மாற்றங்கள் அவருக்கு ஏமாற்றத்தை அளித்தன.[62][63][64]

அரசியலும் இனமும்

டோல்கீன் பழமைவாத கருத்துகள் கொண்டவர். அரசின்மையை விரும்பியவர். ஆனால் அரசின் கட்டுப்பாடுகள் குறைய வேண்டுமென மட்டுமே அவர் விரும்பினார், கட்டுப்பாடற்ற வன்முறையை அவர் ஆதரிக்கவில்லை.[65] எசுப்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத பாசிஸ்டுகளை அவர் ஆதரித்தார். பிராங்கோவின் எதிர் தரப்பு குடியரசுவாதிகள் திருச்சபைக் கட்டிடங்களை அழித்து கிறித்தவப் பாதரியார்களைக் கொலை செய்கிறார்கள் என்று அவர் கேள்விப்பட்டதே இந்த நிலைப்பாட்டுக்குக் காரணமாக அமைந்தது.[66] டோல்கீன் ஜோசப் ஸ்டாலினைக் கடுமையாக எதிர்த்தார்; ஸ்டாலின் ஒரு “இரத்த வெறி பிடித்த கொலைகாரன்” என்று கருதினார்.[67]

டோல்கீனின் படைப்புகளில் இனவாதமும் இனவெறியும் இழையோடியிருக்கின்றனவா என்று இலக்கியத் திறனாய்வாளர்களிடையே சர்ச்சை உள்ளது.[68] டோல்கீனின் படைப்புகளில் இனவாதம் உள்ளதெனக் கருதுவோர் மூன்று வகைப்படுகிறார்கள் -[69][70]

  1. டோல்கீன் அறிந்தே தனது இனவாதத்தை தன் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார் என்று கருதுவோர்
  2. அவர் அறியாமலேயே அவரது உள்மனதில் உள்ள ஐரோப்பிய மையவாதமும் அவரது படைப்புகளில் வெளிப்படுகின்றன எனக் கருதுவோர்
  3. அவரது ஆரம்பகால படைப்புகளில் காணப்படும் இனவாதம் பின் சிறிது சிறிதாக மாறி அவரது பின்னாளைய படைப்புகளில் இனவெறிக்கு எதிரான நிலைப்பாடாக மாற்றமடைந்து விட்டதாகக் கருதுவோர்.

டோல்கீன் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையை கடுமையாகச் சாடியுள்ளார்.[71] இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே இட்லரையும் அவரது நாசிக் கட்சியினையும் வெளிப்படையாக எதிர்த்தார். அவரது தி ஹாபிட் புதினம் நாசி ஜெர்மனியில் வெளியான போது அவர் ஆரியர் இனத்தவரா என்று டோல்கீனிடம் வினவப்பட்டது. இது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தனது பதிப்பாளருக்கு எழுதிய கடிதமொன்றில் நாசிக்களின் இனக்கொள்கையை தான் வெறுப்பதாகவும், தனக்கு பல யூத நண்பர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இப்படி இனத்தை மையப்படுத்தி கேள்விகள் எழுந்தால் தனது புதினத்தின் இடாய்ச்சு (செருமானிய) மொழிபெயர்ப்பை நிறுத்தி விடலாமென்றும் குறிப்பிட்டார்.[72][73] நேச நாடுகள் ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு எதிராகக் கையாண்ட ஒட்டுமொத்தப் போர் கொள்கையினையும் டோல்கீன் எதிர்த்தார்.[74] போரினால் ஜெர்மனிக்கு ஏற்பட்ட அழிவுகள் மனித நாகரிகத்துக்கு ஏற்பட்ட பேரிடர்களில் ஒன்று என்றும் ஒட்டுமொத்த ஜெர்மன் மக்களுக்கு எதிராக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை இழிவானது என்றும் கருதினார்.[75] நாகசாகி மற்றும் ஹிரோஷிமா மீதான அணுகுண்டு வீச்சினால் பேரதிர்ச்சிக்குள்ளான டோல்கீன், அணுகுண்டுகளை உருவாக்கிய மன்ஹாட்டன் திட்ட அறிவியலாளர்களைப் “பைத்தியக்காரர்கள்” எனச் சாடினார்.[76]

எழுத்து

தாக்கங்கள்

டோல்கீனின் நடு உலகுப் புனைவுப் படைப்புகள் மீது தாக்கம் கொண்டவை பல. மொழியறிவியல், தேவதைக் கதைகள், ஆங்கில-சாக்சன் தொன்மவியல், நார்சு தொன்மவியல், அவரது உரோமன் கத்தோலிக்க நம்பிக்கைகள், பிரித்தானிய சாகசக் கதைகள், முதலாம் உலகப் போரில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் போன்றவை அவற்றில் அடக்கம். ரிச்சர்ட் வாக்னரின் நிபெலுங்கின் மோதிரம் (Der Ring des Nibelungen) என்ற காப்பிய ஒபேரா இசைத்தொடரின் நேரடித் தழுவலே தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் எனப் பல இலக்கியத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். பல்கலைத் திறனாளியான வில்லியம் மோரிஸ் டோல்கீன் மீது பெரும் தாக்கம் செலுத்தியவராவார். டோல்கீன் மோரிசின் நேசக் கதைகளையும் கவிதைகளையும் போலத் தானும் எழுத விரும்பினார். தனது நடு உலகின் பல இடங்களுக்கு மோரிசின் படைப்புகளில் இருந்து பெயர்களை எடுத்து இட்டார். ஹெச். ரைடர் ஹக்கார்டின் ஷீ புதினமும் பிற படைப்புகளும் டோல்கீன் படைப்புகளில் தாக்கம் செலுத்தியவை.[77][78][79][80]

ஜெர்மானிய மக்களின் பண்பாட்டுக் கூறுகள் டோல்கீனைக் கவர்ந்தவை. குறிப்பாக பழைய ஆங்கில இலக்கியம், தொன்மவியல், கதைகள் போன்றவற்றில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பேஃவொல்ஃப், நார்சு பெருங்கதைகளான வால்சங்கா பெருங்கதை, ஹெர்வரார் பெருங்கதை, ஐசுலாந்திய எட்டா கவிதைகள் மற்றும் உரைகள் ஆகியவற்றின் தாக்கங்கள் டோல்கீனின் படைப்புகளில் காணக்கிடைக்கின்றன. டோல்கீன் வாக்னரின் நிபெலுங்கின் மோதிரத்தின் அடிப்படையில் தான் தி லார்ட் ஆஃப் தி ரிங்க்சின் ஒரு மோதிரம் (One Ring) உருவாக்கப்பட்டதென மறுத்தாலும், இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை மறுக்க முடியாத ஒன்று என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். ஜெர்மானியப் படைப்புகள் தவிர சோஃபகிளீசின் இடீஃபஸ் அரசன் (Oedipus the King) நாடகம், ஃபின்லாந்திய காப்பியச் செய்யுள் கலவேலா, கெல்ட்டிய வரலாறு மற்றும் கதைகளின் தாக்கமும் டோல்கீனின் படைப்புகளில் புலனாகிறது.[81][82][83][84][85][86][87][88][89]

தனது உரோமன் கத்தோலிக்க நம்பிக்கை தனது படைப்புகள் மீது பெரும் தாக்கம் கொண்டிருந்தது என்பதை டோல்கீன் ஒப்புக் கொண்டிருக்கிறார்:[89][90]

அடிப்படையில் தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஒரு சமய மற்றும் கத்தோலிக்கப் படைப்பு. துவக்கத்தில் நான் அவ்வாறு வேண்டுமென்றே எழுதவில்லை. ஆனால் பிந்தைய திருத்திய பதிப்புகளில் அறிந்தே எழுதினேன். சமயம், சடங்குகள், சமயக் குழுக்கள் தொடர்பான அனைத்து விசயங்களையும் கதையிலிருந்து நீக்கினேன். [வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும்] சமயக் கூறுகள் கதையிலும் அதன் குறியீடுகளிலும் உள்ளன.[91]

படைப்புகள்

நடு உலகு

டோல்கீன் வடிவகைத்த தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் முதல் பதிப்பின் முன்னட்டைகள்

டோல்கீனின் புனைவுப் படைப்புகளில் மிகப் பெரும்பாலானவை அவர் உருவாக்கிய நடு உலகு புனைவுக் களத்தில் நடைபெறுகின்றன. முதலாம் உலகப் போர்க் காலத்தில் டோல்கீன் இந்த புனைவுலகை உருவாக்கத் துவங்கினார். 1936 இல் வெளியாகிய தி ஹாபிட் பெரும் வெற்றி பெற்றது. தனது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு டோல்கீன் அப்புதினத்தை எழுதியிருந்தார். லண்டன் நூல் வெளியீட்டர்களான ஜார்ஜ் ஆலென் & அன்வின் அதனைப் பதிப்பிக்க முன்வந்தனர். சிறுவர்களால் மட்டுமல்லாது வயது வந்தோராலும் இப்புதினம் பெரிதும் விரும்பட்டது. இதன் தொடர்ச்சியான அடுத்த புதினத்தை எழுதுமாறு டோல்கீனுக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. அவற்றை ஏற்று தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் புதினத்தை எழுதினார். இப்புதினமே அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இதனை எழுதி முடிக்க அவருக்கு பத்து ஆண்டுகள் ஆயின. அதனை எழுதத் துவங்கிய போது சிறுவர் படைப்பாகவே எழுத எண்ணினார் டோல்கீன். ஆனால் பின்பு கனமான பின்னணியும், கருப்பொருட்களையும் அமைத்து வயது வந்தோருக்கான படைப்பாக மாற்றி விட்டார்.[56][92][93]

1954-55 இல் இந்நூல் வெளியானது. அக்காலகட்டத்தில் நீளமான நூல்களை அச்சிடுவதற்கு அதிகப் பொருள் செலவழிக்க வேண்டிய நிலை நிலவியது. அதனால் பதிப்பாளர்கள் அதனை மூன்று தொகுதிகளாக வெளியிட்டனர். 1960 களில் தி லார்ட் ஆஃப் தி ரிங்சின் புகழ் உலகெங்கும் பரவியது. இன்று வரை 20ம் நூற்றாண்டு இலக்கியத்தில் மிகவும் விரும்பப்படும் நூல்களுள் ஒன்றாக விளங்குகிறது. பிரிட்டன் மட்டுமல்லாது ஆங்கிலம் பேசும் பிற நாடுகளிலும் வாசகர்களால் மிகவும் விரும்பப்படுகின்ற படைப்புகள் பட்டியல்களில் தொடர்ந்து மேல் நிலைகளில் உள்ளது. பிற மொழி வாசகர்களிடத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்புதினத்தின் வெற்றியே தற்காலக் கனவுருப்புனைவுப் பாணியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தூண்டுகோலாக அமைந்தது.[94][95][96][97][98]

டோல்கீனின் இறப்பிற்குப் பின், அவரது வாழ்நாளில் வெளியாகாத அவரது படைப்புகள் பல வெளியாகின. அவர் தனது மகன் கிரிஸ்டோஃபர் டோல்கீனை தனது இலக்கிய வாரிசுரிமையாளராக நியமித்திருந்தார். கிரிஸ்டோஃபர் கை கேவ்ரியல் கே என்ற எழுத்தாளருடன் இணைந்து தனது தந்தையின் வெளியாகாத பல படைப்புகளைத் தொகுத்து தி சில்மரிலியன் என்ற பெயரில் 1977ம் ஆண்டு வெளியிட்டார். மேலும் 1980 இல் மேலும் சில படைப்புகளை ”நியூமெனார் மற்றும் நடுவுலகின் முடிவடையாக் கதைகள்” (Unfinished Tales of Númenor and Middle-earth) என்ற தலைப்புகளில் வெளியிட்டார். 1983-96 காலகட்டத்தில் தன் தந்தையின் எஞ்சியிருந்த வெளியாகாத கதைகள், அவரது குறிப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றைத் தொகுத்து 12 பகுதிகளாக நடுவுலகின் வரலாறு (The History of Middle-earth) என்ற பெயரில் வெளியிட்டார். இவற்றில் டோல்கீன் எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்திய, ஒன்றுக்கு ஒன்று முரணான கதைகளும் அடங்கும்.டோல்கீனின் வாழ்நாளில் வெளியாகாத பல படைப்புகள் 21ம் நூற்றாண்டிலும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.[99][100][101]

பிற படைப்புகள்

நடு உலகுப் படைப்புகளைத் தவிர டோல்கீன் வேறு சில புனைவுப் படைப்புகளையும் அபுனைவு ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். பழைய ஆங்கில காப்பியச் செய்யுளான பேவொல்ஃப் பற்றிய அவரது ஆய்வு நூல் ”பேவொல்ஃப்: பயங்கர விலங்குகளும் விமர்சர்களும்” பேவொல்ஃப் இலக்கியத் திறனாய்வுத் துறையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தன் குழந்தைகளுக்காக எழுதிய ”தந்தை கிறிஸ்துமஸ்”, ”மிஸ்டர் பிளிஸ்”, ரோவெராண்டம் போன்ற சிறுவர் கதைகளையும் டோல்கீன் எழுதியுள்ளார்.

மொழிகளும் மொழியறிவியலும்

மொழியறிவியல் பணி

டோல்கீன் மொழிகள் மீதும் மொழியறிவியல் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியறிவியலைக் கற்ற அவர் பழைய நார்சு மொழியினைச் சிறப்புப் பாடமாகக் கொண்டிருந்தார். ஆக்சுஃபோர்ட் ஆங்கில அகரமுதலி தயாரிப்பில் பணியாற்றிய போது டபிள்யூ என்ற எழுத்தில் துவங்கும் பல சொற்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்க உழைத்தார். லீட்சு பலகலைக்கழகத்தில் அவர் பணியாற்றிய போது மொழியியல் கற்கும் மாணவர் எண்ணிக்கையை ஐந்திலிருந்து இருபதாக உயர்த்தினார். பழைய ஆங்கில நாயகச் செய்யுள், ஆங்கிலத்தின் வரலாறு, செருமானிய மொழியறிவியல் அறிமுகம், பழைய மற்றும் நடு ஆங்கில மொழியறிவியல், பழைய ஐசுலாந்தியம், காத்திக், நடுக்கால வெல்சு மொழி போன்ற பாடங்களைக் கற்பித்தார். இலத்தீன், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைத் தனது தாயிடமிருந்து கற்ற டோல்கீன் நடு ஆங்கிலம், பழைய ஆங்கிலம், ஃபின்னியம், காத்திக், கிரேக்கம், இத்தாலியம், பழைய நார்சு, எசுப்பானியம், வெல்சு, நடுக்கால வெல்சு ஆகியவற்றைப் பள்ளியில் கற்றார். இவை தவிர டானியம், லொம்பார்டியம், உருசியம், செர்பியம், சுவீடியம் ஆகியவற்றையும் ஓரளவு அறிந்திருந்தார். இனம் மற்றும் மொழி தொடர்பான விசயங்களின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

மொழி உருவாக்கம்

டோல்கீன் தனது ஆய்வுப் பணி மற்றும் புனைவுப் படைப்பாக்கத்தின் பகுதியாக பல மொழிகளை உருவாக்கினார். நடு உலகுக் கதைகளத்தில் தோன்றும் ஒவ்வொரு இனத்தவருக்கும் தனித்தனியே மொழிகளை உருவாக்கினார். குறிப்பாக எல்ஃபுகளுக்காக ஒரு மொழிக்குடுமபத்தையே தோற்றுவித்தார். டோல்கீன் படைப்புகளுக்கு கிடைத்த வரவேற்பால், கனவுருப்புனைவு படைப்புகளில் புதிய மொழிகள் உருவாக்கும் வழக்கம் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

இலக்கியத் தடம்

கனவுருப்புனைவுப் பாணியின் முன்னோடிகளில் முதன்மையானவரக டோல்கீன் கருதப்படுகிறார். டோல்கீன் தனது படைப்பாம்சங்களை பிறர் மறு உருவாக்கம் செய்வதை விரும்பவில்லை. தனது படைப்புகளை சித்தரிக்கும் ஓவியங்களையும், அதன் அடிப்படையில் எழுதபட்ட திரைக்கதையினையும் கடுமையாக விமர்சனம் செய்தார். எனினும் தி ஹாபிட் மற்றும் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் புதினங்களைத் திரைப்படமாக்கும் உரிமையை யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்துக்கு 1968 இல் விற்றார். டோல்கீன் மறைவுக்குப் பின்னர் 1970களில் இரு புதினங்களும் அசைப்படங்களாக எடுக்கப்பட்டன. 2001-03 காலகட்டத்தில் நியூலைன் சினிமா நிறுவனம் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் புதினத்தை மூன்று படங்களாக வெளியிட்டது. பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளியான இம்முப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது; விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட இம்மூன்று படங்களும். பல ஆசுக்கர் விருதுகளை வென்றன. இதனைத் தொடர்ந்து தி ஹாபிட் புதினமும் அதே இயக்குனரால் இரு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.[102][103][104][105][106]

நினைவுச் சின்னங்கள்

டோல்கீன் வாசிப்பு நாள் - டாலின், எஸ்டோனியா
சார்ஹோல் ஆலை நீலப்பலகை

இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள ஈஸ்ட்பர்ன் நகரில் ஒரு சாலைக்கு டோல்கீன் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1982 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள் “2675 டோல்கீன்” என்று டோல்கீன் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சுஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் பதவிக்கு அவர் பெயர் இடப்பட்டுள்ளது (டோல்கீன் ஆங்கில இலக்கியம் மற்றும் மொழிப் பேராசிரியர்). நெதர்லாந்து நாட்டில் கெல்டிராப் என்ற நகரில் ஒரு புதிய பகுதியின் தெருக்களுக்கு டோல்கீன் மற்றும் அவரது படைப்புகளில் தோன்றும் கதை மாந்தர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. பால்டிக் கடல் மற்றும் பிற ஐரோப்பிய கடல் பகுதிகளில் பயணிக்கும் ஒரு இசுக்கூனர் வகைக் கப்பலுக்கு “ஜே. ஆர். டோல்கீன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. பர்மிங்காம் நகரின் பல பூங்காக்களும் நடைபாதைகளும் டோல்கீனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டோல்கீன் வாழ்ந்த இடத்துக்கு அருகே உள்ள சார்ஹோல் ஆலையில் டோல்கீன் நினைவு வார இறுதி ஒன்று கடைபிடிக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு அங்கு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சரடோகா மற்றும் சான் ஹொசே நகரங்களில் உள்ள இரு பகுதிகளின் தெருக்களுக்கு டோல்கீன் படைப்புகளில் இருந்து பெயர்கள் இடப்பட்டுள்ளன. கலிபோர்னியா பல்கலைக்கழகம் (டேவிஸ்) இல் ஒரு குடியிருப்பின் தெருக்களுக்கு லார்ட் ஆஃப் தி ரிங்சிலிருந்து பெயர்கள் இடப்பட்டள்ளன. இதேபோல் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) இலும் ஒரு குடியிருப்பு உள்ளது.[107]

1969 இல் டோல்கீன் படைப்புகளின் ரசிகர்களால் டோல்கீன் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இச்சங்கம் 2003 முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 25 ம் நாளை டோல்கீன் வாசிப்பு நாளாகக் கடைபிடித்து வருகிறது. டோல்கீனை நினைவு கூறும் வண்ணம் ஐக்கிய இராச்சியத்தில் ஐந்து நீலப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் அங்கு நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூற இப்பலகைகள் வைக்கப்படுவது வழக்கம். டோல்கீன் வாழ்ந்த இடங்கள், தங்கிய இடங்கள் என வடக்கு ஆக்சுஃபோர்டில் ஒன்றும், பர்மிங்காமில் நான்குமாக மொத்தம் ஐந்து நீலப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.[108][109][110][111][112]

குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை