இலத்தீன் அமெரிக்கா

இலத்தீன் அமெரிக்கா (Latin America, எசுப்பானியம்: América Latina or Latinoamérica, போர்த்துக்கேயம்: América Latina, பிரெஞ்சு: Amérique latine, இடாய்ச்சு: Latijns-Amerika) எனப்படுவது அமெரிக்க கண்டங்களில் உள்ள ரோமானிய மொழிகள் வழக்கத்தில் இருக்கும் பகுதிகளை குறிப்பதாகும். எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் பிரெஞ்ச் ஆகியவை இங்கு அதிக அளவில் பேசப்படுகின்றன[3][4]. இதன் மொத்த பரப்பு ஏறேக்குறைய 21,069,500 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இது மொத்த புவியின் பரப்பில் 3.9 சதமும், நிலப்பரப்பின் அளவில் 14.1 சதமும் ஆகும். 2013 வரையிலான இதன் மக்கள் தொகை 59 கோடி ஆகும்[5]. மற்றும் இதன் கூட்டு உள்நாட்டு உற்பத்தி 7368 பில்லியன்[6].

இலத்தீன் அமெரிக்கா
பரப்பளவு21,069,501 km2 (8,134,980 sq mi)
மக்கள்தொகை589,018,078[1]
மக். அடர்த்தி27/km2 (70/sq mi)
மக்கள்இலத்தீன் அமெரிக்கர், அமெரிக்கர்
நாடுகள்19
சார்பு மண்டலங்கள்1
மொழிகள்எசுப்பானியம், போர்த்துக்கேயம், கெச்வா, மாயன், குவாரனி, பிரெஞ்சு, ஐமரா, நாகவற் மொழி, இத்தாலியம், செருமன், மற்றும் பல.
நேர வலயங்கள்UTC-2 முதல் UTC-8 வரை
மிகப்பெரிய நகரங்கள்[2]
1.மெக்சிக்கோ மெக்சிகோ நகரம்
2.பிரேசில் சாவோ பாவுலோ
3.அர்கெந்தீனா புவெனஸ் ஐரிஸ்
4.பிரேசில் ரியோ டி ஜனேரோ
5.கொலம்பியா பொகோட்டா
6.பெரு லிமா
7.சிலி சான்டியேகோ
8.வெனிசுவேலா கரகஸ்
9.பிரேசில் பெலோ ஒரிசோண்டே
10.மெக்சிக்கோ குவாடலசாரா

அர்செண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோசுடா ரிகா, கூபா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், எல் சால்வடோர், குவாத்தமாலா, எயித்தி, ஓண்டுரசு, மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பராகுவே, பெரு, உருகுவே மற்றும் வெனிசுலா ஆகியவை இலத்தீன் அமெரிக்காவின் பகுதிகலாக உள்ளன.

வரலாறு

காலனியாதிக்கத்தின் முந்தைய வரலாறு

மச்சு பிச்சு - இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம்.

இலத்தீன் அமெரிக்காவில் மனிதர்கள் வாழ்ததற்கான அடையாளங்களின் மிகவும் பழமையானவை, தெற்கு சிலி பகுதிகளில் கானக்கிடைக்கின்றன. இவை சுமார் 14000 வருடங்களுக்கு முந்தயவை. இதன் பிறகான முதல் குடியேற்றம் லாசு வேகாசு கலாச்சாரம் ஆகும்[7]. இது 8000 முதல் 4600 ஆண்டுகளுக்கு இடையில் ஈக்குவடார் நாட்டில் ஏற்பட்டது. தொடர்ந்து கொலம்பியா, பொலிவியா, பெரு ஆகிய நாடுகளிலும் பழங்குடிகளின் குடியேற்றங்கள் அமைந்தன.

பிற்பாடு இலத்தின் அமெரிக்க பகுதிகள் பல நாகரீக குழுக்கள் உருவாகின. ஆசுடெக்குகள், டால்டெக்குகள், கரீபியர், டூபி, மாயா மற்றும் இன்கா ஆகிய குழுக்கள் இவர்களின் முக்கியமானவர்கள். குறிப்பாக ஆசுடெக் மக்கள் இலத்தீன் அமெரிக்க பகுதிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்களின் ஆட்சி, அமெரிக்காவின் எசுப்பானியர்களின் வருகையோடு முடிவு பெற்றது.

ஐரோப்பிய காலனியாக்கம்

1492ல் கொலம்பசு அமெரிக்காவை அடைந்ததில் இருந்து, இலத்தீன் அமெரிக்காவின் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. எர்னான் கோட்டெஸ் தலைமையிலான எசுப்பானிய படை ஒன்று வட அமெரிக்க பகுதிகளில் இருந்த ஆசுடெக் நகரங்களை முற்றுகையிட்டு அழித்தனர். போலவே பிரான்சிஸ்கோ பிசாரோ தலைமையிலான படை ஒன்று தென் அமெரிக்க பகுதிகளில் இருந்த இன்கா பேரரசை கைப்பற்றி அழித்தது. இதன் மூலம் வடக்கு மற்றும் தென் மேற்கு அமெரிக்க பகுதிகள் எசுப்பானிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

மேலும் குடியேற்றங்களை உருவாக்குவதில், எசுப்பானியா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட பினக்குகளின் முடிவில், 1494ல் இரு காலனிகளுக்கு இடையிலான எல்லைக் கோடு தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம், இலத்தீன் அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு கரை பகுதிகள் எசுப்பானிய பேரரசின் கீழும், கிழக்குக் கரைப் பகுதி போர்த்துக்கலின் கீழும் கொண்டுவரப்பட்டன. இவர்களை தொடர்ந்து பிரித்தானியா, பிரான்சு மாற்றும் ஆலந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவை ஆக்கிரமித்து தமது குடியேற்றங்களை அங்கு உருவாக்கின. இதன் மூலம் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அலாசுகா முதல் சிலி வரை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளும் ஐரோப்பிய குடியேற்றங்களாக மாற்றப்பட்டன.

பழங்குடிகளின் அழிவு

தொடர் குடியேற்றங்களின் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் கலாச்சாரம் நசுக்கப்பட்டு, ஐரோப்பிய காலாச்சாரம் பரப்பட்டது. உரோமன் கத்தோலிக்கம் அறிவிக்கப்படாத அரசு சமயமானது. கத்தோலிக்க சபைகள் ஆட்சி அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவானதாக இருந்தன. இதன் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் சமய உரிமை மறுக்கப்பட்டு, கிருத்துவத்துக்கு மதம் மாற நிர்பந்திக்கப்பட்டனர். மேலும் ஐரோப்பியர்களின் மூலம் பரவிய பெரியம்மை மற்றும் தட்டம்மை போன்ற கொள்ளை நோய்களின் மூலம் மிகப்பெரும் அளவிலான பழங்குடிகள் மாண்டனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கைப் பற்றிய விபரங்கள் இன்றைக்கு சரிவர கிடைப்பதில்லை. இருப்பினும் மொத்த பழங்குடிகளின் மக்கள் தொகையில் 25% முதல் 85% வரை இறந்திருக்காலாம் என நம்பப்படுகின்றது.

மீதம் இருந்த பழங்குடிகளும் காலனியவாதிகளின் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட இனக்கலப்பின் மூலம் மெசுடொசோ எனப்பட்ட புதிய ஐரோப்பிய-அமெரிக்க கலப்பு இனம் தோன்றத்தொடங்கியது. காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பான்மையினராக மெசுடொசோக்களே இருந்தனர்.

விடுதலைப் போராட்டம்

சிமோன் பொலிவார் - இலத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவர்.

1804ல் எயித்தியில் டூசான் லூவர்சூர் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சியை தொடர்ந்து, அந்த நாடு பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்தது. தொடர்ந்து அந்த நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் சுதந்திர கூட்டாச்சி அமைக்கப்பட்டது. இது மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் தோன்ற தூண்டுதலாக இருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எசுப்பானிய மேலாதிக்கத்துக்கு எதிரான கலகங்கள் தோன்றத் தொடங்கின. தாய் நாட்டில் பிறந்த எசுப்பானியார்கள் உயர் சாதியினர் எனவும், இலத்தீன் அமெரிக்காவில் பிறந்த எசுப்பானியர்கள் கிரியோலோ அல்லது கீழ் சாதியினர் எனவும் பாகுபடுத்தப்பட்டனர். இது அங்கு விடுதலைப் போர் ஏற்பட தூண்டுகோலாக அமைந்தது. மிகுவேல் கோசுடிலா, சிமோன் பொலிவார், யோசே சான் மார்ட்டின் ஆகியோர் முறையே மெக்சிகோ, வெனிசுலா மற்றும் அர்சென்டினா ஆகிய பகுதிகளில் மக்களை திரட்டி விடுதலைப் போரில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் அரச படையினரால் மக்கள் எழுச்சி அடக்கப்பட்டாலும் சிமோன் பொலிவார், யோசே சான் மார்ட்டின் போன்ற இளந்தலைமுறை தளபதிகளால் மக்கள் போராட்டம் மேலும் வலுவடைந்தது. தொடர்ந்த எழுச்சிகளின் பலனாக 1825க்கும் உள்ளாகவே போர்டோ ரிகோ மற்றும் கூபா தவிர்த்த அனைத்து எசுப்பானிய காலனிய பகுதிகலும் விடுதலையடைந்தன. 1822ல் சுதந்தர பிரேசிலில் சட்டத்திற்குட்ட முடியாட்சி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டு மெக்சிகோவின் இராணுவ தளபதி அகசுடின் தி டுபைட் தலைமையில் முடியாட்சி அமைக்கப்பட்டது. இறுப்பினும் சிறிது காலத்திலேயே இது கலைக்கப்பட்டு 1823ல் மெக்சிகோ குடியரசு மலர்ந்தது.

மக்கள் பரம்பல்

இனக்குழுக்கள்

இலத்தீன் அமெரிக்கா பல்லின மக்கள் பரம்பலை கொண்ட ஒரு பிரதேசம். இந்த இனங்களின் பரவல் நாட்டுக்கு நாடு வேறுபடும். தாயக அமெரிக்கர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், மெசுடொசோக்கள் (ஐரோப்பிய-தாயக அமெரிக்கர்களின் கலப்பு இனம்), முலாட்டோக்கள் (ஐரோப்பிய-ஆப்பிரிக்கர்களின் கலப்பு இனம்), ஐரோப்பியர்கள் (குறிப்பாக எசுப்பானிய மற்றும் போர்த்துக்கேய நாட்டவர்) மற்றும் சாம்போக்கள் (தாயக அமெரிக்கர்கள்-ஆப்பிரிக்கர்களின் கலப்பு இனம்) ஆகிய இனங்கள் இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன.

மொழி

இலத்தீன் அமெரிக்க மொழி பரம்பல். பச்சை - எசுப்பானியம். காவி - போர்த்துகேயம். நீலம் - பிரெஞ்சு

எசுப்பானியம் மற்றும் போர்த்துக்கேயம் ஆகிய இரண்டும் இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகள் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 60% பேர் எசுப்பானிய மொழியையும், 34% பேர் போர்த்துக்கேய மொழியையும், 6% பேர் மற்ற மொழிகளான கெச்வா, மாயன், குவாரனி, ஐமரா, நாகவற் மொழி, ஆங்கிலம், இடாய்ச்சு, பிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழிகளை பேசுகின்றனர். போர்த்துக்கேய மொழி பிரேசில் நாட்டில் மட்டும் பேசப்படுகின்றது. அதைத் தவிர்த்த மற்ற அனைத்து இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியம் ஆட்சி மொழியாக உள்ளது. பிரெஞ்ச், எயித்தி மற்றும் கயானா ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது.

அமெரிக்க பழங்குடி மொழிகள் பெரு, குவாத்தமாலா, பொலிவியா, பராகுவே மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிக அளவில் பேசப்படுகின்றன. பனாமா, ஈகுவடார், பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, அர்செண்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பேசப்படும் இவை பிற நாடுகளில் மிகக் குறைந்த அளவே பேசப்படுகின்றன. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மெக்சிகோ, அதிக அளவில் பழங்குடி மொழி பேசுவோரைக் கொண்டுள்ளதாக உள்ளது. உருகுவே பழங்குடி மொழி வழக்கில் இல்லாத ஒரே இலத்தீன் அமெரிக்க நாடாகும்.

மதம்

கிறித்தவம், இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரும்பான்மையான மதம் ஆகும்[8]. இவர்களில் 70% பேர் உரோமன் கத்தோலிக்கர்கள். பிரேசில், பனாமா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் சீர்திருத்தத் திருச்சபை சீரான வளர்ச்சியை கொண்டுள்ளது. இதைத் தவிர்த்த பழங்குடியினர் நம்பிக்கை, யூதம், இசுலாம் போன்றவை சிறிய அளவு மக்களால் கடைபிடிக்கபடுகின்றது.

கலாச்சாரம்

இலத்தீன் அமெரிக்க கலாச்சாரம் என்பது அமெரிக்க பூர்வீக குடிகள், ஐரோப்பியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களின் காலாச்சார கலவை ஆகும். பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையில் பூர்வீக குடிகளின் முறைகளும், சமயம், கலை, ஓவியம் போன்றவற்றில் ஐரோப்பிய தாக்கமும் அதிகம். இசை, நடனம் ஆகியவவை ஆப்பிரிக்க கலாச்சாரத்தை ஒத்ததாக உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இலத்தீன்_அமெரிக்கா&oldid=3791514" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை