செங் கே

செங் கே (Zheng He, செங் ஹே, (1371–1433/35) ஊய் இனத்தைச் சேர்ந்த சீனத்து கடற்படைத் தலைவரும் நாடுகாண் பயணியும், பண்ணுறவாளரும் ஆவார். மா கே என்ற இயற்பெயர் கொண்ட (இது சீனமொழியில் முகம்மது நபி அவர்களைக் குறிக்கும்).

செங் கே
செங்கேயின் மெழுகுச்சிலை,சீன குவான்சௌ அருங்காட்சியகம்
பிறப்பு1371[1]
குன்யாங், யுன்னான், சீனா[1]
இறப்பு1433 அல்லது 1435
மற்ற பெயர்கள்மாகே
சன்போ
பணிகடல்காண் பயணி, பண்ணுறவாளர், அந்தப்புரக் காழ்கடிஞர்
சகாப்தம்மிங் அரசமரபு

செங்கே,[2] தன் முப்பத்து நான்காம் வயது முதல் தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா, தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஆபிரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பகுதிகளுக்கு செல்வம் கவர்கின்ற கடற்பயணங்களை மேற்கொண்டார்.

செங்கேயின் பெருங்கப்பல்கள் சுமார் 120 மீ நீளமானவை என்று சொல்லப்படுகின்றது. நூற்றுக்கணக்கான மீகாமர்களும் நான்கு கப்பல் மாடத் தளங்களும் அவற்றில் காணப்பட்டன.[3]

யொங்கல் ஆட்சியாளரின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்ட செங்கே, மிக விரைவிலேயே மிங் அரசமரபின் முக்கிய ஆளுமையாக வளர்ந்ததுடன், சீனத்தின் தெற்குத் தலைநகரான நாஞ்சிங்கின் கட்டளைத் தளபதியாகவும் கடமையேற்றார். (இத்தலைநகரானது யொங்கல் சக்கரவர்த்தியால் பிற்காலத்தில் பெய்ஜிங்கிற்கு மாற்றப்பட்டது.).

சீன வரலாற்றுப் பதிவுகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப் பட்டவராகவே விளங்கிய செங்கே, 1904-இல் வெளியான அவரது வரலாற்று நூல் ஒன்றை அடுத்தே பரவலான கவனத்தைப் பெற்றார்.[4] அதற்கு கொஞ்ச நாட்களின் பின்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட காலி மும்மொழி கல்வெட்டு அவரது முக்கியமான வரலாற்று வகிபாகத்துக்கான ஆதாரமாக சான்றுகூறி நிற்கின்றது. தென்கிழக்காசிய நாடுகளில் வாழ்கின்ற சீன மரபுவழி மக்கள் மத்தியில் செங்கே இன்றும் தெய்வமாக வழிபடப்படுகிறார்.[5]

வரலாற்றுப் பின்னணி

குடும்பம்

மலாக்கா நகரிலுள்ள செங்கே சிலை.

சீனாவின் யுன்னான் பிராந்தியத்திலிருந்த குன்யாங் பகுதியைச் சேர்ந்த ஊய் இனத்துக் குடும்பமொன்றில் செங்கே இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[6] மாகே என்ற இயற்பெயருடன் பிறந்த செங்கேயிற்கு ஒரு மூத்த சகோதரனும் நான்கு சகோதரிகளும் இருந்தனர்.[7] அவர்கள் பிறப்பால் இஸ்லாமியர்கள்.

எனினும் இளம்வயதில் சமயத்தில் சமரசமான மனப்பாங்கு செங்கேயிற்கு இருந்ததாகத் தெரிகின்றது.[8] செங்கேயின் சில கல்வெட்டுக்களிலிருந்து, அவர் சீனத்துக் கடல் தேவதையான மசு மீது பெரும்பக்தி கொண்டிருந்தார் என்பதை அறியமுடிகின்றது.[9][10]

செங்கே, மங்கோலியப் பேரரசுக்குக் கீழே பணியாற்றிய பாரசிக ஆளுநர் ஒருவரின் வழித்தோன்றல் ஆவார். செங்கேயின் முப்பாட்டரான இப்பாரசிகர், யுவான் மரபின் ஆரம்பகாலத்தில் யுன்னான் பகுதியின் ஆளுநராகப் பதவியேற்றார்.[11][12] செங்கேயின் பாட்டனாருக்கு ஹாஜி எனும் பட்டமும் தந்தைக்கு மா எனும் குடும்பப்பெயரும் இருந்தது.[1][7][13]

எனவே செங்கேயின் தந்தையும் பாட்டனும் வெற்றிகரமாக ஹஜ் யாத்திரையை முடித்தவர்கள் என்பதை ஊகிக்கலாம்.[1][7][13] 1381இல் மிங் அரசின் படை யுன்னான் மீது படையெடுத்ததுடன், அப்போது யுன்னானை ஆண்ட பசலவர்மி எனும் மொங்கோலிய இளவரசனையும் வென்றது. இப்போரில் மொங்கோலியருக்கு ஆதரவாகப் போரிட்ட செங்கேயின் தந்தை இறந்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்தேழு என்றும் செங்கேக்கு வயது பத்து என்றும் சொல்லப்படுகின்றது.[14]

காழ்கடிதல்

யொங்கல் பேரரசர் முன்னிலையில் பந்துவிளையாடும் காழ்கடிஞர்கள்

யுன்னான் மீதான படையெடுப்பில், மிங் படைகளால் சிறுவன் செங்கேயும் சிறைப் பிடிக்கப்பட்டான். மிங் இளவரசன் சூ டியின் (Zhu Di) அந்தப்புர ஊழியத்துக்காக அனுப்பப்பட்ட செங்கேக்கு அக்கால வழக்கப்படி காழ்கடிதல் (விதைநீக்கம்) செய்யப்பட்டது.[15]

சூடி இளவரசனுக்கு அந்தப்புர ஊழியம் செய்த காலத்தில், செங்கே பெற்ற கல்வியே அவன் திறமைகளுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப் படுகின்றது. இக்காலத்தில் செங்கேக்கு சூட்டப்பட்டிருந்த சென் போ என்ற பெயர், சீனமொழியில், பௌத்தத்தின் மும்மணிகளைக் குறிக்கும்.[16]

யுன்னான் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட செங்கே, அப்போதைய தலைநகர் நான்ஜிங்கிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால், காழ்கடிஞர்களை கல்வியறிவு அற்றவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்ற சீனச் சக்கரவர்த்தியின் கொள்கையால் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பான்.[17]

இளவரசன் சூடி, அப்போது பீபிங்கை (எதிர்கால பெய்ஜிங்) ஆண்டுவந்தான். மொங்கோலியப்படைகளுக்கு எதிராக பீபிங்கின் வடக்கு எல்லையில் நின்ற மிங் படைகளுடன் இணைந்து கொண்ட செங்கே, இளவரசன் சூடியுடன் இணைந்து பெரும்பாலான போர்களிலும் ஈடுபட்டான்.

1390-இல் இடம்பெற்ற மொங்கோலியருக்கு எதிரான போர் ஒன்றில் முதன்முதலாகத் தளபதியாகப் பங்கேற்ற செங்கே, அப்போரில் சீனப் படைகளுக்கு வெற்றியை ஈட்டித் தந்ததுடன், மொங்கோலியத் தளபதி நகாச்சுவை சரணடையச் செய்து இளவரசனின் பெரும் நம்பிக்கையையும் சம்பாதித்துக் கொண்டான்.[18]

இளமைக்காலம்

செங்கே, இளவரசன் சூடியின் நம்பிக்கைக்குரியவனாக விளங்கினான். இச்சூடியே பின்பு யொங்கல் பேரரசர் என்று பரவலாக அறியப்பட்டார். (1402 - 1424)

செங்கேயின் வாலிபத்தோற்றம், சீனக்குறிப்புகளில் பதிவாகி இருக்கின்றது. அகன்ற இடுப்பும், உயர்ந்த தோளும், மேடான நெற்றியும் சிறிய மூக்கும் மணி போன்ற கார்வையான குரலும் என்று இளைஞன் செங்கே வருணிக்கப் படுகின்றான்.[19] அப்போது மிக இக்கட்டான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருந்த சூடிக்கு அரசுசூழ்தலில் உதவியதால் செங்கேயால், சூடியின் நம்பிக்கைக்குரிய அரச ஆலோசகனாக உயர வாய்ப்புக் கிட்டியது.[20] அப்போது சீனத்தில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் சுவையான வரலாற்றுச் சம்பவமாக சொல்லப்படுகின்றது.

மிங் அரசமரபின் முடிக்குரிய இளவரசனான சூடியின் மூத்த தமையன் 1393இல் இறக்க, அவனது மகன் அடுத்த அரசனாக அறிவிக்கப்பட்டான்.[20] 1398இல் சூடியின் தந்தை கொங்வூ சக்கரவர்த்தி மாண்டுபோக, முன்பு அரசனாக அறிவிக்கப்பட்ட சூடியின் பெறாமகன் நாஞ்சிங் அரசின் அரியணையில் அமர்ந்தான்.

ஆனால், அவனால் அதேயாண்டில் வெளியிடப்பட்ட க்சியோபேன் அல்லது "சிற்றரசுகளின் அதிகாரத்தைக் குறைத்தல்" எனும் அறிக்கை, சூடிக்கு பெருங்கோபத்தை உண்டாக்கியது. பீபிங்கிலிருந்து சிற்றரசுக்குரிய அதிகாரங்களுடன் ஆண்டுவந்த சூடி, 1399இல் தன் பெறாமகனுக்கெதிராக பெரும் கிளர்ச்சி செய்தான்.[21] பீபிங்கில் இருந்த செங்லுன்பா ஏரிக்கருகே கிளர்ச்சியை அடக்க வந்த படைகளை முன்னேறாமல் தடுப்பதில், செங்கே, சூடிக்கு பக்கபலமாக இருந்தான்.[22][23]

சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அதாவது 1402இல் மிங் அரசமரபின் மாபெரும் தலைநகராக விளங்கிய நாஞ்ஜிங் மீது படையெடுத்துச் சென்ற சூடி, செங்கேயின் உதவியுடன் அதைக் கைப்பற்றி[24], யொங்கல் பேரரசனாக முடிசூடிக்கொண்டான்.

முடிசூடிக்கொண்டதுமே, செங்கேயை, மாளிகைப் பணியாளர்களின் தலைமையதிகாரியாக (சீனத்தில் தைஜியன் - Taijian) பதவியுயர்த்திய சூடியின் செயல், செங்கே மீது அவன் கொண்டுள்ள பெருமதிப்புக்கு சான்றாகின்றது.[25] அதுவரை தந்தையின் பெயருடன் மா கே என்றே அறியப்பட்ட செங்கே, 1404ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சீனப் புத்தாண்டு அன்று, செங்லுன்பா ஏரிக்கரையில் செங்கே தனக்குச் செய்த பேருதவியை நினைவுகூர்ந்து, பேரரசன் சூடியால் "செங்" எனும் பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டான்.[22][26]

தொடர்ச்சியாகப் பதவியுயர்வுகளைப் பெற்ற செங்கே, பின் அரசவைத் தூதனாகப் பதவியுயர்வு பெற்றதுடன், மிங்கலின் கடற்படையிலும் இணைந்துகொண்டான். அடுத்த மூன்று பத்தாண்டுகளில், பெரும் கடற்பயணங்களை அவன் மேற்கொண்டதுடன், கிழக்கு பசுபிக் மற்றும் இந்தியக் கடல்களில் சீனப்பேரரசின் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக்கொண்டான்.

1424இல் இந்தோனேசியாவின் பலெம்பாங் நகரிற்குச் சென்ற செங்கே, மீண்டும் சீனம் திரும்பியபோது, யொங்கல் சக்கரவர்த்தி சூடி இறந்துவிட்டதை அறிந்தார்.[27] யொங்கல் சக்கரவர்த்தியின் மறைவுக்குப் பின்னர், சூடியின் மகன் ‘’கொங்சி சக்கரவர்த்தி’’ என்ற பெயரில் ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தான்.

சீனக்கடல் பயணங்கள் அவன் காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டதோடு, செங்கே, பேரரசின் தெற்குத் தலைநகரான நான்ஜிங்கின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். நான்ஜிங்கின் புகழ்பெற்ற பீங்கான் கோபுரம் அப்போது தான் அவரால் கட்டப்பட்டது.

மரணம்

நாஞ்சிங்கிலுள்ள செங்கேயின் கல்லறை.

1430இல் புதிதாக ஆட்சிக்கு வந்த சுவாண்டே சக்கரவர்த்தி, செங்கேயின் ஏழாவதும் இறுதியுமான கடற்பயணத்தை மேற்கொள்வதற்குப் பணித்தார். இப்பயணத்தில் செங்கேக்கு ‘’சென்போ தைஜான்’’ என்ற பெயர் அரசால் வழங்கப்பட்டிருந்தது.[28]

இப்பயணத்திலிருந்து திரும்பி சிலநாட்களின் பின் 1433இல் செங்கே இறந்ததாகவும், நான்ஜிங்கில் பாதுகாவலராகத் தொடர்ந்து பணியாற்றியபோது 1435இல் மரித்ததாகவும், அவரது மறைவு பற்றி இருவேறுகருத்துக்கள் நிலவுகின்றன.[29].[30] செங்கே இறுதிக்கடற்பயணத்தின் போதே இறந்துவிட்டதாகவும், அவரது பிணம் மலபார் கடலில் இடப்பட்டதாகவும் கூட சொல்லப்படுகின்றது.[31][32]

நான்ஜிங்கில் செங்கேக்காக, குதிரைலாட வடிவில் கல்லறை ஒன்று அமைக்கப்பட்டது. வரலாற்றாய்வாளர்கள் இது செங்கேயின் ஆடைகளையும் தலைக்கவசத்தையும் வைத்துக் கட்டப்பட்ட ஒரு வெறுங்கல்லறை என்றே கருதுகின்றனர். .[33] இக்கல்லறையானது இஸ்லாமியபண்பாட்டிற்கு அமைவாக 1985இல் மீளக்கட்டப்பட்டது. .[33]

கடற்பயணங்கள்

செங்கேயின் கடற்படை பயணித்த நாடுகளும் சென்ற கடற்பாதையும்

பொ.பி 14ஆம் நூற்றாண்டில் சீன – அராபிய வர்த்தக உறவைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்த யுவான் அரசமரபு, 1405இற்கும் 1433இற்கும் இடையில் ஏழு கடற்பயணங்களை நடாத்தியிருந்தது.

யொங்கல் சக்கரவர்த்தி, இந்தியப் பெருங்கடலில் சீனத்தின் ஆதிக்கம் நிலைநிற்கவேண்டும் என்பதில் பெருத்த ஆர்வத்துடன் இருந்தார். அவருக்கு முன் ஆட்சியிலிருந்த அவர் பெறாமகன் யியான்வென் சக்கரவர்த்தி, மாறுவேடத்தில் தப்பியோடிவிட்டதாக பரவியிருந்த வதந்தியும், செங்கே தலைமையில் இக்கடற்பயணங்களை நடாத்துவிக்க அவரைத் தூண்டியதாக மிங் அரசமரபின் வரலாற்றுப்பதிவுகள் சொல்கின்றன.[34]

செங்கேயின் முதலாவது கடற்பயணம் ‘’சீனவரலாற்றிலேயே நீர்ப்பாதையில் நிகழ்ந்த மிகப்பெரிய தேடுதல்வேட்டை’’ என்று வர்ணிக்கப்பட்டிருக்கின்றது.[35]இக்கடற் பயணங்களுக்காக மிகத்தீவிரமான ஏற்பாடுகள் நாஞ்சிங்கில் இடம்பெற்றன. பல்மொழி வல்லவர்கள் நாஞ்சிங்கிற்கு அழைத்துவரப்பட்டு, பயிற்சிவகுப்புகள் நிகழ்த்தப்பட்டன.[34] இவ்வேற்பாடுகளின் பின் 1405 யூலை 11ஆம் திகதி, செங்கேயின் முதலாவது கடற்பயணம், இருபத்தெட்டாயிரம் படைவீரர்களுடன்[36] சுசோவில் ஆரம்பமானது.[37]

செங்கேயால் சீனாவுக்குக் கொணரப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் ஓவியம்.[38]

புரூணை, சாவகம், தாய்லாந்து, தென்கிழக்காசியா, இந்தியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, அராபியத் தீபகற்பம் முதலான இடங்களுக்குச் சென்ற செங்கேயின் கப்பற்படைகள் பெருமளவு திறைச்செல்வங்களையும் பெற்றுக்கொண்டன.[39]

கைமாறாக, தங்கள், வெள்ளி, பீங்கான், பட்டு, போன்றவற்றை செங்கே அந்நாடுகளுக்குப் பரிசளித்தார். கிழக்காபிரிக்கக் கரையில் சீனாவுக்குக் கிடைத்த திறைச்செல்வங்களில், தீக்கோழிகள், வரிக்குதிரைகள், ஒட்டகம், யானைத் தந்தம் என்பன குறிப்பிடத்தக்கன.[40]:206

கென்யாவிலிருந்து அவர் பரிசாகக் கொணர்ந்த ஒட்டகச்சிவிங்கியை அதுவரை காணாத சீனமக்கள், அதைச் சீனத்தொன்மங்கள் குறிப்பிடுகின்ற ‘’குயிலின்’’ எனும் விலங்காக இனங்கண்டுகொண்டதுடன், அது சீனாவை வந்தடைந்தது, மிங் அரசருக்கு இறைவன் அளித்த அங்கீகாரம் என்றும் நம்பிக்கைகொண்டனர்.[41]

செங்கே தனது இலக்குகளை பண்ணுறவாண்மை மூலமே பெரும்பாலும் அடைந்துகொள்ளமுயன்றார். எதிர்ப்பவர்கள் அவரது பெரும்படையைக் கண்டு, அச்சங்கொண்டனர். எனினும் சீனாவின் இராணுவபலத்தை நிரூபிக்க விழைந்த செங்கே தேவையான சந்தர்ப்பங்களில் வன்முறையில் இறங்கத் தயங்கவில்லை என்றே தெரிகின்றது.[42]

சீன மற்றும் தென்கிழக்குக் கடலில் பெரும் சிக்கலாக இருந்த கடற்கொள்ளையரின் கொட்டத்தை மிகக்கொடூரமாக அவர் ஒடுக்கினார். சென் சுயி என்ற மிகப்பலம்வாய்ந்த கடற்கொள்ளையர் தலைவனைச் சிறைப்பிடித்து மரணதண்டனைக்காக அவர் சீனாவுக்கு அனுப்பியது அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று.[43] இலங்கையின் கோட்டை இராச்சியம் மீது அவர் மேற்கொண்ட தரைவழிப்போரும், அவரது கடற்படையை மூர்க்கமாக எதிர்த்த அரேபிய மற்றும் கிழக்காபிரிக்கப் படைகளுக்கு அவர் விளைவித்த அச்சுறுத்தலும் இன்னொரு விதத்தில் முக்கியமானவை.[44] யொங்கல் சக்கரவர்த்தியின் பேரன் சுவாண்டே சக்கரவர்த்தியின் ஆட்சிக்காலத்துடன் (1426 – 1435) சீனத்தின் பெருங்கடற்பயணங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.

கடற்பயணங்கள்காலம்சென்ற இடங்கள்
முதலாவது1405–1407[45]சம்பா[45] சாவகம்,[45] பலெம்பாங், மலாக்கா,[45] இலமூரி,[45] இலங்கை,[45] கொல்லம்,[45] கொச்சி, கோழிக்கோடு[45]
இரண்டாவது1407–1409[45]சம்பா, சாவகம்,[45] தாய்லாந்து,[45] Cochin,[45] இலங்கை, கோழிக்கோடு[45]
மூன்றாவது1409–1411[45]சம்பா[45] சாவகம்[45] மலாக்கா[45] இலங்கை,[45] கொல்லம்,[45] கொச்சி[45] கோழிக்கோடு,[45] Siam,[45] இலாமூரி, காயல்,
நான்காவது1413–1415[45]சம்பா[45] Kelantan,[45] சாவகம்,[45] பலெம்பாங்[45] மலாக்கா[45] இலங்கை[45] கொச்சி[45] கோழிக்கோடு[45] காயல், மாலைத்தீவுகள்,[45] முக்தீசூ, ஏடன்,[45] மஸ்கத்
ஐந்தாவது1417–1419[45]சம்பா, சாவகம், மலாக்கா, வங்காளம், இலங்கை, கொச்சி, கோழிக்கோடு, மாலைத்தீவுகள்,[46] கிழக்காபிரிக்கா
ஆறாவது1421–1422சம்பா, வங்காளம்,[45] இலங்கை, கோழிக்கோடு, கொச்சி, மாலைத்தீவு, அரேபியா, கிழக்காபிரிக்கா
ஏழாவது1430–1433சம்பா, பலெம்பாங், மாலைத்தீவு, அந்தமான் நிக்கோபார், வங்காளம், இலங்கை, கோழிக்கோடு, இலக்கத்தீவுகள், மெக்கா,

கப்பற்படை

செங்கேயின் கடற்படை மாதிரி உருவகம்.

செங்கேயின் 1405ஆமாண்டு கடற்பயணத்தில் இருபத்தெட்டாயிரம் படைவீரரும், அறுபத்திரண்டு திறைசேர் கப்பல்களும், 190 நாவாய்களும் பங்கெடுத்திருந்தன.[47][48]

அவற்றில் புரவிக்கப்பல்கள், சரக்குக்கப்பல்கள், போர்க்கப்பல்கள், ரோந்துப்படகுகள், தண்ணீர்த்தாங்கிகள் என்பனவும் அடங்கியிருந்தன. பயணிகளில் வைத்தியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், குறிப்பெழுதிகள், கப்பல் பணியாளர்கள், வழிகாட்டிகள் என்போரும் இருந்தனர். செங்கேயின் கப்பல்கள் வடிவமைப்பிலும் கொள்ளளவிலும் மிகப்பிரமாண்டமாக அமைந்திருந்ததாக அதை நேரில் கண்டு குறிப்பிட்டுள்ள வரலாற்றாளர்கள் பதிவுசெய்துள்ளனர்.

ஒரு மோகுன் வரைபடம். இடது மேல்மூலையில் இந்தியாவும் வலது மேல்மூலையில் இலங்கையும், கீழ்ப்பகுதியில் ஆபிரிக்காவும் காணப்படுகின்றன.

இப்பயணத்துக்காக, செங்கேயின் கப்பல்கள் பயன்படுத்திய உலக வரைபடங்கள், "மோகுன் வரைபடங்கள்" (Mao kun maps) என்று அழைக்கப்பட்டன. இவை ஒரு 1621 புத்தகமொன்றில் வெளியிடப்பட்டன.[49] நாஞ்சிங்கிலிருந்து ஆபிரிக்கக்கரை வரையான பெரும்பகுதியை நாற்பது பக்கங்களில் இவ்வரைபடங்கள் குறிப்பிட்டிருந்தன.[50]

இலங்கை, தென்னிந்தியா, மாலைத்தீவுகள் உள்ளிட்ட இவற்றிலுள்ள வரைபடங்கள், கடல் நீரோட்டங்கள், காற்றுவளம் என்பவற்றைக் கருத்தில் கொண்டவையாக வெவ்வேறு கோணங்களில் வரையப்பட்டு விளங்குகின்றன. இலங்கையில் காணப்படுபவை உள்ளிட்ட முந்நூறுக்கும் மேற்பட்டமுக்கியமான வளைகுடாக்கள், களப்புகள், கடல்முனைகள், கரையோரக்கோயில்கள் என்பன இவ்வரைபடங்களில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இலங்கை

இலங்கையின் தேனவரை நாயனார் கோயிலில் செங்கேயால் அளிக்கப்பட்ட தானங்களைச் சொல்லும் காலி மும்மொழி கல்வெட்டு, 1911இல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது கொழும்பு தேசிய நூதனசாலையில் பேணப்படுகின்றது. சீனம், பாரசீகம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது இக்கல்வெட்டு.

இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட அதே ஆண்டிலேயே கோட்டை இராச்சியத்தை ஆண்ட மன்னன் அழகக்கோனுடன் செங்கேக்கு முரண்பாடு ஏற்பட்டிருக்கவேண்டும். கொழும்புக்கரையில் சீனப்படைகளுக்கும் சிங்களப்படைகளுக்கும் இடையே நடந்த போரில் அழகக்கோன் சிறைப்பிடிக்கப்பட்டு சீனாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அவனை மிங் சக்கரவர்த்தி மன்னித்து அடுத்த ஆண்டே மீளவும் இலங்கைக்கு அனுப்பியதாக சீன வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.[51][52][53]

மேலும் காண

அடிக்குறிப்புகள்

உசாத்துணைகள்

பன்னாட்டுத் தர தொடர் எண் 1833-8461. Published by the China Heritage Project of The Australian National University.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
செங் கே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செங்_கே&oldid=3859790" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை