வாற்கோதுமை

வாற்கோதுமை
பார்லி வயல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
நிலைத்திணை
பிரிவு:
பூக்கும் நிலைத்திணை
வகுப்பு:
இலிலியோப்சிடா
வரிசை:
போலெசு
குடும்பம்:
போவோசியே
பேரினம்:
ஓர்டியம்
இனம்:
ஓர்டியம் வல்கரே
இருசொற் பெயரீடு
ஓர்டியம் வல்கரே
வாற்கோதுமை

வாற்கோதுமை அல்லது பார்லி[1] (Barley, Hordeum vulgare) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். உருசியா, கனடா போன்றவை பார்லி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 2007ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்படி உலகில் அதிகமாக பயிர்விக்கப்படும் ஐந்தாவது தானியமாக வாற்கோதுமை இருந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இதன் பயிர்க்கொள்ளளவு பதிமூன்று கோடியே அறுபது இலட்சம் தொன்களாகும்.[2]

உயிரியல்

வாற்கோதுமை
வாற்கோதுமை தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

வாற்கோதுமை புல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தன் மகரந்தைச் சேர்கை செய்யக்கூடிய இத்தாவர இருமய உயிரணுவில் 14 நிறமூர்த்தங்கள் (chromosomes) காணப்படுகின்றன. தற்போது உணவுப் பயன்பாட்டிற்காக விளைவிக்கப்படும் வாற்கோதுமை (Hordeum vulgare) அதன் காட்டு மூதாதையரான ஸ்பொண்டனியத்தின் (spontaneum) துணைபிரிவினம் ஆகும். இது பரவலாக மேற்கு ஆசியா மற்றும் வடகிழக்கு ஆபிரிக்காவின் வளமான செழிப்பு பகுதி முழுவதும் புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் ஏராளமாக வளர்கின்றன [3]. மேலும் நெரிசலான வாழ்விடங்கள், சாலைகள் மற்றும் பழத்தோட்டங்களில் கூட சாதாரனமாக வளர்கின்றன. இருப்பினும், மரபணு பரவல் மற்றும் பன்முகத்தன்மையை குறித்த ஒரு ஆய்வில், திபெத் பயிரிடப்பட்ட வாற்கோதுமையின் கூடுதல் மையமாகக் கண்டறியப்பட்டது [4]

மனிதப் பயன்பாடு

வனங்களில் காணப்பட்ட வாற்கோதுமையில் எளிதில் உடையக்கூடிய நுனிவளர் பூந்துணர்கள் காணப்பட்டன. முதிர்ச்சியடையும்போது, அவற்றிலிருந்து சிதறும் சிறு பூக்கள் (spikelets) விதை பரவுதலுக்கு துணை புரிகின்றன. ஆனால் விளைவிக்கப்படும் வாற்கோதுமையில் எளிதில் உதிராத பூந்துணர்கள் காணப்படுகின்றன. இதனால் பயிர் முற்றியவுடன் எளிதாக அறுவடை செய்ய முடிகிறது. இந்த எளிதில் உதிராத தன்மை இத்தாவர நிறமூர்த்தத்தில் காணப்படும் இரண்டு பிணைந்த மரபணுக்களான Bt1 மற்றும் Bt2 ஆகியவற்றில் மரபணு திடீர்மாற்றம் அடைந்ததால் உண்டாக்கப்பட்ட பண்பாகும். அனேகமான பயிரிடும்வகைகளில் இரு மரபணுக்களிலும் இம்மாற்றம் காணப்பட்டது. இப்பண்பு மரபணுவின் ஒரு பின்னடைவான தன்மையுள்ளதாக இருப்பதனால், மாற்றுருக்கள் ஒத்தினக் கருவணு அல்லது சமநுகத்துக்குரியதாக (homozygous) இருக்கும் நிலைமையில் மட்டுமே வெளிப்படும்.

வரலாறு

பயிரிடப்படும் வாற்கோதுமை தற்போதும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் காட்டின வாற்கோதுமையிலிருந்து வழி வந்தது. இவ்விரு வகைகளுமே இருபடை மரபுத்தாங்கிகள் (2n=14 chromosomes; diploid) கொண்டவை. கலப்பினம் செய்யின் எல்லா வகை வாற்கோதுமை தாவரங்களுமே வளரும் விதை கொடுக்கும் தன்மை உள்ளனவாய் இருப்பதால், இவ்வெல்லா வகைகளும் ஒரே சிற்றினத்தை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன. பயிரடப்படும் வாற்கோதுமைக்கும் காட்டின வாற்கோதுமைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் பூங்கொத்துக்காம்பு தான். காட்டின வாற்கோதுமையின் பூங்கொத்துக்காம்பு எளிதில் உடையக்கூடியது அதன் சுய விருத்திக்கு உதவும் வகையில் அமைகிறது. வாற்கோதுமை பற்றிய முதல் ஆதாரங்கள் பழங்கற்கால லெவான்ட் பகுதியின் நட்டுஃபியன் கலாசார எச்சங்களில் கானப்படுகின்றன. பயிரடப்பட்ட வாற்கோதுமையின் எச்சப்படிமங்கள் சிரியாவிலுள்ள பழங்கற்காலத்தின் டெல் அபு குரெஇராவில் காணப்பட்டன. வாற்கோதுமையும் கோதுமையும் சம காலகட்டத்தில் பயிர் செய்யத் துவங்கப்பட்டதாகத் தெரிகிறது.

பூமியின் பண்டைய மற்றும் முக்கிய அரும்பரிசாகக் கருதப்பட்டதால் வாற்கோதுமைக்கு, எலூசீனிய மர்மங்களின் ஆரம்ப நிலைகளிலிருந்து மதக்கலாசார முக்கியத்துவம் காணப்பட்டிருந்தது. இம்மர்மங்களின் கடவுளான டெமெட்டரின் வழிபாட்டு பாடல்களில் காணப்படும் கைகியான் எனப்படும் பானகம், வாற்கோதுமை மற்றும் மூலிகைகள் கலந்து செய்யப் பட்டதாகும். குறிப்பாக டெமெட்டெர் "வாற்கோதுமைத்தாய்" என்றும் அழைக்கப்பட்டார்.

வாற்கோதுமை மணிகளை வறுத்து கூழ் காய்ச்சுவது கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டதாக கையஸ் ப்லினியுஸ் செகுன்டஸின் "இயற்கை வரலாறு" தெரிவிக்கிறது. இம்முளைக்கூழ் நுண்ணுயிர் பகுப்பு மூலமாக சற்றே சாராயமுள்ள பானமாகிறது.

இரகங்கள்

மேற்கு ஆசியாவிலும் வடகிழக்கு ஆப்ரிக்காவிலும் காட்டு வாற்கோதுமை வகை அதிகமாக விளைகிறது. உலகின் மற்ற பகுதிகளில் இந்த வாற்கோதுமை அதிகமாக விளைவதில்லை.[3] திபெத்து நாட்டில் வாற்கோதுமை வீட்டுத் தானியமாக விளைவிக்கப்படுகிறது.[5] மேலும் பயிரிடப்படும் வாற்கோதுமை இரகங்களை முன்பனிக்கால வகைகள், வசந்தகால வகைகள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றுடன் கரடி என்றழைக்கப்படும் ஒரு மூலமறியப்படாத இரகத்தையும் சேர்க்கலாம். இந்த இரகம் மற்ற இரு இரகங்கள் அளவே மகசூல் கொடுப்பினும் குறைவான குண நலங்களே பெற்றுள்ளது. முன்பனிக்கால இரகம் கோதுமை போலவும், வசந்த கால இரகம் ஓட் போலவும் பயிரிடப்படுகின்றன. பிரிட்டனில் முன் காலத்தில் வாற்கோதுமை கோடைத்தரிசு நிலங்களில் பல்வேறு பெயர்களுடன் பயிரடப் பட்டு வந்தது.

வசந்தகால வாற்கோதுமை பயிரிட சிறந்த பருவம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களாகும் (பின் மாசி முதல் முன் சித்திரை வரை). இருப்பினும், மிகத்தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களும் நல்ல மகசூல் தந்துள்ளன.

வாற்கோதுமை சிற்றினங்கள் பூங்கொத்தின் மணி வரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் பிரிக்கப் பட்டுள்ளன. இரு வரிசை வாற்கோதுமை (Hordeum distichum), நால் வரிசை வாற்கோதுமை (Hordeum tetrastichum) மற்றும் அறு வரிசை வாற்கோதுமை (Hordeum vulgare) என இவை தொன்றுதொட்டு அறியப்பட்டுள்ளன. இவ்வெல்லா சிற்றினஙளிலும் பாதி எண்ணிக்கை மலர்களே விருத்தி செய்யும் தகுதி படைத்தவையாய் உள்ளன. தற்கால வாற்கோதுமை பெரும்பாலும் Hordeum vulgare சிற்றினமாகும்.

இவற்றுள் இரு வரிசை வாற்கோதுமை மிகப் பழமையானது; காட்டின வாற்கோதுமை வகைகள் இருவரிசை வாற்கோதுமையாகவே காணப்படுகின்றன. இரு வரிசை வாற்கோதுமை அறுவரிசை வாற்கோதுமையை விடக் குறைவான புரதமும், அதிக உருமாற்றப்புரதக்காரணியும் (enzyme) கொண்டுள்ளது. அறுவரிசை வாற்கோதுமை தீவனமாகவும், பிற பொருள் கலந்த முளைக்கூழ் உருவாக்கவும் உகந்ததாகும். இரு வரிசை வாற்கோதுமை தூய முளைக்கூழ் உருவாக்க உகந்ததாகும். நால் வரிசை வாற்கோதுமை நுண்ணுயிர் பகுப்புக்கு உகந்ததல்ல.[6] தற்கால மரபின ஆய்வு இருவரிசை வாற்கோதுமையில் மியூட்டேசன் நடப்பதால் அவை ஆறு வரிசை வாற்கோதுமையாக மாறுவதாக காட்டுகின்றன.[7]

மேலும், தீட்டப்பட வேண்டிய (கூடுள்ள) மற்றும் கூடற்ற வாற்கோதுமை எனவும் பார்லியை வகைப்படுத்தலாம். இவற்றுள் கூடுள்ள வகைகள் தொன்மையானவை.

உற்பத்தி

2005ம் ஆண்டின் வாற்கோதுமை விளைநிலவரம். தலை நகரங்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள புள்ளிகள், பார்லியின் விளைநிலப் பரப்புகளைக் குறிப்பதல்ல அந்நாட்டினைக் குறிப்பதாகும்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வழங்கிய வாற்கோதுமை விளைச்சல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:[8].

அதிகளவில் வாற்கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகள்

2014 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 144 மில்லியன் டன் வாற்கோதுமை உற்கத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் உருசிய நாட்டின் பங்கு மட்டும் 14 சதவீதமாகும். அட்டவணையில் இரண்டு மற்றும் மூன்றாமிடத்தில் முறையே பிரான்சு மற்றும் செருமனி ஆகிய நாடுகள் உள்ளன.

2014 ல் அதிக வாற்கோதுமை உற்பத்தி நாடுகள்
நாடுகள் உற்பத்தி (millions of tonnes)
 உருசியா
20.4
 பிரான்ஸ்
11.7
 இடாய்ச்சுலாந்து
11.6
 உக்ரைன்
9.0
 கனடா
7.1
 ஸ்பெயின்
7.0
 ஐக்கிய இராச்சியம்
6.9
 துருக்கி
6.3
உலகம்
144.5
ஆதாரம்: FAOSTAT ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மைக்கான புள்ளியல் ஆய்வறிக்கை 2014 [9]


2010ம் ஆண்டின்படி 1,000,000 டன்களுக்கு மேல் வாற்கோதுமை உற்பத்தி செய்த நாடுகள்

தரவரிசைநாடுகள்வாற்கோதுமை விளைச்சல்
(டன் அளவுகளில்)
1  செருமனி10412100
2  பிரான்சு10102000
3  உக்ரைன்8484900
4  உருசியா8350020
5  எசுப்பானியா8156500
6  கனடா7605300
7  ஆஸ்திரேலியா7294000
8  துருக்கி7240000
9  ஐக்கிய இராச்சியம்5252000
10  அமெரிக்க ஐக்கிய நாடு3924870
11  போலந்து3533000
12  ஈரான்3209590
13  அர்ச்சென்டினா2983050
14  டென்மார்க்2981300
15  மொரோக்கோ2566450
16  சீன மக்கள் குடியரசு2520000
17  பெலருஸ்1966460
18  இந்தியா1600000
19  செக் குடியரசு1584500
20  அல்சீரியா1500000
20  அல்சீரியா1500000
21  எதியோப்பியா1400000
22  பின்லாந்து1340200
23  கசக்ஸ்தான்1312800
24  உருமேனியா1311040
25  சுவீடன்1228100
26  அயர்லாந்து1223000
27  ஈராக்1137170

வேதியியல்

வாற்கோதுமையில் (H. vulgare) பீனாலிக் காபிக் அமிலம் (phenolics caffeic acid) மற்றும் பீனாலிக் கவுமாரிக் அமிலம் ( p-coumaric acid), பெரூலிக் அமிரம் (the ferulic acid), 8, 5' டிபிருலிக் அமிலம் (8,5'-diferulic acid) , பிளேவினாய்டு கேட்டச்சின்-7-0-குளுகோசைடு (flavonoids catechin-7-O-glucoside) [10] , சபோனாரின் (saponarin),[11] கேட்டச்சின் catechin, புரோசயனடின் பி3 procyanidin B3, புரோசயனடின் சி2 ( procyanidin C2), மற்றும் புரோடெல்பினிடின் பி3 (prodelphinidin B3) , மற்றும் காரப்போலி ஹோர்டீனின் ( alkaloid hordenine) ஆகிய வேதிய பொருட்கள் உள்ளன.

பயன்கள்

வாற்கோதுமை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான உணவு தானியமாகும். வாற்கோதுமை உவர்மண்ணில் கோதுமையைக் காட்டிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. இதனாலேயே கி.மு இரண்டாயிரத்தில் மெசபடோமியாவில் வாற்கோதுமை பயிரிடுதல் அதிகரித்திருக்கலாம். அதே போல ரை பயிரைக்கட்டிலும் அதிக குளிர் தாங்கும் சக்தியும் வாற்கோதுமைக்கு உண்டு.

வாற்கோதுமை முளைக்கூழ் பியர் மற்றும் விஸ்கி தயாரிப்பில் ஒரு முக்கிய இடுபொருளாகும்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வாற்கோதுமை&oldid=3900296" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை